Showing posts with label தமிழ்ப் பதிவுலகம். Show all posts
Showing posts with label தமிழ்ப் பதிவுலகம். Show all posts

Friday, July 13, 2012

தமிழ்க்கணினி வல்லுநர் ஆண்டோ பீட்டர் மறைவு

கணினி, இணையம், அச்சுத்துறை சார்ந்த பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் ஆண்டோ பீட்டர். மென்பொருள் தயாரிப்பு, இணையப் பக்கம் வடிவமைப்பில் ஈடுபட்டவர். கணித்தமிழ் வளர்ச்சியின் முன்னோடியும், சி.எஸ்.சி, சாப்டுவியூ நிறுவனத்தின்  நிறுவனரும், கணித்தமிழ்ச்சங்கத்தை நிறுவிப் பணிபுரிந்தவரும், பல கணினி நூல்களின் ஆசிரியருமான மா.ஆண்டோபீட்டர் 12.07.2012 வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் காலமானார். இவரின் மறைவு தமிழ் இணையத்துறைக்குப் பேரிழப்பு.

 தமிழ்க் கணினி குறித்த விழிப்புணர்வைத் தமிழர்களிடையே அதிகப்படுத்தியவர் ஆண்டோ பீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் முதன்முதலாகப் பல்லூடகக் கல்வியை அறிமுகப் படுத்திய இவர் இளைஞர்கள் வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்காக 500க்கும் மேற்பட்ட இலவச கருத்தரங்குகளை நடத்தியுள்ளார்.

கணினி, தமிழ் தொடர்பான பல்வேறு மாநாடுகளில் கலந்து கொண்டிருப்பதுடன் 26 ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.

முதல் தமிழ் இணைய இதழ் தொடங்கியவர்

அச்சு வடிவில் வந்து கொண்டிருக்கும் இதழ்களில் இருக்கும் படங்கள், செய்திகள் மற்றும் அனைத்துவிதமான படைப்புகளையும் இணைய தளங்களில் அச்சு இதழ்களைப் போன்று பகுதிகளாகவும், பக்கங்களாகவும் அனைவரும் பார்க்கவும் படிக்கவும் உருவாக்கப்பட்ட இணைய இதழ்களில் முதல் தமிழ் இணைய இதழான "தமிழ் சினிமா" எனும் பெயரில் முதல் தமிழ் இணைய இதழைத் தொடங்கியவர்.  

தமிழ்நாட்டில் இணைய இதழ்கள் குறித்த அறிமுகமில்லாத நிலையில், 31-01-1997 இல் தொடங்கப்பட்ட தமிழ் சினிமா இதழுக்கு அச்சிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் அதிக அளவு விளம்பரம் செய்யப்பட்டது. தமிழ் இணைய இதழ்களில் முதன் முதலாக அதிக அளவில் விளம்பரம் செய்யப்பட்டு தொடங்கப்பட்ட இதழ் தமிழ் சினிமா என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கணினித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் தமிழ் மரபு அறக் கட்டளையின் செயலாளராகவும் இருந்துவந்த இவர் இந்திய அரசு, தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சில குழுக்களில் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

பெற்ற விருதுகளும் பாராட்டுகளும்
 
‘தமிழும் கணிப்பொறியும்’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு - 2004. நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் சிறந்த எழுத்தாளருக்கான விருது 2007.

ஸ்ரீராம் நிறுவனத்தின் ‘பாரதி இலக்கியச் செல்வர் விருது’, தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் ‘பெரியார் விருது’.

குடும்பம்

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் 26.04.1967 இல் பிறந்த இவர் பெற்றோர் : மார்சீலீன் பர்னாந்து, ராசாத்தி பர்னாந்து. வாழ்க்கைத் துணைவி : ஸ்டெல்லா. பிள்ளைகள் : அமுதன் (மகன்), அமுதினி (மகள்).

அரும்பெறல் தமிழ்க் கணிஞராக நற்பணிகள் ஆற்றி இன்று நம்மைவிட்டு மீளாத்துயிலில் ஆழ்ந்துவிட்ட மா.ஆண்டோபீட்டர் அவர்களின் ஆதன் அமைதிபெற இறைமைத் திருவருளை வேண்டுவோம்.

மலேசியத் தமிழ்க் கணினி ஆர்வலர்கள் சார்பில் அன்னாரின் அன்புக் குடும்பத்தாருக்கு ஆழந்த இரங்களை தெரிவிக்க்கின்றோம்.


@சுப.நற்குணன், திருத்தமிழ்.



Tuesday, December 21, 2010

வலைப்பதிவர் கலந்துரையாடல் இனிதே நடந்தது

உத்தமம் அமைப்பின் நிருவாக உறுப்பினரும், மலேசியாவின் முன்னணி இணைய முனைப்பாளருமாகிய சி.ம.இளந்தமிழ் ஏற்பாட்டில் தமிழ் வலைப்பதிவர் கலந்துரையாடல் கடந்த 19.12.2010 ஞாயிறன்று நடைபெற்றது. பெட்டாலிங் ஜெயா, காசிங் சாலையில் இருக்கும் தாமரை உணவகத்தில் இந்நிகழ்ச்சி நடந்தது. 14 பேர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தமிழ் இணைய முன்னோடியும் தமிழ் இணையம் (Tamilnet) தளத்தின் மேம்பாட்டாளருமாகிய திரு.பாலா பிள்ளை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் என்பது இந்நிகழ்ச்சியின் குறிப்பிடத்தக்க அங்கமாகும்.

பிற்பகல் 2:00 மணி தொடங்கி ஒவ்வொருவராக வந்து சேர்ந்ததும், சுப.நற்குணன் வரவேற்புரையுடன் கலந்துரையாடல் தொடங்கியது. தொடர்ந்து, சி.ம.இளந்தமிழ் உரை ஆற்றினார். இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டதன் நோக்கங்களை விவரித்தார். மலேசிய வலைப்பதிவுகள் இன்னும் எட்ட வேண்டிய எல்லைகள் தொலைவில் இருப்பதாகச் சொன்னார். மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் முற்போக்காகச் சிந்தித்துச் சமூகத்திற்குப் பங்களிப்புகளைச் செய்வதோடு சிந்தனை மாற்றத்தை கொண்டுவர வேண்டும். அதோடு, வலைப்பதிவர்களிடையே பணிப்பின்னலை ஏற்படுத்தி உயர்ந்த இலக்கை முன்வைத்து செயல்படவேண்டும். ஒரு சமூகமாக; ஓர் இனமாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய காலக்கட்டத்திற்குத் தமிழ்ச் சமூகம் தள்ளப்பட்டிருக்கிறது. அதற்கு வலைப்பதிவர்கள் தக்கனவற்றைத் தங்கள் எழுத்துகள் வழியாகச் செய்யலாம் என்றார்.

அடுத்து, திரு.பாலா பிள்ளையின் சிறப்புரை இடம்பெற்றது. மலேசியாவில் வலைப்பதிவு எழுதுபவர்களைப் பாராட்டினார். தங்களுக்கு விருப்பமான செய்திகளை எழுதும் வலைப்பதிவர்கள் சமூக அக்கறையோடும் செயல்பட வேண்டும். சமூக மாற்றத்திற்கு வித்திடும் கருத்துகளை முன்வைக்க வேண்டும். தெளிவாகச் சிந்திக்கும் ஒரு சமுதாயத்தைத் தங்கள் எழுத்தின் வழியாக வலைப்பதிவர்கள் உருவாக்க முடியும். எனவே, தற்காலச் சூழலில் தமிழ்ச் சமூகத்திற்குத் தேவையான விடயங்களைத் தகுந்த சான்றோடும் செறிவோடும் எழுதுவதை வலைப்பதிவர்கள் அளவுகோளாகக் கொண்டிருத்தல் நல்லது.

முற்காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் பல கண்டுபிடிப்புகளும் ஆக்கங்களும் நிகழந்திருப்பதைக் காண்கிறோம். ஆனால், அண்மைய நூற்றாண்டில் பல பின்னடைவுகளைக் கண்டிருக்கிறோம். புதிய ஆக்கங்களும் கண்டுபிடிப்புகளும் இல்லாமை இதற்கு ஒரு காரணம். ஆகவே, புதிய ஆக்கங்கள் தமிழுக்குத் தேவை. அதற்கு, முதலில் கற்பனை வளம் நிறைந்த மக்களை உருவாக்க வேண்டும். மாறுபட்ட கற்பனைகளின் வழியாக புதிய கண்டறிதல்கள் நிகழும். எண்னங்களையும் சிந்தனைகளையும் பூட்டி வைத்துக்கொண்டாலோ பிற்போக்குத்தனமான சிந்தனனகளில் ஊறிக்கிடந்தாலோ புதிய கற்பனைகள் தோன்றா; புதிய ஆக்கங்களும் தோன்றா.

தொடக்கக் காலத்தில், தாம் தமிழ் இணையம் (Tamilnet) தளத்தை உருவாக்கிய காலத்தோடு ஒப்பிடும்போது இன்று தமிழ் இணைய உலகம் வெகுவாக வளர்ந்து இருக்கின்றது. ஒரு தனி அரசு அல்லது தனி நிருவாகம், நிறுவனம் செய்த பணிகளை இன்று இணையத்தில் தனியாட்கள் செய்ய முடிகிறது. விக்கிலீக்சு போன்ற தளங்கள் இதற்கு நல்ல சான்று. சூலியன் அசாஞ்சு போன்ற தனியாட்களால் இன்று உலகத்தின் போக்கையே மாற்றி அமைக்க முடிகிறது. வலைப்பதிவர்களும் இப்படி பெரிதாகச் சிந்தித்துப் பொறுப்புடன் செயல்பட முனைதல் வேண்டும். தமிழ்ச் சமூகம் பயன்படும் வகையில் ஆக்ககரமாக எழுதவேண்டும் என்றாரவர்.

தொடர்ந்து வருகை தந்த வலைப்பதிவர்கள் அனைவரும் தங்களை அறிமுகம் செய்துகொண்டு தங்கள் வலைப்பதிவு பணிகள் குறித்து பேசினர். அதிலிருந்து சில மணிகள் இதோ:-

இல.வாசுதேவன் (விவேகம்): 2004 தொடங்கி வலைப்பதிவு எழுதுகிறேன். பல சிரமங்களுக்கிடையில் இதனைச் செய்ய வேண்டியுள்ளது. சொகூர் மாநிலத்தில் பல முறை இணையக் கருத்தரங்கம், பட்டறை ஆகியன நடத்தி இளையோர்களுக்கு வழிகாட்டி வருகிறேன். தமிழ் ஆசிரியர்கள் நிறைய பேர் வலைப்பதிவு எழுத ஊக்குவித்துள்ளேன்.

துரைசாமி (வாசகர்): மலேசிய தமிழ் வலைப்பதிவுகளை விரும்பி வாசிப்பேன். குறிப்பாக, மலேசியா இன்று, திருத்தமிழ் முதலானவற்றைத் தவறாமல் வாசிப்பேன். வலைப்பதிவு தொடங்கும் எண்ணம் இருக்கிறது.

பவனேஸ்வரி (கணைகள்): 2008 முதல் பதிவெழுதி வருகின்றேன். குறிப்பிட்ட இலக்கு என்று தனியாக எதுவும் இல்லை. சமுதாய சிந்தனைகளைக் கவிதைகளாக எழுதி வருகின்றேன். சில கவிதைகள் பெரும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. பலமுறை வசைமொழிகள் பின்னூட்டங்களாக வந்திருக்கின்றன.

சுப.நற்குணன் (திருத்தமிழ்): 2005இல் வலைப்பதிவு தொடங்கினேன். இல.வாசுதேவன் அவர்களைச் சந்தித்த பின்புதான் வலைப்பதிவு தொடங்க ஆர்வம் உண்டானது. இன்று மலேசியத் தமிழ் வலைப்பதிவுகள் அதிகரித்து இருக்கின்றன. ஆனால், உள்ளடக்கங்களின் தரம் இன்னும் மேம்பட வேண்டும். நமது வலைப்பதிவுகள் மாற்று ஊடகமாக மக்கள் மனங்களில் இடம்பெற வேண்டும் என்பதே என் அவா. மலேசியத் தமிழ் வலைப்பதிவுகள் அனைத்தும் வாசகரைச் சென்று அடைய ‘திருமன்றில்’ எனும் திரட்டி தொடங்கினேன். அதேபோல், ஓலைச்சுவடி பதிவர் நண்பர் சதீசு வலைப்பூங்கா என்ற திரட்டியை வடிவமைத்துள்ளார். இவற்றை நமது பதிவர்களும் வாசகர்களும் பயன்கொள்ள வேண்டும். 2009இல் பாரிட் புந்தாரில் வலைப்பதிவர் சந்திப்பு நடத்தப்பட்டது. தொடர்ந்து தமிழ்க் கணினி, வலைப்பதிவு வளர்ச்சிக்குப் பங்காற்றி வருகிறேன்.

கிருஷ்ணமூர்த்தி (கவித்தமிழ்): ஆங்கிலத்தில் முதல் வலைப்பதிவு தொடங்கினேன். பாரிட் புந்தாரில் நடந்த சந்திப்புக்குப் பிறகு ‘கவித்தமிழ்’ தொடங்கினேன். சமூகத்தில் சிலர்மீது உள்ள கோபத்தை வெளிப்படுத்த பதிவுகள் எழுதுகிறேன். நமது எழுத்துகளை மரபு ஊடகங்களில் முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை. நாளிதழ், தாளிகை, வானொலி போன்றவை நமது சிந்தனனகளை வெட்டிக் குத்தி சிதைத்து வெளியிடுகின்றன. ஆகவே, என் சிந்தனைகள் முழுமையாக வெளியிடுவதற்கு வலைப்பதிவு உதவியாக உள்ளது. அந்தவகையில், சமுதாயச் சிந்தனைகளைக் கவிதை மொழியில் தருகிறேன். தமிழில் நிறைய வளங்கள் உள்ளன; உயர்ந்த சிந்தனைகள் உள்ளன; மருத்துவம் உள்ளது; பல அரிய செய்திகள் நமது இலக்கியத்தில் உள்ளன. அவற்றை எளிய முறையில் மக்களுக்கு வழங்க விரும்புகிறேன்.

மனோகரன் (மனோவியம்): மலாயா பல்கலையில் சி.ம.இளந்தமிழ் நடத்திய பட்டறையில் கலந்துகொண்டபின் வலைப்பதிவு எழுத வந்தேன். என் பதிவில் சமூகம், சமயம், வரலாறு சார்ந்த சிந்தனைகளை எழுதிவருகிறேன். திருத்தமிழ் போன்ற வலைப்பதிவில் சூடான விவாதங்களில் நிறைய எழுதியுள்ளேன். அதனால், சிலர் அழிவியை அனுப்பி என் வலைப்பதிவுக்குத் தொல்லைகள் கொடுத்துள்ளனர். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் எழுதி வருகின்றேன்.

சுரேஸ் (தமிழ் மலர்கள்): புதிதாக வலைப்பதிவு எழுதுகிறேன். இப்போதைக்கு எளிமையான சில செய்திகளை மட்டுமே எழுதி வருகிறேன். இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. (இங்கு இடம்பெற்றுள்ள நிழற்படங்கள் அனைத்தும் சுரேஸின் கைவண்ணம்தாம். படங்களை இரவல் கொடுத்த அவருக்கு நன்றி)

யுவராஜன் (s.yuvaraajan.com): அடிப்படையில் நான் ஓர் எழுத்தாளன். பல இடங்களில் எழுதிய படைப்புகளைத் தொகுத்து ஒரே தளத்தில் வெளியிட வேண்டும் என்று வலைப்பதிவு தொடங்கினேன். வல்லினம் காலாண்டிதழில் எழுதிவருகின்றேன். தமிழ் வலைப்பதிவுகள் மாற்று ஊடகமாக வளர வேண்டும். மலேசிய வலைப்பதிவர்கள் இன்னும் ஆக்கமாக எழுத வேண்டும்.

மு.வேலன் (அரங்கேற்றம்): படிக்கும் காலத்திலிருந்தே இணையத்தில் ஆர்வமுண்டு. கல்லூரி படிப்பு முடிந்த பிறகு அறங்கேற்றம் வலைப்பதிவு தொடங்கி எழுதி வருகிறேன். என்னைப் பின்னொற்றி சிலர் வலைப்பதிவு தொடங்கியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களை இணைப்பதற்கு முயற்சி தேவைபடுகிறது. மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் மடற்குழுமம் ஒன்று உள்ளது. ஆனால், எல்லா பதிவர்களும் அதில் பங்கேற்பதில்லை. இதனால், பதிவர்களிடையே செய்தி பரிமாற்றம் குறைவாக உள்ளது.

அப்பண்ணா (வாழ்க வளமுடன்): இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மகிழ்ச்சி. சதுரங்கம் பற்றி வலைப்பதிவு எழுதி வருகிறேன். மலேசிய வலைப்பதிவுகளைத் விடாமல் படிக்கிறேன்.

இறுதியாக, பொதுவான விடயங்கள் மீது கலந்துரையாடல் தொடர்ந்தது. அதில் பேசப்பட்டவை சில:

1.மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களை இணைக்க முகநூல் தொடங்க வேண்டும்.

2.சமுதாய மறுமலர்ச்சிக் கருத்துகளை அதிகமாக எழுத வேண்டும்.

3.உலக அளவில் எழும் தமிழ் சார்ந்த சிக்கல்களை மலேசியப் பதிவர்கள் கூர்ந்து கவனித்து கருத்துகளைப் பதிவுசெய்ய வேண்டும்.

4.தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், ஒருங்குறி தமிழ் எழுத்துச் சிக்கல் முதலான விடயங்களில் மலேசியப் பதிவர்களின் பங்கேற்பும் பங்களிப்பும் குறைவாகவே காணப்பட்டது.

5.உத்தமம் அமைப்பில் மலேசியப் பதிவர்கள் உறுப்பியம் பெற வேண்டும்.

6.அடுத்த ஆண்டில் பெரிய அளவில் வலைப்பதிவர் சந்திப்பும் பட்டறையும் நடத்தப்படும்.

மாலை மணி 4:15அளவில் கலந்துரையாடல் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது. நாட்டில் 60க்கும் மேற்பட்ட வலைப்பதிவர்கள் இருக்கின்ற நிலையில், இன்னும் அதிகமானோர் வந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அடுத்தடுத்த முறை இதனை எதிர்பார்க்கலாம்.


Wednesday, December 15, 2010

மலேசியத் தமிழ் வலைப்பதிவர் கலந்துரையாடல்


மலேசிய உத்தமம் அமைப்பின் ஏற்பாட்டில், தமிழ் வலைப்பதிவர் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாள்: 19-12-2010 (ஞாயிறு)
நேரம்: மாலை மணி 2:00 - 4:00
இடம்: தாமரை உணவகம், ஜாலான் காசிங் பெட்டாலிங் ஜெயாவில் (Lotus Restaurant, Jalan Gasing P.J)
உத்தமம் அமைப்பின் நிருவாகக் குழு உறுப்பினரும், மலேசிய நிகராளியும் ஆகிய சி.ம.இளந்தமிழ் இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வழிநடத்துவார்.

தமிழ் இணைய முன்னோடிகளில் ஒருவரான திரு.பாலா பிள்ளை (Tamilnet- Australia)அவர்கள் சிறப்பு வருகையளிக்கவுள்ளார்.
இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் உள்ளடக்கம் பின்வருமாறு:

1.வலைப்பதிவர் அறிமுகம்
2.மலேசியத் தமிழ் வலைப்பதிவு வாழ்வும் வளர்ச்சியும்
3.மலேசியாவில் தமிழ் வலைபதிவர்களை அதிகரிப்பதற்கான வழிவகைகள்
4.மலேசியத் தமிழ் வலைப்பதிவுகளை மாற்று ஊடகமாக வளர்த்தெடுத்தல்
5.மலேசியத் தமிழ் வலைப்பதிவுலகச் சிக்கல்களும் தீர்வுகளும்
6.மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு / பட்டறை
குறுகிய காலத்தில் இந்த ஏற்பாட்டினைச் செய்திருப்பதால், இதனையே அழைப்பாக ஏற்று மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் வருகை தருமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

இதற்கு முன்னதாக, இவ்வகையிலான சந்திப்பு நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இப்போது மீண்டுமொரு முறை ‘மலேசியத் தமிழ் வலைப்பதிவர் கலந்துரையாடல்’ நடைபெற உள்ளது.

ஆகவே, இதனை நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரும் கலந்துகொள்ளவும்.
வலைப்பதிவர் நண்பர்கள் தயவுசெய்து தங்கள் வருகையை உறுதிபடுத்தும் வகையில் அழைத்து தெரிவிக்கவும் அல்லது குறுஞ்செய்தி விடுக்கவும்.

மேல் விவரங்களுக்கும் தொடர்புக்கும்:
சி.ம.இளந்தமிழ் - உத்தமம் (012-3143910) சுப.நற்குணன் - திருத்தமிழ் (012-5130262) மின்னஞ்சல்: thirutamilblog@gmail.com

Sunday, May 23, 2010

முனைவர் மு.இளங்கோவனுடன் மறக்கவியலா மணித்துளிகள்



புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரி தமிழ்ப் பேராசிரியரும், தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று இணையப் பயிலரங்குகளை நடத்தி இணையத் தமிழைச் செழிக்கச் செய்பவரும், முன்னணி வலைப்பதிவருமாகிய முனைவர் மு.இளங்கோவன் மலேசியா வந்திருக்கிறார். கடந்த 18.5.2010 தொடங்கி அவர் இங்கே இருக்கிறார். 25.5.2010இல் மீண்டும் தமிழகம் திரும்புகிறார்.

மலேசியாவில் பல ஊர்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டிருக்கிறார். நாட்டுப்புற இலக்கியம், அயலகத் தமிழ்ச் சான்றோர்கள், இணையப் பயிலரங்கு என்று பல தலைப்புகளில் பேசி மலேசியாவில் தமிழ்மணம் பரப்பிக்கொண்டிருக்கிறார்.

கடந்த 20.05.2010ஆம் நாள் நானும் தமிழ் ஆலயம் வலைப்பதிவர் அருமை நண்பர் கோவி.மதிவரனும் முனைவரோடு சுற்றுலாவில் இணைந்துகொண்டோம். அன்று இரவே பினாங்கு சென்றடைந்தோம்.

பயணப்படகின் வழியாகப் பினாங்குத் தீவை அடைந்தோம். 25 நிமிட பயணம் தமக்குப் புதிய பட்டறிவாக இருப்பதாக முனைவர் மகிழ்ச்சி அடைந்தார். மின் விளக்குகளில் ஒளிவெள்ளத்தில் பினாங்கின் அழகை முனைவர் மிகவும் மகிழ்ந்து பார்த்தார். பினாங்கிலிருந்து வெளிவரும் ‘உங்கள் குரல்’ இதழின் ஆசிரியர் கவிஞர் சீனி.நைனா முகம்மது அவர்களைச் சந்தித்து பேசினார். அவர்கள் இருவரும் மொழி, இலக்கியம், இலக்கணம், தொல்காப்பியம், எழுத்துச் சீர்திருத்தம், மலேசியாவில் தமிழின் நிலை என்பன போன்ற செய்திகளைப் பரிமாறிக்கொண்டனர்.

நாங்கள் கவிஞர் சீனி ஐயாவின் அலுவலகத்தை அடையும்போதுதான் தமிழகத்திலிருந்து ஐயா மறைமலை இலக்குவனார் அவருடன் தொலைபேசியிருக்கிறார். அப்போது, எழுத்துச் சீர்த்திருத்தத்தை அறிவிக்கப் போவதில்லை என வந்திருக்கும் அறிவிப்பு குறித்து பேசியதாகக் கவிஞர் ஐயா கூறினார். முனைவர் தம்மைச் சந்திக்க வருவதைக் கவிஞர், ஐயா மறைமலையாரிடம் தெரிவித்திருக்கிறார். முனைவருக்குத் தம்முடைய வாழ்த்தைத் தெரிவிக்குமாறு மறைமலை ஐயா தெரிவித்ததைக் கவிஞர் கூறினார்.

நள்ளிரவு 12.30க்கு கவிஞர் ஐயாவிடமிருந்து விடைபெற்று பாரிட் புந்தார் எனும் என் ஊரை வந்தடைதோம். முனைவரை விடுதியில் தங்கவைத்துவிட்டு வீடு திரும்பினேன்.

மறுநாள் காலையில் நான் பணியாற்றும் பள்ளியைப் பார்வையிட முனைவர் வந்திருந்தார். காலை 8.00 மணியளவில் ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில் “மாணவர்கள் கல்வியோடு தமிழ் மரபையும் கற்றுக்கொள்ள வேண்டும்” என வலியுறுத்திப் பேசினார். தமிழின் சிறப்பு, நாட்டுப்புறப் பாடல், சிறுவர் பாடல், தமிழர் விளையாட்டு, கணினிக் கல்வி, இணைய அறிவு ஆகியன அவருடைய உரையின் உள்ளடக்கங்களாக இருந்தன.

தலைமையாசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர், ஆசிரியர்கள், மாணவர்களுடன் முனைவர் மு.இளங்கோவன்

ஆசிரியர்களோடும் மாணவர்களோடும் முனைவர் கலந்துரையாடி மகிழ்ந்தார். பள்ளியைச் சுற்றிப் பார்த்ததோடு வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் நடவடிகைகளைப் பார்வையிட்டார். பள்ளியில் ஒவ்வொரு அறைக்கும் தமிழ் அறிஞர்கள், தலைவர்கள் ஆகியோரின் பெயர்கள் சூட்டப்பட்டு பெயர்ப்பலகையும் வைக்கப்பட்டிருந்தது தன்னை வெகுவாகக் கவர்ந்ததாகக் குறிப்பிட்டார். பாவாணர் பேரணி மண்டபம், நீலாம்பிகை மழலையர் மன்றில், முத்தெழிலன் கணினியகம், பாவேந்தர் பாடநூல் அறை, கம்பர் கருவள நடுவம் என பெயரிடப்பட்டிருந்த எல்லா அறைகளையும் படமெடுத்துக் கொண்டார்.
இர.திருச்செல்வம் வீட்டு நூலக அறையில் முனைவர்

பிறகு, காலை மணி 10.00க்கு எனது பள்ளியிலிருந்து விடைபெற்று, மலேசியத் தமிழறிஞர் இர.திருச்செல்வம் இல்லம் சென்றார். அவருடன், செலாமா சர் சூலான் தமிழ்ப்பள்ளிக்குச் சென்றார். சோழன் என்பதைத்தான் மலாய்மொழியில் சூலான் என்கிறார்கள். அங்கும் ஆசிரியர்களையும் மாணவர்களையும் சந்தித்து அளவளாவினார்.


பிறகு, அவ்வூரில் பிறந்து வளர்ந்து தமிழ்நெறிக் கழகம் எனும் அமைப்பைக் கண்டு, மலேசியாவில் தமிழ்த்தொண்டு செய்து மறைந்த பாவலர் அ.பு.திருமாலனார் வாழ்ந்த இல்லத்திற்குச் சென்றார். அங்கு, பாவலர் ஐயாவின் துணைவியார், மகள் ஆகியோரைச் சந்தித்தார். பின்னர், பாவலர் ஐயா நிறுவிய இயக்கப் பணிமணையைப் பார்வையிட்டு, பாவலருடைய நினைவகம் சென்றார். அங்கு பாவலருக்கு அமைதி அஞ்சலி செலுத்தினார். பாவலர் அ.பு.திருமாலனார் பற்றி தம்முடைய ‘அயலகத் தமிழறிஞர்கள்’ நூலில் முனைவர் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அங்கிருந்து நேராகப் புறப்பட்டு மீண்டும் பாரிட் புந்தாருக்குத் திரும்பி மதிய உணவை முடித்துக்கொண்டு பிற்பகல் 2.00 மணிக்கு, பாரிட் புந்தார் தமிழியல் நடுவத்தில் ‘தமிழ் வளர்ச்சிப் பணியில் அயலகத் தமிழறிஞர்கள்’ எனும் தலைப்பில் பொழிவுரை ஆற்றினார். தமிழறிஞர் இர.திருச்செல்வம் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. தமிழ் வாழ்வியல் இயக்கத் தலைவர் க.முருகையனும் உடனிருந்தார். நான் வரவேற்பும் முனைவரை அறிமுகப்படுத்தியும் பேசினேன்.



தமிழ் வளர்ச்சிப் பணிகளில் தமிழர்கள் மட்டுமின்றி அயலகத்தாரும் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர். அவர்களுள் கால்டுவெல், சான் இரால்சுடன், போப் அடிகளார், சுசுமு ஓனோ, சார்சு ஆர்ட்டு, கமில் சுவலபெல், பிரான்சுவா குரோ, அலெக்சந்தர் துபியான்சுகி போன்றவர்களும் அடங்குவர். வேற்று இனத்தாரும் நாட்டாரும் மதிக்கக்கூடிய, உலகத்தின் மிகச் சிறந்த மொழியாக விளங்கும் தமிழைத் தமிழர்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டும். தமிழைப் பற்றியும், உலகமெங்கிலும் நடைபெறும் தமிழ்ப் பணிகள் பற்றியும், தமிழுக்குத் தொண்டாற்றும் அறிஞர்கள் பற்றியும் இணையத்தில் செய்திகளைப் பதிவுசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

நேரப் பற்றாக்குறையின் காரணமாக ஒரு மணி இருபது மணித்துளிகள் மட்டுமே முனைவர் உரை நிகழ்த்தினார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு நானும் கோவி.மதிவரனும் முனைவர் ஐயாவை மகிழுந்தில் அழைத்துக்கொண்டு கிள்ளானை நோக்கிப் பறந்தோம். அங்கு திரு.மாரியப்பன் ஏற்பாட்டில் “நாட்டுப்புற இலக்கியம்” எனும் தலைப்பில் முனைவர் பேசினார். அங்கும் நானேதான் முனைவரை அறிமுகப்படுத்திப் பேசினேன். வருகைப் பேராசிரியர் முரசு.நெடுமாறன், மலாயாப் பல்கலைகழக விரிவுரைஞர் மன்னர் மன்னன், செம்பருத்தி குழுவைச் சேர்ந்த கிள்ளான் அருண் போன்றோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.


குறுகிய கால அளவீட்டில் முனைவர் மு.இளங்கோவன் இங்கே வந்திருப்பதால், அதிகமான நிகழ்ச்சியில் அவரால் கலந்துகொள்ள இயலாமல் போய்விட்டது. மேலே சொன்ன நிகழ்ச்சிகளைத் தவிர்த்து, 21.5.2010 காரிக்கிழமையன்று பந்திங் நகரில் இணையப் பயிலரங்கை வழிநடத்தினார். அன்று மாலையில் கோலாலம்பூர் சோமா அரங்கில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். 23.5.2010இல் ஈப்போவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ‘ஐம்பெருங்காப்பிய மாநாட்டில்” கலந்துகொள்கிறார். 24.5.2010இல் மலாயாப் பல்கலைகழக மாணவர்களுக்காக இணையப் பயிலரங்கை வழிநடத்துகிறார்.

இப்படியாக, முனைவருடைய மலேசியப் பயணம் மிகவும் பயனுள்ளதாகவும் பொருளுள்ளதாகவும் அமைந்திருக்கிறது. நான் பார்த்த அளவில் முனைவர் அவர்கள் நாட்டுப்புற இலக்கியம் குறித்து மிகவும் ஆழமாகவும் அழகாகவும் பேசுகிறார். நாட்டுப்புற இலக்கியம் குறித்து அவர் சொல்லும் பல செய்திகள் வியக்கச் செய்தன. சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் போன்றவற்றை மேற்கோள்காட்டி நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிக்காட்டும் விதம் மனத்தைக் கவருகின்றது. திரைப்பாடல்களில் நாட்டுப்புறப் பாடல்களின் தாக்கம் பேரளவில் இருப்பதை முனைவர் சுவைபட எடுத்துச் சொன்னார்.

எழுத்தில் மட்டுமல்லாது பாடுவதிலும் இவர் வல்லவர் என்பது தெரிந்தது. என்னமாகப் பாடுகிறார் தெரியுமா? வாய்ப்புக் கிடைத்தால் இவர் தாராளமாகத் திரைப்படங்களில் பின்னணி பாடலாம். அந்த அளவுக்குத் தேர்ந்தவராக இருக்கிறார். நாட்டுபுறப் பாடல்களையும், சங்கப் பாடல்களையும், செய்யுள்களையும், திரைப்பாடல்களையும் மாறிமாறிப் பாடியும், ஒன்றை ஒன்றோடு ஒப்பிட்டுப் பாடியும் விளக்கிக் காட்டும் இவருடைய உரையை மணிக்கணக்கில் சலிக்காமல் கேட்கலாம்.

இணையத்தில் தமிழின் பயன்பாடு பற்றியும், வலைப்பதிவு எழுதுவது குறித்தும் மிகவும் எளிமையாக இவர் விளக்கமளிக்கிறார். தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட இணையப் பயிலரங்குகளை நடத்திய பட்டறிவு இவருக்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது. அதனால்தானோ என்னவோ, தமிழகத்தில் ‘வெட்டுரு’ (கட் அவுட்) வைத்து வரவேற்கும் அளவுக்கு இவர் இணையப் பயிலரங்கு நடத்திப் புகழ்பெற்றிருக்கிறார் போலும்.

மொத்தத்தில், முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் மலேசிய வருகை மிகவும் மகிழ்ச்சியானதாகவும் பயன்மிக்கதாகவும் அமைந்திருக்கிறது. மிகவும் குறுகிய காலமே அவர் வந்திருக்கிறார் என்ற குறையைத் தவிர வேறொன்றுமில்லை. அவரிடமிருந்து மலேசியத் தமிழர்கள் பெற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கின்றன.

ஆகவே, அடுத்த முறை நீண்ட விடுமுறை எடுத்துக்கொண்டு அவர் மலேசியா வரவேண்டும்; நாடு முழுவதும் எல்லா ஊர்களுக்கும் சென்று பல மேடைகளில் சொற்பொழிவுகள் ஆற்றி தமிழ் விருந்து பரப்புவதோடு, இணையப் பயிலரங்குகளும் நடத்தி மலேசியாவில் தமிழ்மணம் செழிக்க துணைசெய்ய வேண்டும் என முனைவர் மு.இளங்கோவன் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

Blog Widget by LinkWithin