Tuesday, September 13, 2016
ஒரே மேடையில் 425 தமிழ் நூல்கள் வெளியீடு - உலக சாதனை
Thursday, May 27, 2010
வள்ளலார் கண்ட சமயநெறி: மதமயக்கு நீக்கும் நூல்

இதற்கு முற்றிலும் மாறாக, உண்மை சமயநெறியை அறிமுகப்படுத்தி, ஆன்மிக வழியில் வாழ்வை அமைத்துக்கொள்ள வழிகாட்டும் வகையில் மலேசியாவில் வந்திருக்கிறது ஒரு சிறிய நூல்; ஆனால், அரிய நூல்.
“வள்ளலார் கண்ட சமயநெறி” என்பது நூலின் பெயர். இதன் ஆசிரியர் மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தோற்றுநர் பாவலர் அ.பு.திருமாலனார். இவர் மிக இளமையிலேயே மெய்யறிவு சார்ந்த இறைமை ஈடுபாடும், பகுத்தறிவுச் சிந்தனையும் ஒருங்கே அமையப் பெற்றவர். திருவள்ளுவருக்குப் பிறகு, சித்தர் பெருமக்களுக்குப் பிறகு தமிழரின் சமயக் கொள்கையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் வள்ளற் பெருமான் இராமலிங்க சுவாமிகள். அதனாலேயே இவரைப் புரட்சித் துறவி என்றும் கூறுவர். வள்ளலார் மீது நூலாசிரியருக்கு இருந்த ஆழ்ந்த பற்றுதலே இந்நூல் உருவாகுவதற்கு காரணியாகும் எனலாம்.
தாம் வாழ்ந்த காலத்திலேயே, தமிழர் கண்ட மெய்ந்நெறி சமயத் தெளிவினை இன்றைய தமிழர்க்கு ஏற்படுத்திவிட வேண்டும் என்ற பேராவலால், தமிழர்ச் சமயக் கோட்பாடுகளை அராய்ந்து வெளிபடுத்த முற்பட்டார் பாவலர் ஐயா. அதற்காகவே, ‘தமிழர் சமயம்’ எனும் அரிய நூலினை எழுதி இதுவரை எவருமே தெளிவுபடுத்தாத பல உண்மைகளை வெளிப்படுத்த முற்பட்டார்.
அதற்கு முன்பதாக, வள்ளலார் கண்ட சமயநெறி, திருமூலர் கண்ட சமயநெறி, சித்தர் கண்ட சமயநெறி எனும் தலைப்புகளில் எழுதினார். அவற்றுள் ஒன்றுதான் இப்போது நூல்வடிவில் வந்திருக்கிறது.

‘ஆரியப் பார்ப்பன’ மேலாண்மையால் தமிழினம் சீரழிந்தது எனும் பெரியாரியல் உணர்வோடு முழு உடன்பாடு உடையவர் பாவலர். இருப்பினும், பார்ப்பன கொடும் பிடியிலிருந்து தமிழினத்தை விடுவித்து, அவ்விடுதலையை நிலைப்படுத்த தக்க வழிமுறைகளை காணவேண்டும் என்று சிந்தித்தார்.
திருமூலரின் ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ எனும் கோட்பாட்டைப் பெயரளவில் அல்லாமல், ஆழமாக ஆய்ந்து தமிழர் கண்ட மெய்யறிவியலை வெளிப்படுத்த முயன்றார்.
இந்தச் சிந்தனையின் அடிப்படையில், ஆரியப் பார்ப்பனக் கோட்பாட்டை அடித்துநொறுக்கும் வள்ளலாரின் சிந்தனைகளை ஆராய்ந்து பல உண்மைகளை இந்த நூலில் வெளிப்படையாக எழுதி உள்ளார்.
நூலின் தொடக்கத்திலேயே ‘சமயமும் மதமும்’ ஒன்றல்ல என்பதை உணர்த்தும் வகையில், அறிவின் இயல்புகளைம் உணர்வின் இயல்புகளையும் நுட்பமாக விளக்கியுள்ளார். தொடர்ந்து,
*வள்ளுவர் நெறியில் வள்ளலார்
*வள்ளலார் கண்ட அருள்நெறியும் மருள் நெறியும்
*இந்து பெயர் வரலாறும் – இந்து மதமும்
*இந்து மதம் மக்களின் பொது மதமாக இருக்கத் தகுதியற்றது
*நாத்திகம் எது?
*சாதியும் குறியீடுகளும்
-அறிவு மதம் அல்லது மெய்யறிஞர் சமயம்
*சவகர்லால் நேருவும் இந்து மதமும்
*ஒளி வழிபாடே உண்மை வழிபாடு
ஆகிய தலைப்புகளில் அரிய கருத்துகளை நுடபமாக விளக்கியுள்ளார். அறிவு தேடலோடு படிப்போருக்கு பல உண்மைகள் புரியும் வகையில் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்நூலை ஆழ்ந்து கற்பதன் வழியாக, தமிழரை மயக்கிய நெறி எது? தமிழர் பின்பற்ற வேண்டிய நெறி எது? என்பதைத் தெளிவாக உணரலாம்.
இந்த நூலினை வெளிப்படுத்துவதன் வழியாக, தமிழரிடையே ஊறிக்கிடக்கும் மதமயக்கு நீங்க வழிபிறக்கும் என நம்பலாம். மதவெறியர் சிலருக்கு இந்நூல் அதிர்ச்சியூட்டலாம். அவர்கள் அதிர்ச்சி அடைவார்கள் என்பதற்காக உண்மைகளை உரைக்காமல் இருக்க முடியாது.
தமிழரின் வீழ்ச்சிக்கு மதப்பித்து மிகப்பெரிய கரணியமாகும். இதிலிருந்து தமிழனை விடுவிக்க, தமிழும், தமிழின உணர்வும், திருக்குறள் நெறியுமே மிகச் சரியான கருவிகளாக அமையும். இந்த அடிப்படை உண்மையை உள்ளார்ந்து உணர்த்தும் வள்ளலாரின் உண்மை உள்ளத்தைத் தமிழர்க்குத் தெரிவிப்பதே இந்நூலின் நோக்கமாக இருக்கிறது.
நூலின் விலை: பத்து நிங்கிட் மட்டுமே (RM10.00)
நூல் கிடைக்குமிடம்: மலேசியத் தமிழ்நெறிக் கழகம், Lot.274, Kpg. Bendahara Baru, Jalan Sungai Tua, 68100 Batu Caves, Selangor. Tel: 016-3262479
Friday, September 25, 2009
இனிய தமிழ் ஏடு; இலவய இதழ் - புதிய உதயம்
நாட்டின் மூத்த ஊடகவியலாளரும் இப்போது மக்கள் ஓசை நாளிதழின் மூத்த செய்தியாளராகவும் இருக்கும் ஐயா எம்.துரைராஜ், வழக்கறிஞர் ஐயா பொன்முகம், திரு.தேவராஜ் முதலானோர் அன்றைய உதயம் இதழின் ஆசிரியர்களாக இருந்து பணியாற்றியவர்கள்.
அரசாங்கத்தின் கருத்துப் பரப்புரை ஏடாக இருந்ததோடு அல்லாமல், தமிழுக்கும் வளம் சேர்க்கும் வகையில் நல்லதோர் இலக்கிய ஏடாகவும் உதயம் வார்த்தெடுத்தப்பட்டது – வளர்த்தெடுக்கப்பட்டது.
ஏனோ தெரியவில்லை? என்ன காரணமோ புரியவில்லை? மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்த அந்த அருமை இதழ் நின்றுபோனது; அது பரப்பிய செந்தமிழ் மணம் மறைந்துபோனது. உதயத்தின் மறைவு அன்று பல்லாயிரம் மனங்களில் ஆறாத்துயரை மாறாநினைவாக விட்டுச்சென்றது – விதைத்துச் சென்றது என்பது வரலாறு.
முழுக்க முழுக்க தமிழில் இவ்விதழ் வெளிவருகிறது; இலவயமாக வழங்கப்படுகிறது. நான்கு வண்ணத்தில் – தரமான வழவழப்புத் தாளில் – புதியவகை அச்சமைப்பில் - மிகவும் நேர்த்தியாக – பொழிவான தோற்றத்தில் – பார்ப்போர், படிப்போர் கவனத்தையும் கருத்தையும் பட்டென கவரும் வகையில் ‘புதிய உதயம்’ வெளியிடப்படுகிறது.
முற்றிலும் புதிய தோற்றத்தில் புதுமை அமைப்பில் புதுப்புது செய்திகளைத் தாங்கி ‘புதிய உதயம்’ மீண்டும் தமிழ்மணம் பரப்ப வந்திருக்கிறது; வாராது வந்த மாமணியாய் தமிழ் மக்களின் அறிவுப்பசிக்கு நல்விருந்தாக அமைந்திருக்கிறது.
இந்த 2009இல் இதுவரை மூன்று இதழ்கள் வெளிவந்துவிட்டன. தற்போது, திருமதி பத்மா செல்வராஜு அவர்களின் பொறுப்பில் இவ்வேடு நல்லதோர் தமிழ் ஏடாக – ஏடுகளுகெல்லாம் முன்மாதிரி ஏடாக வெளிவருகின்றது.
ஆனால், இதில் வருத்தத்திற்குரிய விடயம் என்னவென்றால், இப்படியொரு இதழ் வெளிவருகிறது என்பதே இன்னும் பலரும் அறியாமல் இருக்கின்றனர்; இலவயமாக கிடைக்கும் இனியதோர் இதழைப் படிக்காமல் இருக்கின்றனர்.
‘புதிய உதயம்’ அரசுசார்ந்த செய்திகளை வழங்கும் அதே வேளையில், கல்வி, சமூகம், பொருளாதாரம், பெற்றோரியல், அறிவியல், சமயம், விளையாட்டு, சுகாதாரம், தமிழ்மொழி, தொழில்நுட்பம், சிறுகதை, கவிதை என பல்வேறு வகையான படைப்புகளைப் பாங்குடன் பரிமாறுகிறது.
தமிழ்ப்பள்ளிகள், இடைநிலை; உயர்நிலைப்பள்ளிகள், ஆசிரியர் பயிற்சிக் கழகங்கள், தமிழ்மொழிக் கழகங்கள், பொது இயக்கங்கள், பொது மக்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் இந்த இதழ் பயனாக அமையும் என்று உறுதியாகச் சொல்லலாம்.
குறிப்பாக, தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையில் தமிழைப் பயிலும் மாணவர்களுக்கு இவ்விதழ் பெரும் நன்மையை அளிக்கும்; அவர்களின் தமிழ் வாசிப்பிற்குத் துணை நிற்கும்; தமிழ்மொழி ஆற்றலை வளர்த்தெடுக்கும். இன்னும் சொல்லப்போனால் அவர்களின் கல்விக்கும் தேர்வுக்கும்கூட துணைநூலாகப் பயன்படும்.
‘புதிய உதயம்’ இதழ் நாடு முழுவதுமுள்ள தகவல் திணைக்களம் (Jabatan Penerangan), மாவட்டத் தகவல் அலுவலகம் (Pejabat Penerangan Daerah) ஆகிய இடங்களில் இலவயமாகக் கிடைக்கும்.
பள்ளி நிருவாகங்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், பொது இயக்கங்கள், இளைஞர் அமைப்புகள் ஆகிய தரப்பினர் இந்த இதழைப் பரப்பும் நல்ல பணியை விரைந்து செய்யலாம்.
இந்தச் செய்தியைப் படிக்கும் அன்பர்கள், உங்களுக்கு அருகிலுள்ள தமிழ்ப் பள்ளிகள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், பொது இயக்கங்கள், இளைஞர் இயக்கங்கள் ஆகியோருக்கு அன்புகூர்ந்து தெரியப்படுத்துங்கள்.
தமிழ்மக்களின் பேராதரவு இருந்தால் அரசாங்கம் வெளியிடும் இந்த இலவய இதழ்.. இனியத் தமிழ்பரப்பும் இந்த ஏடு.. எல்லாரும் படிக்கும் வகையில் பேரளவில் வெளிவரும்; மீண்டும் பாதியிலே நின்றுவிடாமல் பலகாலம் தொடர்ந்து வரும்.
‘புதிய உதயம்’ இதழ் தொடர்பாக மேல் விவரம் பெறுவதற்கு:-
திருமதி பத்மா செல்வராஜு (ஆசிரியர்)
மின்னஞ்சல்:- pathma@inform.gov.my கைப்பேசி:- 019-2808526
‘புதிய உதயம்’ முகவரி:-
Ketua Pengarang, Bahagian Penerbitan Dasar Negara,
Jabatan Penerangan Malaysia, Tingkat 12 Barat, Wisma Sime Darby,
Jalan Raja Laut, 50350 Kuala Lumpur. Tel:03-2173 4400 samb.4655
Friday, October 17, 2008
தமிழ்நெறி – தமிழ்மீட்புத் திங்களிதழ்
தமிழர் ஒவ்வொருவரும் கட்டாயம் வாங்கிப்படிக்க வேண்டிய திங்களிதழ் தமிழ்நெறி!
தமிழ்நெறி அத்தோபர் திங்களிதழ் வந்துவிட்டது! அதன் உள்ளடக்கங்கள்...
1.அறிவியலையும் கணிதத்தையும் மீண்டும் தாய்மொழியில் பயிற்றுவிக்க வேண்டும்.
2.மனித வளர்ச்சியும் விருத்தியும் தொடர்பான கோட்பாடுகள்.
3.வீழ்ச்சியுறும் தமிழினத்தில் எழுச்சி வேண்டும்.
4.'மக்கள் ஓசை' திருமாவளவனைச் சீண்டியது தமிழ் இனமான உணர்வாளர்களைச் சீண்டியதாகும்.
5.பாலகோபாலன் நம்பியார் இப்படிச் செய்யலாமா?
6.நடிகை தொப்புளில் ஓடுகிறது நாளிதழ்
7.பூச்சார் பூச் பூச் பூக்கா! நாக்கா!
8.தமிழர்களுக்குத் தமிழ்மொழி தாய்ப்பாலுக்கு நிகரானது
9.யாருக்கும் தமிழர்கள் அஞ்சத் தேவையில்லை!
10.புரட்சித் துறவி வள்ளலார்.
இன்னும், சொல்லும் பொருளும், தமிழ்நெறிக் கல்வி, தமிழ்நெறித் தெளிவு, சிறுகதை, தமிழ்க் கலைச்சொற்கள், இலக்கணம், பண்டார் பாரு செந்தூல் இடநிலைப்பள்ளி மாணவர்களின் தமிழ்நெறிக் கலந்துரயாடல்
என பல சூடான, சுவையான, இனமான உணர்வூட்டும் கட்டுரைகள்; செய்திகள்; துணுக்குகளைத் தாங்கி மலர்ந்துள்ளது. தவறாமல் உடனே வாங்கவும்..!
மேல்விளக்கம் பெற:- தமிழ்நெறி, Lot 274, Kampong Bendahara Baru, Jalan Sungai Tua, 68100 Batu Caves, Selangor. தொ.பேசி:- 03-61874103
Sunday, September 21, 2008
தமிழ்நெறி - தமிழ்த்தேசிய இதழ்

மலேசியத் தமிழர்க்குத் 'தமிழ்நெறி' புதிய இதழல்ல. கிட்டதட்ட 14ஆண்டுகளுக்கு முன்பே 1994 ஏப்பிரல் திங்கள் மலேசியாவில் தமிழ்த் தேசியத்தை உயர்த்திப்பிடிக்கும் நோக்கில் புயலென புரப்பட்ட எழுச்சிமிக்க ஏடுதான் 'தமிழ்நெறி'. மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் தோற்றுநர் பாவலர் அ.பு.திருமாலனாரின் அறிய சிந்தனையில் கருவாகி கழகத்தின் உயிர்த்தொண்டர்களின் அயராத உழைப்பில் உருவாகி மலேசிய மண்ணில் தமிழ் முரசு கொட்டிய வரலாற்றுச் சிறப்பு இந்தத் 'தமிழ்நெறி' இதழுக்கு உண்டு.
ஆனால், வெளிவந்த சில மாதங்களில் பல்வேறு இடர்களின் காரணமாக தமிழ்நெறி நின்று போனது. பின்னர், பத்தாண்டுகள் கழித்து 2004 மே திங்களில் 'தமிழ்நெறி' மீண்டும் புத்துயிர் பெற்று புதிய வடிவில் புதிய தோற்றத்தில் வெளிவந்தது. தமிழ் உணர்வையும் தமிழர் உணர்ச்சியையும் முன்னெடுக்கும் ஒரு இதழை வாங்கி அதனை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவும் உணர்வும் கெட்டுப்போன தமிழர்களிடையே, பெயர்போட முடியாமல் மீண்டும் தடைபட்டது 'தமிழ்நெறி'.ஆயினும், உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லாத அளவுக்குக் காலந்தோறும் பல்வேறு தடைகளையும், இடர்களையும், இருட்டடிப்புகளையும், மறைப்புகளையும் தாண்டி இன்றளவும் நிலைபெற்று தனித்தன்மையோடு வாழ்ந்து வரும் தமிழ்மொழி போல, 'தமிழ்நெறி' இதழும் பல்வேறு சிக்கல்களை கடந்து இப்போது மறுபடியும் புதுவடிவம் பெற்றுள்ளது. எந்தத் தடைக்கும் அஞ்சாமல், வந்த தடங்கல்கள் அனைத்தையும் வென்று மீண்டும் வெளிவந்துள்ள 'தமிழ்நெறியின்' நெஞ்சுரத்திற்குத் தமிழர்கள் தலைதாழ்த்தி வணக்கம் செய்யவேண்டும்.
இவ்விதழ் இந்நாட்டில் பலமிக்க ஓர் இதழாக உருவெடுக்க வேண்டும். அதற்குண்டான அனைத்து வினைப்பாடுகளையும் ஆழ ஆராய்ந்து ஆசிரியர் குழுவினர் செயல்பட வேண்டும். தமிழின்; தமிழர்களின் நலன்பேணும் செய்திகளைத் தாங்கிவருவதோடு நின்றுவிடாமல், களத்தில் இறங்கி சரியான இலக்கை நோக்கி தமிழரை வழிநடத்த வேண்டும். தமிழ்ப்பற்றாளர்கள் ஊணர்வாளர்கள் அனைவரையும் தமிழ்நெறி எட்டிப்பிடிக்க ஏற்பாடுகளைச் செய்தாக வேண்டும். நாடு முழுவதும், 'தமிழ்நெறி' அறிமுக விழா, வாசகர் விழா போன்ற நிகழ்ச்சிகளை நடத்தித் தமிழ்நெறியைப் பரவச் செய்ய வேண்டும். ஆண்டுக் கட்டண உறுப்பினர்களைப் பெருக்குவதற்கான வழிவகைகளை காணவேண்டும். நாடு முழுவதும் உள்ள தமிழ் சார்ந்த இயக்கங்களின் ஆதரவை நாடி ஒவ்வொரு ஊரிலும் வட்டாரத்திலும் தமிழ்நெறி உறுப்பினர்களை உருவாக்க வேண்டும். தமிழ்ப்பள்ளிகள், தமிழ் ஆசிரியர்கள், மாணவர்களை இலக்காகக் கொண்டு தக்க திட்டங்களைத் தீட்டி முன்னேற வேண்டும். இடைநிலைப்பள்ளிகள், உயர்க்கல்விக் கூடங்கள் ஆகியவற்றுக்குள் தமிழ்நெறி ஊடுறுவும் வழிகளையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
இத்தனைக் கருத்துகளும் 'தமிழ்நெறி' ஆசிரியர் குழுவினருக்குத் தெரியாதவை அல்ல. இருந்தாலும், தமிழ்நெறி தமிழரின் உயிர்நெறியாக உருவாக வேண்டும் என்ற எண்ணத்தால்தான் இத்தனைக் கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.
இவ்விதழின் வெற்றியில் மலேசியத் தமிழரின் பங்கு, குறிப்பாகத் தமிழ்ப்பற்றாளர், உணர்வாளர் என்று முழங்கிக்கொள்வோரின் பங்கு மிக அளப்பரியதாகும். அதோடு, தமிழால் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் ஆசிரியர்கள், அதிகாரிகள், அரசுப் பணியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் இவ்விதழை பலமிக்க இதழாக வளர்த்தெடுக்க உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.
காரணம், தமிழை முன்னெடுப்பது ஒன்றே இந்த நாட்டில் தமிழர்களின் நூற்றாண்டு வரலாற்றைக் காப்பதற்கான வழியும்; தமிழர்களின் அடுத்த நூற்றாண்டின் வாழ்வை, வளர்ச்சியை உருவாக்குவதற்கான வாய்ப்பும் ஆகும். தமிழ் இல்லையேல் தமிழர்க்கு எதுவே நிலைக்காது என்பதை மேற்குறிப்பிட்டவர்கள் நன்றாக உணர்ந்துகொள்ள வேண்டும். எனவே, ஒவ்வொருவரும் தமிழ்நெறியை வாங்கி ஆதரவு செய்ய வேண்டியதும் இன்னும் பலரை வாங்க ஊக்குவிப்பதும் பிறந்த இனத்துக்குச் செய்யும் கடமையாகும்.
தமிழ்நெறி இதழ் பற்றிய முக்கிய விவரங்கள்:-
1.இதழின் விலை ம.ரி.3.00 மட்டுமே
2.தமிழ்நெறி உறுப்பினர் கட்டணம் ம.ரி20.00 (6 மாதங்களுக்கு)
3.தமிழ்நெறி முகவரி: Lot, 274, Kampong Bendahara Baru, jalan Sungai Tua, 68100 Batu Caves, Selangor.
4.தொலைபேசி: 03-61874103 தொலைப்படி: 03-61874099
Monday, May 26, 2008
தமிழ்ச் செம்மொழிச் சிறப்புமலர்

அனைத்துலக மொழியறிஞர் பெருமக்கள்
ஆய்ந்தறிந்து ஏற்றுக்கொண்ட அறுபெருஞ் செம்மொழிகளுள்
அத்தனை தகுதிகளும் மொத்தமாய் உடைய ஒரேமொழி தமிழ்!
எனினும், இந்திய நடுவணரசு,
தமிழறிஞர்கள் 100 ஆண்டு போராடிய பின்னர்,
2004ஆம் ஆண்டுதான் தமிழைச் செம்மொழியாக
அதிகாரஞ் சார்ந்து அறிவித்தது!
அந்த வரலாற்றுச் சிறப்பின் பதிவாகவும்,
செந்தமிழின் செம்மைக் கூறுகளைத் தெளிவுற நிறுவியும்,
உலகளாவிய நிலையில் தமிழின் நேற்றைய – இன்றைய – நாளைய
நிலைமைகளைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து விளக்கியும்
துறைசார்ந்த அறிஞர்கள் தீட்டிய எழுத்தூவியங்களின்
தொகுப்பாக வெளிவந்துள்ளது செம்மொழிச் சிறப்புமலர்..!
செம்மொழியாம் தமிழுக்கென இப்படியொரு சிறப்புமலர்
இப்போதுதான் உலகிலேயே முதலாவதாக வெளிவருகிறது!
2.செம்மொழி : நேற்று – இன்று – நாளை
3.செம்மொழி : சிறப்பியல்புகள்
4.செம்மொழி : அக்கரை நாடுகளில்
5.செம்மொழி : தமிழ்க்கல்வி, கலை நிறுவனங்கள்
என்ற ஐந்து பிரிவுகளில்...
தமிழகம், மலேசியா, சிங்கை, இலங்கை சார்ந்த அறிஞர்களும்,
தமிழாய்ந்த மேனாட்டு அறிஞர்களும் வழங்கிய
40 அரிய ஆய்வுக் கட்டுரைகளையும்,
பழந்தமிழ்ப் புலவோர் முதல் பாரதிதாசனார் வரை
நந்தமிழ்ப் புலவர்களின் நறுந்தமிழ்க் கவிதை வரிகளை விளக்கும்
அரிய காட்சிகளாக அழகிய 20 வண்ண ஓவியங்களையும்,
இந்திய நடுவணரசின் செம்மொழி அதிகார ஆவணங்களையும்
இன்ன பிற அருமைசால் செய்திகளையும் தாங்கி,
320 பக்கங்களில் இதழ்விரிக்கும் இந்த மலர்,
உலக நிலையில் செம்மொழி பற்றி வெளிவந்துள்ள
முதல் முழுக் களஞ்சியமாகும்!
இந்த செம்மொழிச் சிறப்புமலரின் வெளியீட்டு விழா
28-05-2008ஆம் நாள், புதன்கிழமை, மாலை மணி 6.00க்கு
கோலாலம்பூர், ம.இ.கா தலைமையகம், நேதாஜி மண்டபத்தில்
உயிர்த் தமிழை உயர்த்திப் பிடிக்க வெளியீடு காண்கிறது!!
உலகத் தமிழரை ஊக்கப்படுத்த வெளியீடு காண்கிறது!!
Friday, April 27, 2007
சொல் அறிவியல் - Tamil Etimology
மலேசிய வரலாற்றில் முதன் முறையாக வெளிவரும் வேர்ச்சொல் ஆய்வுநூல்.











