Monday, August 31, 2009

இந்நாள் சுதந்திரச் சிந்தனைக்காக.. அறிஞர் அண்ணா உரை விருந்தாக..

நமது நேசத்திற்குரிய நன்நாடாம் மலேசியத் திருநாட்டின் 52ஆம் சுதந்திர நாள் விழாவைக் கொண்டாடி மகிழும் மலேசியர்கள் அனைவருக்கும் திருத்தமிழ் வழி எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.




இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நன்நாளில் நமது அனைவருடைய சிந்தனைக்காக ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உரையினை இங்கே பதிவிடுகின்றேன்.

1965இல் பேரறிஞர் அண்ணா அவர்கள் இங்கு வந்தார். அப்பொழுது, மலேசியத் தமிழ் மக்களுக்காக சொன்ன சிந்தனைகளை இன்றைய தலைமுறைகளும் அறிந்துகொள்வதற்கு இது உதவும். அதோடு, பேரறிஞர் அண்ணாவின் கூற்று இன்றும் நமக்குத் தேவையான சிந்தனை ஊற்றாகவும் இருக்கிறது.

இந்த அறிமுகத்தோடு, இன்றைய விடுதலைக் கொண்டாட்ட நாளில், பேரறிஞர் அண்ணாவின் அன்றைய உரையைக் கேட்போம்; உளமாற சிந்திப்போம். உண்மை மலேசியராய் ஒன்றுபட்டு வாழ்வோம்.



பேரறிஞர் அண்ணா மலேசியாவுக்கு வந்தபோது, அவரை வரவேற்க மலேசியத் தமிழர்கள் கடலலையென திரண்டனர். மெர்டேக்கா அரங்கில் கூடியிருந்த 15,000க்கும் மேற்பட்ட மலேசியத் தமிழர்கள் முன்னிலையில் "உலகமெங்கிலும் தமிழர்கள் இருக்கிறார்கள்; ஆனால் மலேசியாவில்தான் வாழ்கிறார்கள்" என்று அண்ணா பேசிய பேச்சு வரலாற்றுச் சிறப்புமிக்கது.

அண்ணா மலேசியாவுக்கு வந்ததன் நினைவாகப் பேரா மாநிலத்தில் பாரி நதி (Sungai Pari) எனுமிடத்தில் ஒரு பாலத்திற்கு அவருடைய திருப்பெயர் (*Jambatan C.N.Annadurai) சூட்டப்பட்டுள்ளது குறிக்கத்தக்க வரலாறு.
*Jambatan (மலாய்மொழி) = பாலம்

Thursday, August 27, 2009

சுதந்திர மலேசியாவில் தமிழர்கள் நன்மை அடைந்துள்ளனரா?


சுதந்திர மலேசியாவில் மற்ற இனங்களைப் போல தமிழர்களும் நல்ல வளத்தோடு வாழ்கின்றனர்; செல்வச் செழிப்போடு இருக்கின்றனர்; எல்லா நன்மைகளையும் அடைகின்றனர் என்று சிலர் சொல்கிறார்கள்.

அதேவேளையில், மற்ற இனங்கள் போல தமிழர்கள் இன்னும் முன்னேறவில்லை; எதற்கெடுத்தாலும் போரட்டம் ஓயவில்லை; தமிழர்கள் இன்னும் முழு நன்மையடையவில்லை என்று பலர் கருதுகிறார்கள்.

இவ்விரண்டு கருத்தையும் சிந்திப்பதற்கான காலத்தையும் களத்தையும் அமைத்துக் கொடுக்கும் வகையில் ‘பட்டிமன்றம்’ நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாட்டின் 52ஆம் ஆண்டுச் சுதந்திர நாள் சிறப்புப் பட்டிமன்றமாக இது நடைபெறும் என ஏற்பாட்டாளர் பாவலர் செ.குணாளன் அறிவித்துள்ளார்.

சுதந்திர மலேசியாவில் தமிழர்கள் அதிகம் நன்மையடைந்துள்ளனர் என்பதுதான் இந்தப் பட்டிமன்றத்தின் தலைப்பு. தமிழ் வாழ்வியல் இயக்கத் தலைவரும் – சிறந்த மேடைப் பேச்சாளரும் – பல பட்டிமன்றங்களில் நடுவராகப் பணியாற்றி வட மலேசிய மக்களிடையே நன் அறியப்பட்டவருமாகிய தமிழ்த்திரு.க.முருகைனார் இந்தப் பட்டிமன்றத்திற்கு நடுவராகப் பணியாற்றவுள்ளார்.

*இதில் பேசவுள்ள பேச்சாளர்களில் இருவர் மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாள்:- 31-8-2009 திங்கள் (பொது விடுமுறை)

நேரம்:- இரவு மணி 7.00

இடம்:- ஸ்ரீ மாரியம்மன் மண்டபம், பட்டர்வொர்த்து.



சிறப்புப் பட்டிமன்ற அழைப்பிதழ்களைப் பெற்றுக்கொள்ள 013-4853128 / 016-4813317 என்ற கைப்பேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.

வாதம் – எதிர்வாதம் – கருத்துமோதல் – நகைச்சுவை நிறைந்த சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் இந்தச் சிறப்புப் பட்டிமன்றத்திற்கு அனைவரும் அழைக்கப்படுகின்றனர்.

Tuesday, August 25, 2009

ஓலைச்சுவடிகளின் தோற்றமும் தொடர்ச்சியும்:- கோலாலம்பூரில் கருத்தரங்கு


சுவடியியல் துறை தமிழர்களின் வரலாற்றோடும் வாழ்வியலோடும் நெருங்கியத் தொடர்புடையது. நமது மலேசியாவில் சுவடியியல் பற்றிய அறிகையானது அறவே இல்லை எனும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. அது தமிழக மக்களுக்கே உரியது என்ற எண்ணமும் நம்மிடையே உள்ளது.


ஆனால், நமது மலேசியத் தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்கள் சிலரும் சுவடியியல் துறையில் ஆழ்ந்து ஈடுபட்டு தமிழ்நாடு வரையில் சென்று, ஆய்வுகள் நடத்தி வருகின்றனர் என்றால் பெரும்பாலோருக்கு வியப்பாக இருக்கலாம். ஓலைச்சுவடிகள் குறித்த ஆய்வில் கண்ட உண்மைகளையும் அரிய தகவல்களையும் மலேசியத் தமிழர்களுக்குப் பரப்பும் எண்ணத்தில் ஒரு மாபெரும் நிகழ்ச்சி கோலாலம்பூர், மலாயாப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெட்டாலிங் ஜெயா தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் ஏற்பாட்டில், மலாயாப் பல்கலைகழகத் தமிழ்ப் பேரவையின் ஆதரவுடன் “ஓலைச்சுவடிகளின் தோற்றமும் தொடர்ச்சியும்” என்ற அரியதோர் கருத்தரங்கம் விரைவில் நடைபெறவுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

நாள்:-
29-8-2009 (காரிக்கிழமை)
நேரம்:-
காலை மணி 8.30 – மாலை 4.30 வரை
இடம்:-
பெர்டானா சிஸ்வா அரங்கம், மலாயாப் பல்கலைக்கழகம்
கட்டணம்:-
RM20.00 (இருபது வெள்ளி) மட்டுமே


இக்கருத்தரங்கம் மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டு நடத்தப்படுகிறது.

1.சுவடியியலை மலேசியத் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்துதல்.
2.ஓலை சோதிடம் / நாடி சோதிடம் பற்றிய குழப்பங்களுக்குத் தெளிவு காணல்
3.மலேசியத் தமிழர்கள் சுவடியியல் துறையில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளைக் கண்டறிதல்.

மலேசியாவில் முதன்முறையாக நடைபெறவிருக்கும் இந்த அரிய கருத்தரங்கத்தில் மூன்று ஆய்வுரைகள் இடம்பெறவிருக்கின்றன.

1.சுவடியியல் ஓர் அறிமுகம் (முனைவர் மோ.கோ.கோவைமணி, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்)

2.மலேசியாவில் சுவடியியல் (திரு.கோவி.சிவபாலன், முதுநிலை விரிவுரைஞர், மலாயாப் பல்கலைக்கழகம்)

3.சுவடியியலும் சோதிடமும் (முனைவர் தி.மகாலட்சுமி, சுவடியியல் துறை ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை)

இவற்றோடு, திரு.சி.ம.இளந்தமிழ் அவர்கள் கைவண்ணத்தில் காண்பதற்கரிய படங்களும் காட்சிகளும் விளக்கமும் கணினி வெண்திரைக் காட்சியாகக் காட்டப்படும்.

மேல்விளக்கங்களுக்கும் தொடர்புக்கும்:-
இரா.சரவணன்
(019-6607578) / சு.நவராசன் (017-3693737) /
இரா.செல்வசோதி (019-2267579) / மின்னஞ்சல்:- suvadi2009@gmail.com
**********

ஓலைச்சுவடி என்றால் பெரும்பாலோருக்கு உடனே நினைவைத் தட்டும் விடயம் சோதிடம்தான். ஆனால், ஓலைச்சுவடி என்பது சோதிடத்திற்கு மட்டுமே உரியதா? என்று கேட்டால் இல்லை என்பதே பதிலாகும்.

உண்மையில், ஓலைச்சுவடிகள் தமிழர்களின் வரலாற்று ஆவணமாகவும் வாழ்வியல் கருவூளமாகவும் இருக்கின்றன என்பதை நம்மில் பலர் அறிந்திருக்கவில்லை. தமிழர் மரபுகளும் விழுமியங்களும் ஓலைச்சுவடிகளில் பதிவுகளாக இன்றும் இருக்கின்றன. அவற்றை அறிஞர் பெருமக்கள் தொடர்ந்து ஆய்வுசெய்து வருகின்றனர்.

தமிழ் முன்னோர்கள் இலக்கியம், இலக்கணம், மருத்துவம், ஆன்மிகம், கணிதம், கணியம் (சோதிடம்), வரலாறு, கண்டுபிடிப்பு என அனைத்தையும் ஓலைச்சுவடிகளில் அவணப்படுத்தி (Documentation) வைத்துள்ளனர்; அந்த ஆவணங்கள் அழிந்துபோகாமல் காத்து வைத்துள்ளனர்; அதற்காக நேர்த்தியாகத் திட்டமிட்ட நடைமுறைகளை வகுத்து வைத்துள்ளனர். இன்று, சுவடியியல் என்ற பெயரில் இந்தப் பழங்கால ஆவணங்கள் ஆய்வுக்கும் மறுபதிப்பிற்கும் உட்படுத்தப்படுகின்றன.

இந்தச் சுவடியியல் கல்வெட்டு, செப்பேடு எனவும் விரிந்து நிற்கிறது. ஆயினும், இவற்றுள் இன்றும் ஆய்வாளர்களின் கவனத்தை மிகவும் ஈர்ப்பதாக இருப்பது ஓலைச்சுவடிகளே எனலாம்.

இன்றும் தமிழ் நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஓலைசுவடிகள் ஆய்வுச் செய்யப்படுகின்றன. அதுபோலவே, இன்னும் பல ஆயிரம் ஓலைச்சுவடிகள் படிப்பார் இல்லாமலும் பதிப்பார் இல்லாமலும் கிடக்கின்றன. அவற்றுள் பல சிதிலமடைந்து அழிந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு ஓலைச்சுவடியின் சிதைவிலும் நமது வரலாறும் விழுமியங்களும் அழிகின்றன என்பது மிக மிக வருத்தமான செய்தியாகும்.

தமிழர்களின் மரபுவழிச் சொத்துகளான ஓலைச்சுவடிகளை அழிவிலிருந்து காக்க வேண்டிய பொறுப்பு தமிழகத் தமிழர்களுக்கு மட்டுமின்றி நம்மைப் போன்ற அயலகத் தமிழர்களுக்கும் உண்டு. அதற்கு, குறைந்தளவு சுவடியியல் பற்றிய அடிப்படை அறிவையாவது நாம் பெற்றிருக்க வேண்டும்.

மலேசியத் தமிழர்களுக்கும் ஓலைச்சுவடிகளுக்கும் ஏறக்குறைய 20ஆம் நூறாண்டுத் தொடக்கத்திலிருந்து உறவு இருந்து வருகின்றது. நம் நாட்டிலும் இன்னும் பலர் அவர்களின் முன்னோர்கள் விட்டுச்சென்ற ஓலைச்சுவடிகளை இன்றும் வைத்துள்ளனர். அவற்றை, முறையாகப் படித்தும் பதிப்பித்தும் ஆய்வுகளுக்கு உட்படுத்தினால், வியந்துபோகும் அளவுக்குப் பற்பல செய்திகளையும் தரவுகளையும் திரட்டுவதற்குரிய வாய்ப்புக் கிடைக்கக்கூடும்.

நமது நாட்டில் ஓலைச்சுவடிகளின் வழியாக சித்த மருத்துவம், நாடி சோதிடம் என சில செயற்பாடுகள் நடப்பதைக் காணமுடிகிறது. ஆனால், இவற்றையும் தாண்டி நமது மொழிக்கும் இனத்துக்கும் பயன்தரும் பல்வேறு கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர முடியும்.

இதற்கெல்லாம், மிகவும் அடிப்படையானது சுவடியியல் பற்றிய அறிவும் தெளிவும்தான். அந்த வகையில், ஓலைச்சுவடிகளின் தோற்றம் பற்றியும் அவற்றின் தொடர்ச்சியாக இருக்கக்கூடிய பயன்கள் பற்றியும் தெரிந்துகொள்வதற்கு மலேசியத் தமிழர்களாகிய நமக்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அனைவரும் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு ஓலைச்சுவடிகள் பற்றிய அரிய உண்மைகளை அறிந்து பயனடையலாம்.
நிகழ்ச்சிக்குத் திரண்டு வருக.. தமிழர் பெருமக்களே..!

Saturday, August 22, 2009

பறிபோவது இந்திய ஆய்வியல் துறையா? நமது இனத்தின் மானமா?



மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் ஏற்பட்டுள்ள பனிப்போர் – பதவிப்போர் இன்று எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதுமட்டுமா? தமிழர்களின் அடிவயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறது!

அங்கே ஏற்பட்டுள்ள உட்பகையின் காரணமாக, இந்திய ஆய்வியல் துறையே பறிபோகும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. என்றுமே இல்லாத ஒன்றாக, இப்போது அத்துறைக்கு தமிழரல்லாத ஒருவர் தலைவராக நியமிக்கப்படுள்ளார். இதனினும் கொடுமை, ‘இந்திய ஆய்வியல் துறை’ என்ற பெயர் நீக்கப்பட்டு தென்னாசிய ஆய்வியல் துறை என்று மாற்றப்படவுள்ளதாகத் தகவல் கசிந்திருகின்றது.

இந்த நிலையில், “இந்திய ஆய்வியல் துறை நிலைநிறுத்தப்பட வேண்டும்; அதன் தலைவராக ஒரு தமிழரே நியமிக்கப்பட வேண்டும்” எனப் பொது இயக்கங்கள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன. இந்த இழுபறிக்கு என்ன விடிவு? எதுதான் முடிவு?

சரி, அதற்கென்ன இப்போது என்கிறீர்களா?

மலேசியத் தமிழருக்கும் தமிழுக்கும் உரிமையாக இருக்கின்ற இந்திய ஆய்வியல் துறைக்கு வாழ்வா? சாவா? என்கிற விளிம்பில் நின்றுகொண்டு, அதன் வரலாற்றைச் சற்றுத் திரும்பிப் பார்க்கிறது இந்தப் பதிவு! இன்றைய இளையோருக்கு நேற்றை நிகழ்வுகளைத் தூசுதட்டித் தருகிறது இந்த இடுகை! தொடந்து படிக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன்.


மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று தனியாக ஒரு துறை செயல்படுவது என்பது பெரிய போராட்டத்தின் வழியாகக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இந்த வரலாற்றுச் சுவடுகள் மறைந்துபோனதால் தானோ என்னவோ, இன்றையத் தமிழர்களிடம் மொழிமானமும் இனமானமும் மழுங்கிப்போய்விட்டது போலும்!

சிங்கப்பூரில் செயல்பட்ட ஏழாம் கிங் எட்வர்டு (King Edward VII-1905) மருத்துவக் கல்லூரியும் இராபில்சு கல்லூரியும் (Raffles College-1929) இணைத்து, அத்தோபர் மாதம் 8ஆம் நாள் 1949ஆம் ஆண்டில் சிங்கையில் உருவாக்கப்பட்டதுதான் மலாயாப் பல்கலைக்கழகம்.

அதில், தமிழ்த்துறையை ஏற்படுத்துவதற்கு அன்றைய மலாயா, சிங்கைத் தமிழர்கள் எழுச்சியுடன் போராடினர். இந்தப் போராட்டத்தை அமரர் தமிழவேள் கோ.சாரங்கபாணி (கோ.சா) அவர்களின் ‘தமிழ் முரசு நாளேடு’ முன்னெடுத்து நடத்தியது. அதற்காக அன்றையத் தமிழர்கள் பெரும் அளவில் ஆதரவையும் நிதியையும் திரட்டிக் கொடுத்தனர்.

இதன் விளைவாக, 1956ஆம் ஆண்டில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வியல் துறை நிறுவப்பட்டது. பின்னர், 1959இல் மலாயாப் பல்கலைக்கழகம் கோலாலம்பூருக்கு இடம் மாறி வந்தது.

தொடக்கத்தில், தமிழ்த் துறை நிறுவப்பட்டபோது அதற்கு தகவுரைகள் (ஆலோசனை) வழங்க, இந்தியாவிலிருந்து நீலகண்ட சாத்திரியார் (Neelakanda Shasthri) மலாயா வந்தார். தமிழுக்காக உருவாக்கப்பட்ட துறையில் பயிற்றுமொழியாக ‘சமற்கிருதத்தை’ (Sanskrit) வைக்க வேண்டும் என அவர் பரிந்துரை செய்தார்.

இந்தப் பரிந்துரைக்கு எதிராகப் போராட்டம் வெடித்தது. பெரும்பான்மைத் தமிழர்களிடமிருந்து மாபெரும் எதிர்ப்பு அலை கிளம்பியது. மீண்டும் ‘தமிழ் முரசு’ நாளிகையின் வழியாக அமரர் கோ.சாரங்கபாணி களமிறங்கினார். அதோடு, காராக்கு(Karak) அகில மலாயாத் தமிழர் சங்கம் முதலிய தமிழ் அமைப்புகள் கல்வி அமைச்சுக்கு நேரடியாகச் சென்று கோரிக்கை மனுவைக் கையளித்தன.
  • தமிழ் மக்களின் ஒன்றுபட்ட எழுச்சியின் வாயிலாக அரசாங்கத்தால் தமிழ் ஏற்றுக்கொள்ளப்பட்டது; பயிற்றுமொழியாகத் ‘தமிழ்’ அரியணையில் அமர்த்தப்பட்டது.


இந்த மகிழ்ச்சியான செய்தியைப் “பல்கலைக்கழகத்தில் தமிழுக்கே முதன்மை” என்று சிங்கை தமிழ் முரசு முதல் பக்கத்தில் வெளியிட்டது. இந்தச் செய்தியால் ஒட்டுமொத்தத் தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர்.

இதோடு போராட்டம் ஓய்ந்ததா என்றால், இல்லை! தமிழுக்காக உருவாக்கப்பட்ட துறையில் தமிழ் நூலகம் அமைப்பதற்கு இன்னொரு எழுச்சி இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. அதே தமிழ் முரசு மூலம் அமரர் கோ.சா ‘தமிழ் எங்கள் உயிர்’ எனும் முழக்கத்தோடு நிதி திரட்டும் இயக்கத்தைத் தொடங்கினார். இந்த நிதிக்கு ஒவ்வொரு தமிழரும் ஆளுக்கு ஒரு வெள்ளி தரவேண்டும் என வலியுறுத்தினார்.

அமரர் கோ.சா.வின் வேண்டுகையை ஏற்று மொழி உணர்வும் இன உணர்ச்சியும் கொண்ட மலாயாத் தமிழர்கள், நாடு முழுவதும் நிதியைத் திரட்டிக் கொடுத்தனர். இந்த முயச்சிக்கு ஆதரவாக அகில மலாயா தமிழர் சங்கம், தோட்டத் தொழிற்சங்கங்கள், தமிழாசிரியர்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் நிதி வழங்கினர். இப்படியாகத் திரட்டப்பட்ட பெரும் நிதியைக் கொண்டு மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ் நூலகம் வெற்றியோடு உருவாக்கப்பட்டது.
*(இன்றும்கூட நம் நாட்டில் இயங்கும் மிகப்பெரிய நூலகம் என்ற சிறப்பைப் பெற்றது மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ் நூலகம்தான்.)

இத்தனைக்கும் இடையில், தமிழ்த்துறையில் படிப்பதற்கு மாணவர்களைச் சேர்க்கும் பணியும் நடந்தது. அன்று நாடுதழுவிய நிலையில் நடைபெற்ற தமிழர் திருநாள் விழாக்களில் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்த்துறையில் மாணவர்கள் குறையும் போதெல்லாம் தமிழர் சார்ந்த இயக்கங்களின் அன்றையத் தலைவர்கள் ‘பல்கலைக்கழத்தில் தமிழை ஒரு பாடமாகப் படிக்க வேண்டும்’ என்று ஊர்கள்தோறும், தோட்டங்கள் தோறும் இளைஞர்களுக்கு ஊக்கமூட்டி உற்சாகப்படுத்தினர்.

அன்று தொடங்கி இன்று வரையில் மலாயாப் பல்கலைகழகத்தில் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் சேர்ந்து தமிழை முதன்மைப் பாடமாக எடுத்துப் பயின்று பட்டதாரிகளாக உருவாகி இருக்கின்றனர். இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டங்கள் வரையில் தமிழிலேயே படிப்பதற்கான சூழல் மலாயாப் பல்கலைக்கழகத்தில் இன்று உருவாகி இருக்கிறது. மேலும், மொழியியல் புலம் என்ற மற்றொரு துறையிலும் தமிழ் பயிற்றுவிக்கப்படும் நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது.

இவ்வாறு, பல தடைகளையும் போராட்டங்களையும் கடந்து வந்திருப்பதுதான் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை. காலந்தோறும் அதற்கு நெருக்கடிகள் ஏற்பட்டு வந்திருந்தாலும், தமிழ் மக்களின் ஒற்றுமையும் உணர்வும்தாம் அரணாக இருந்து அத்துறையை மீட்டுத் தந்திருக்கிறது; உயிரோடும் உயிர்ப்போடும் காத்து வந்திருக்கிறது என்றால் மிகையில்லை.

அரைநூற்றாண்டுக் கால வரலாற்றைப் பெற்றிருக்கும் நமது இந்திய ஆய்வியல் துறை, இன்று பல நெருக்கடிகளுக்கு இடையில் தவித்துக் கொண்டிருக்கிறது! சிக்கல்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டிருக்கிறது! இந்திய ஆய்வியல் துறை பறிபோகும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது!

அதனைக் காக்கவும் காப்பாற்றவும் திறனற்றவர்களா நாம்?
அதனைக் காக்கவும் காப்பாற்றவும் வழியற்றவர்களா நாம்?
அதனைக் காக்காவிட்டால் வரலாற்றுப் பழி ஆகாதா? பிழை ஆகாதா?
அதனைக் காப்பாற்றாவிட்டால் அடுத்தத் தலைமுறை நம்மைக் கேள்வி கேட்காதா? நமது முகத்தில் காறி உமிழாதா?

நமது முன்னோர்களின் வியர்வையிலும் செந்நீரிலும் உருவாக்கப்பட்ட.. உண்டியல் காசிலும் உழைத்தப் பணத்திலும் எழுப்பப்பட்ட.. ஒன்றுபட்ட உணர்வின் எழுச்சியிலும் மொழி – இன மான உணர்ச்சியிலும் நிறுவப்பட்ட.. நமது இதயங்களோடும் உணர்வுகளோடும் கலந்துவிட்ட.. இந்திய ஆய்வியல் துறை.. மிகக் குறைந்த ஆயுளோடு.. வரலாற்றுத் தடத்தின் ஈரம் காய்வதற்கு முன்பே.. நமது கண்முன்னாலேயே..

காணாமல் போகலாமா?

அப்படியே போனால்..!

பறிபோகப் போவது இந்திய ஆய்வியல் துறை மட்டுமல்ல!

ஒட்டுமொத்த மலேசியத் தமிழரின் மானமும்தான்!!

பி.கு:-இந்தச் செய்தியை மறுபதிவிட்டு பின்வரும் வலைப்பதிவுகள் வெளியிட்டுள்ளன. அவர்களுக்கு மனமார்ந்த நன்றி மொழிகின்றேன்.

-சுப.நற்குணன்

1.மலேசியாஇன்று.காம்

2.சந்ருவின் பக்கங்கள்

Saturday, August 15, 2009

பண்பாட்டை வரலாற்றை உள்ளிக்கொடு; சொரணை படுமாறு கிள்ளிக்கொடு

  • மனதைத் தொட்ட மரபுக்கவிதை - 1

மலேசியத் திருநாட்டின் மூத்த - முன்னணிப் பாவலர்களுள் ஒருவர்; தம் மரபுக் கவிதைகளால் மலேசிய இலக்கியத்தின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் இன்றுவரையில் நீரூற்றி வருபவர். மலேசியத் தமிழர்களின் பிற்போக்கு எண்ணங்கள், கொடுங்கேடுகள், மனச்சிதைவுகள், மரபுமீறல்கள் முதலியவற்றைக் கண்டு ‘கணைகளாகப்’ பாய்ந்தவர் – இன்றும் அதே வீறோடு நிமிர்ந்து நிற்பவர். ஆழந்த மொழிப் பற்றும் குழுகாய நோக்கும் கொண்டவர். தமிழர்தம் மரபியல் விழுமியங்களைக் காப்பதற்காக முன்னின்று குரல் கொடுப்பவர். இப்படி இன்னும் அடுக்கிச் சொல்லத்தக்கவர்; மரபுக்கவிதைத் துறையில் தனியொரு சாதனையை நிகழ்த்திக் காட்டியவர் கவிச்சுடர் காரைக்கிழார்.

அவர் எழுதி அண்மையில் நாளிகையொன்றில் வந்த மரபுக் கவிதை என் மனதைத் தொட்டது – உணர்வுகளைத் தட்டியது. அவ்வுணர்வுகளைப் பதிவாக்கும் முயற்சியில் மலர்ந்துதான் இந்தப் படைப்பு.

பொன்னென்றும் பூவென்றும் புதுப்பாட்டுத் தேனென்றும்
பொழுதெல்லாம் பாடிநிற்பான் – அவன்
புகழ்க்கூட்டம் கூடிநிற்பான் – அந்தத்
திண்ணென்ற தடியன்தான் திறம்கெட்டத் தமிழன்தான்
திசையெங்கும் மோடிவைப்பான் – தாய்க்கு
வசையெங்கும் தேடிவைப்பான்

என்று எடுத்த எடுப்பிலேயே, புதுமை - நவினம் என்ற பெயரில் புழுக்கறைகளைப் படைப்புகளாக வழங்கிவரும் திறங்கெட்டவர்களை நையப்புடைக்கிறார். வெறும் விளம்பரத்திற்கும் பணத்திற்கும் புகழுக்கும் மயங்கி அலையும் இந்தப் போக்கற்றப் படைப்பாளிகள் தாய்(மொழி)க்கு வசைதேடி வைப்பவர்கள் என்று சாடுகின்றார்.

இப்படிச் சாடும் அளவுக்குப் புதுமைப் படைப்பாளிகள் என்னதான் செய்துவிட்டார்கள்? என்று நாம் சிந்திக்கத் தொடங்கும் அடுத்த கணமே அவர்களின் கெடுபுத்திகளைப் பட்டியலாகப் பாட்டில் சொல்லுகிறார் இப்படி:-

கனியென்ற மணியிங்கே அணிசெய்தல் நனிகண்டும்
காய்நாடிக் கலக்கம்செய்வான் – மொழிக்
கலப்புக்கோர் உலக்கம்செய்வான் – இந்தப்
பிணியாளன் நாவெங்கும் புண்ணாகிப் புரையாகிப்
பிறசொல்லே புழக்கம்செய்வான் – அவனே
பித்தன் போல் முழக்கம்செய்வான்


இவ்வாறு, தமிழில் பிறமொழிச் சொற்களைக் கலந்து படைப்புகளை ஆக்குகிறார்கள். தமிழ்க் கலை இலக்கிய மரபுக்குள் அன்னியப் பண்பாடுகளைக் கலந்து தருகிறார்கள். தான் பெரிய ஆளாவதற்குத் தமிழையே அழிக்கும் அவலச்செயலைச் செய்கிறார்கள். இப்படியான கேடுகளை எல்லாம் நீட்டி முழக்கி நியாயப்படுத்தும் இவர்களைப் பிணியாளன் – பித்தன் எனப் பறைசாற்றுகிறார் கவிஞர்.

மொழிமானங்கெட்ட இவர்களை என்னசெய்யலாம்? என்று வழியும் சொல்லுகிறார்; கூடவே களுக்கென்று சிரிக்கவும் வைக்கிறார் அடுத்த கண்ணியில்.

எடுப்பார்கைப் பிள்ளைபோல் இருக்கின்றான் இவனாலே
இங்கிலீசு கூத்தாடுது – தமிழ்
இதுகண்டு வேர்த்தாடுது – உதை
கொடுப்பார்கள் கொடுத்தால்தான் குரங்காட்டம் நிற்குமெனில்
கொடுப்போமே எத்தாவது – ஓங்கிக்
கொடுப்போமே குத்தாவது!

எத்தும் குத்தும் விட்டால் போதுமா? இல்லை, அவர்களுக்கு நமது மரபு - வரலாறு – வாழ்வியல் – பண்பாடு பற்றி தகுந்த தெளிவுகளைச் சொல்லி வழிகாட்டவும் வேண்டும் என்கிறார். என்னதான் கேடுகளை அவர்கள் செய்தபோதும் தமிழினத்தில் பிறந்துவிட்ட உறவை எண்ணி தாயன்போடு அரவணைப்பும் செய்கின்றார் கவிஞர்.

தமிழ்மானம் மறைத்தானாம் தரங்கெட்ட வடநாட்டான்
தலைமீது கல்லேற்றினான்! – தென்னன்
தலைதூக்கச் சொல்லேற்றினான் – அந்தத்
தமிழ்வீரம் மணியாரம் தரிக்கும்நம் தமிழன்னை
தலைமீது முள்ளேற்றினான் – அடஓ!
தாங்காத சுள்ளேற்றினான்

பசிகண்டு பால்தந்த தாய்தன்னை இகழ்கின்ற
பதடியாய் இருக்கலாமா? – இந்தப்
பாரும்தான் பொறுக்கலாமா? – கண்ணில்
கசிகின்ற நீர்கண்டு மகனேநீ உன்தாயைக்
காப்பாற்ற மறுக்கலாமா? பகையைக்
கழுவேற்ற மறக்கலாமா?

புதுமை – நவினம் என்ற மாயைக்குள் சிக்குண்டு மனம்தடுமாறும் தமிழர்க்குக் குறிப்பாக இன்றைய இளையோருக்கு வழிகாட்ட வேண்டிய கடமையும் பொறுப்பும் தக்காருக்கு உள்ளது. யாரின் கருத்தையும் சொற்பேச்சையும் கேட்பதற்குக்கூட முரண்டுபிடிக்கும் வன்மத்தை மண்டைக்குள் ஏற்றிக்கொண்டு தலைக்கணம் பிடித்தலையும் இளையப் படைபாளிகள் இதனைக் கேட்பார்களா என்பது கேள்விக்குறியே. இருந்தாலும், சொல்லவேண்டியதைப் பதமாகவோ தேவைப்பட்டால் கடிந்தோ சொல்லித்தானே ஆகவேண்டும்.

வீட்டுக்குள் விளைகின்ற பயிர்போலும் பிள்ளைக்கு
வீரத்தைச் சொல்லிக்கொடு – தமிழின்
விவரத்தை அள்ளிக்கொடு – பத்துப்
பாட்டுக்குள் வருகின்ற பண்பாட்டை வரலாற்றைப்
பதமாக உள்ளிக்கொடு – சொரணை
படுமாறு கிள்ளிக்கொடு!

சொல்லியும் கேட்காத மூடர்களாக - முரட்டுப்புத்தியராக - மக்கட்பதடிகளாக இருப்பார்களேயானால் அதற்கும் வழி சொல்லுகிறார்; அதனை வலியுறுத்தியும் சொல்லுகிறார் கவிஞர்.

வீணைபோல் நாதமொழி தமிழைநீ – படிஎன்றே
விரட்டுகிறேன் ஏடா! தப்பா? – இதிலே
விட்டுவைத்தல் கூடாதப்பா? – நெஞ்சில்
விருப்பத்தால் குழைந்தாலும் தானாக
மாணஓரு மயிலிறகு போடாதப்பா! – ஒட்ட
வாலறுப்போம் வாடாகுப்பா!

இன்றையச் சூழலில், தமிழுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளையும் தாக்குறவுகளையும் இக்கவிதை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது. பெரியவர்களுக்கு – பண்பாளர்களுக்கு – பட்டறிவுள்ள நல்லோர்களுக்கு நமது தாய்மொழியும் மரபும் கலைபண்பாடும் அடைந்திருக்கும் இனி அடையப் போகும் நலிவும் நலக்கேடும் தெள்ளென தெரிகிறது. அதனால், மனம் அஞ்சுகின்றனர் – அழுகின்றனர் – ஆபத்தைத் தடுக்க ஆவன செய்கின்றனர்.

ஆனால், இளங்கன்று பயமறியாது எனச் சொன்னதுபோல, இளம் படைப்பாளர்களோ கலை, கவிதை, இசை, நடனம், எழுத்து, இலக்கியம், திரைப்படம், சின்னத்திரை என எந்தவகை படைப்பாக இருந்தாலும் மதம்பிடித்த யானையொன்று கரும்புத் தோட்டத்துள் புகுந்தது போல அழித்தொழிக்கின்றனர்; நமது மரபியல் விழுமியங்களைச் சிதைத்தொழிக்கின்றனர்.

  • மரபுக்கவிதை இன்னும் வரும்..

Tuesday, August 11, 2009

ஆசிரியர்களே இதோ வந்துவிட்டது 'தமிழ் ஆசிரியம் மடற்குழு'

மலேசியத் தமிழ் ஆசிரியர்களிடையே இணையத் தொடர்பை ஏற்படுத்தி, அதன்வழியாகக் கருத்தாடல்கள் - செய்தி பரிமாற்றம் - பணித்திற உறவுகள் - மின்னூடகத் தொடர்புகள் செய்துகொள்வதற்கு ஏதுவாக
'தமிழ் ஆசிரியம்' என்னும் மடற்குழு (News Group) உருவாகியுள்ளது.


தமிழ் ஆசிரியம் முகவரி:-

http://groups.google.com/group/aasiriyam?hl=ta


'தமிழ் ஆசிரியம்' வாயிலாக தமிழ்க்கல்வி, தமிழ்ப்பள்ளி, கற்றல் கற்பித்தல், ஆசிரியர் நலன், மாணவர் நலன் என இன்னும் பலவற்றின் தொடர்பான கருத்துகள் - செய்திகள் - விடயங்களைப் பரிமாறிக்கொள்வதற்கான அருமை வாய்ப்பு இதுவெனச் சொல்லலாம்.

மேலும், இன்றைய இணைய உலகத்தில் ஆசிரியர்கள் தகவல் அறிந்தவர்களாக இருக்கவும்; அறிந்த தகவல்களை இணைய மின்னூடகத்தின் வழியாக மற்றவரோடு பகிர்ந்துகொள்ளவும்; கல்வி, கற்றல் கற்பித்தல் முதலானவை தொடர்பாக சிந்திக்கவும்; தமிழ்க் கணினி இணையத்தில் ஆற்றலை வளர்த்துக்கொள்வதற்கும் 'தமிழ் ஆசிரியம்' உற்றத் துணையாக இருக்கும்.

மொத்தத்தில், 'தமிழ் ஆசிரியம்' மடற்குழுமம் ஆசிரியப் பெருமக்களுக்குப் பயன்மிக்க ஊடகமாக அமையும் என நிச்சியமாக நம்பலாம்.

*தமிழ் ஆசிரியம் மடற்குழுவில் உறுப்பினர் தகுதிகள் என்ன? அதன் விதிகள் என்ன?

1.மலேசியாவைச் சேர்ந்த ஆசிரியர்கள் அனைவரும் இம்மடற்குழுவில் உறுப்பினராகலாம்.
2.உறுப்பினர்கள் மட்டுமே மடற்குழுவைப் பார்வையிடவும் பங்கேற்கவும் இயலும்.
3.கருத்தாடல்கள் அனைத்தும் நல்லதமிழிலும் பண்பானதாகவும் இருக்க வேண்டும்.
4.ஆசிரியர்களோடு தொடர்புடைய எவ்வகை கருத்தாடலுக்கும் இங்கு இடமுண்டு.
5.தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தனியுரிமை உண்டு.
6.எழுதும் கருத்துகள் தனிப்பட்ட எவரையும் பெயர்ச்சுட்டிச் சாடுவதாக அமைதல் கூடாது.
7.தேவயற்ற கருத்துகளை அகற்றுவதற்கு நிருவாகக் குழுவினருக்கு உரிமையுண்டு.
8.உறுப்பினர் ஒருவர் ஆசிரியர் அல்லர் எனக் கண்டுபிடிக்கப்பட்டால் எந்த முன் அறிவிப்பும் இன்றி உடனடியாக உறுப்பியம் நீக்கப்படும்.
9.விதிகளை மீறும் உறுப்பினர்களை நீக்குவதற்கு நிருவாகத்திற்கு முழு உரிமையுண்டு.

*இதைத் தவிர வேறு எதேனும் உண்டா?

1.தமிழ் ஆசிரியம் மடற்குழுவின் உறுப்பினராக, உங்களிடம் கூகிள் மின்னஞ்சல் (gmail) முகவரி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் புதிதாக உருவாக்கிக் கொள்ளலாம்.

2.கணினியில் தமிழில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும். அதற்கு, முரசு, தமிழா போன்ற தமிழ்ச் செயலிகளைப் (Tamil Software) ஒருங்குறி (Unicode) முறையில் பயன்படுத்தலாம்.

3.கணினியில் தமிழில் தட்டச்சு செய்ய முடியாதவர்கள் முயன்றால் விரைவில் பழகிக் கொள்ளலாம். அதற்கு, கீழ்க்காணும் இணைப்புகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.




4.இணையத்தில் தட்டச்சு செய்தால் அதனைப் படி எடுத்து (copy) பிறகு வேண்டிய இடங்களில் ஒட்டிக் (paste) கொள்ளலாம்.

*தமிழ் ஆசிரியம் மடற்குழுவில் உறுப்பினர் ஆவது எப்படி?

இது மிகவும் எளிமையானது. கீழே உள்ள படிநிலைகளைப் பின்பற்றினாலே போதும். முதலில் தமிழ் ஆசிரியம் முதற்பக்கம் செல்லவும்.


படி 1

படி 2

படி 3

படி 4

இப்போது உங்களுடைய விண்ணப்பம் தமிழ் ஆசிரியம் நிருவாகத்திற்கு அனுப்பப்படும். பிறகு, உங்கள் கூகில் அஞ்சல் பெட்டகத்தை (gmail inbox) அன்றாடம் பார்த்துக்கொண்டே இருக்கவும். ஒரு வாரக் காலத்திற்குள் உங்களுக்குப் பதில் கிடைக்கும்.

*தமிழ் ஆசிரியம் உறுப்பினர் ஆகிவிட்ட பிறகு என்ன செய்ய வேண்டும்?

உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல்(gmail) வரும்.

அதன் பிறகு நீங்கள் உறுப்பினர் என்ற தகுதியுடன் ‘தமிழ் ஆசிரியம் மடற்குழு’ வில் வலம் வரலாம்; இணையம் வழி நமது ஆசிரிய நண்பர்களுடன் கலந்துரையாடலாம்; கருத்துப் பரிமாற்றம் செய்யலாம்.


*மேலே வட்டமிடப்பட்ட பகுதியில் காணப்படும் எல்லா நடவடிக்கையிலும் நீங்கள் பங்கேற்கலாம். அவை என்னவென்று இனி பார்ப்போம்.

1.முகப்பு:- தமிழ் ஆசிரியம் முகப்புப் பக்கம் இது.

2.கருத்தாடல்:-இந்தப் பகுதியில் பல்வேறு தலைப்பில் கருத்தாடல் செய்யலாம். அங்கு காணப்படும் தலைப்புகளைச் சொடுக்கி; படித்துப் பார்த்து; உங்கள் கருத்துகளை எழுதலாம். அப்படி கருத்து எழுத விரும்பினால் நீங்கள் படிக்கும் செய்திக்குக் கீழே (reply) என்பதைச் சொடுக்கி உங்கள் கருத்தை எழுதி அனுப்பலாம். தமிழ் ஆசிரியம் நிருவாகத்தின் ஒப்புதலுக்குப் பின் உங்கள் கருத்து வெளியிடப்படும்.

3.கருத்தாடல்:- பகுதியில் நீங்களும் புதிய கருத்தாடலைத் / தலைப்பைத் தொடக்கி வைக்க முடியும். அதற்கு, கருத்தாடல் என்பதைச் சொடுக்கினால் அதன் கீழே தெரியும் (+new post) என்பதைச் சொடுக்கி, கொடுக்கப்படும் தட்டச்சுப் பெட்டியில் தலைப்பு மற்றும் செய்தியை எழுதி அனுப்பலாம். தமிழ் ஆசிரியம் நிருவாகத்தின் ஒப்புதலுக்குப் பின் உங்கள் செய்தி வெளியிடப்படும்.

4.பக்கங்கள் / கோப்புகள்:- இப்பகுதியில் உங்களிடமுள்ள நல்ல செய்திகள், தகவல்கள், படங்கள், கோப்புகள் ஆகியவற்றை மற்ற உறுப்பினர்களோடு பகிர்ந்துகொள்ள முடியும். (இப்போதைக்குத் தமிழ்மொழிப் பாடக் கலைத்திட்டம், இலக்கண இலக்கிய விளக்கவுரை, தமிழர் கலை/விளையாட்டு, தமிழ்க் கலைச்சொற்கள், மன அழுத்தம், தன்னிகரில்லாத் தமிழ், தாய்மொழிக் கல்வி முதலிய தலைப்புகளில் பக்கங்கள் சேமிக்கப்பட்டுள்ளன )

5.About this group:- இதில் ‘தமிழ் ஆசிரியம் மடற்குழு’ பற்றிய விவரங்கள் இருக்கும்.

6.Edit my membership:-இங்கு உங்களைப் பற்றிய விவரங்களைக் கொடுக்கவும். படத்தையும் இணைக்கலாம். இங்கு முடியாவிடில் சற்று மேலே உங்கள் மின்னஞ்சல் முவரிக்குப் பக்கத்தில் (Profile) என்று இருப்பதைத் தேடிப்பார்த்து அங்கேயும் உங்கள் விவரத்தைச் சேமிக்கலாம்.

7.Invite members:- இது உங்கள் நண்பர்களை (ஆசிரியர்கள் மட்டும்) ‘தமிழ் ஆசிரியம் மடற்குழு’வுக்கு அழைப்பதற்கு உள்ள பகுதி. உங்கள் நண்பர்களை அழைத்து உறுப்பினராக சேர்க்கலாம்.


இன்னும் என்ன ஆசிரிய நண்பர்களே...
இன்றே.. இப்போதே.. 'தமிழ் ஆசிரியம்' உறுப்பினர் ஆகலாமே!!

உங்களை அன்போடு வரவேற்க 'தமிழ் ஆசிரியம்' ஆவலுடன் காத்திருக்கிறது.

'தமிழ் ஆசிரியம்' உறுப்பினர் ஆக இங்கே சொடுக்கவும்.

(பி.கு:- தமிழ் ஆசிரியம் தொடர்பாக மேல் விளக்கம் தேவைப்பட்டால் கீழே மறுமொழி பகுதிக்கு எழுதவும். அல்லது suba.nargunan@gmail.com முகவரிக்கு மின்னஞ்சல் விடுக்கவும்)

Saturday, August 08, 2009

1மலேசியா வலைப்பதிவு: மாண்புமிகு பிரதமருக்கு ஓர் அன்புமடல்

  • மாண்புக்கும் மதிப்பிற்கும் உரிய,

    மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் இரசாக் அவர்களே, வணக்கம்.


மலேசியத் திருநாட்டில் தங்கள் நல்லாட்சியின்கீழ் மனநிறைவுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் மலேசியக் குடிமக்களில் ஒருவனாக இந்த மடலைத் தங்களுக்கு மிகுந்த உள்ளன்போடு விடுக்கின்றேன்.

தாங்கள் நாட்டின் பிரதமர் பொறுப்பை ஏற்ற நாள் தொடங்கி, நாட்டு மக்களின் நல்லெண்ணத்தைப் பெறுவதற்கு அரும்பாடுபட்டு வருகின்றீர்கள். அதற்காக, அடுக்கடுக்காக அருமையான செயல்திட்டங்களை அறிவித்தும் வருகின்றீர்கள். அவையனைத்தும் ஒட்டுமொத்த நாட்டின் பார்வையைத் தங்கள் பக்கம் திர்ப்பி இருக்கிறது என்றால் மிகையன்று.

குறிப்பாக, கடந்த 12ஆம் பொதுத்தேர்தலில் மலேசிய இந்தியர்கள் வரலாறு காணாத அளவுக்கு எதிர்க்கட்சிகளின் பக்கம் சாய்திருப்பதை நாடே அறிந்து வைத்திருக்கிறது. இதற்குப் பல காரணங்கள் இருப்பினும், எங்களுக்கும் நாட்டு மக்களுக்கும் தேவையான அனைத்தையும் கடந்த காலங்களில் இயன்றவரையில் தேசிய முன்னணி அரசு செய்திருக்கிறது என்பதை முற்றிலுமாக யாரும் மறுத்துவிட முடியாது.

அதன் தொடர்ச்சியாகத்தான், இப்போதும்கூட (தமிழ்) மக்களின் தேவைகளையும் அடிப்படை உரிமைகளையும் மீட்டுக்கொடுப்பதில் தாங்கள் முனைப்புக் காட்டி வருகின்றீர்கள் என்பதை நாங்கள் நன்றாகவே அறிந்துள்ளோம். அதற்காக, தங்களுக்குக் கரம்குவித்து மனமார்ந்த நன்றியினைச் சொல்வதற்கும் கடமைபட்டுள்ளோம்.

ஆனாலும், சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது என்பதுபோல, தாங்கள் முன்னெடுக்கும் சில அருமையான திட்டங்களுக்கு நடுவில் சில செயற்பாடுகள் ஓரளவு பின்னடைவுகளை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடுகின்றன.

அப்படிப்பட்ட பின்னடைவுகளில் ஒன்றுதான், தாங்கள் ஏற்படுத்தியிருக்கும் 1மலேசியா வலைப்பதிவில் (Blog 1Malaysia) தமிழுக்கு இடம் இல்லாமல் போனது. 1மலேசியா வலைப்பதிவில் மலாய், ஆங்கிலம், சீனம் ஆகிய மொழிகளுக்கு இடம் கொடுத்திருக்கும் நிலையில் எங்கள் இன்னுயிர்த் தமிழை இடம்பெறச் செய்யாமல் விட்டதைக் கண்டு மிகுந்த வருத்தத்தில் இருக்கிறோம் என்பதைத் தங்களின் மேலான கவனத்திற்கு மிகுந்த பணிவோடு தெரிவிக்க விழைகிறேன்.

மாண்புமிகு டத்தோ ஸ்ரீ அவர்களே,

கடந்த சில வாரங்களாகத் தமிழ் நாளேடுகளும் இனைய ஏடுகளும் இதன்தொடர்பில் செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்த விடயம் தங்கள் பார்வைக்கு இப்போது வந்திருக்கும் நிலையில், விரைந்து இதற்கான தீர்வுகளைக் கண்டிப்பாகச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிறையவே இருக்கிறது. தங்கள் மீது இருக்கும் அந்த உயர்ந்த நம்பிக்கையின் காரணமாகத்தான் மனத்தில் கணத்தோடும் ஓர் எதிர்பார்ப்போடும் இந்த மடலை எழுதுகின்றேன்.

கணினி இணையத் தொழில்நுட்பத் துறையில் மற்றைய மொழிகளுக்கு நிகராக எங்கள் தமிழும் வளர்த்திருகிறது என்ற தகவலைக் கண்டிப்பாகத் தாங்களும் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

இத்தனைக்கும், உலகம் முழுமைக்குமே கணினி இணையத் துறையில் முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் மலேசியா இருந்திருக்கிறது என்பது நமது நாட்டுக்குப் பெருமைதரும் செய்தியாகும். நளினம், முரசு, தமிழா முதலான தமிழ் மென்பொருள்களை உலகத்திற்கே வழங்கியது நமது மலேசியாதான். இணையம் என்று இன்று உலகம் முழுமைக்கும் பயன்படுத்தப்படும் சொல்லையே கொடுத்ததும் நமது மலேசியாதான். மலேசியாவின் முன்னணி இணைய இதழான மலேசியாகினி ‘மலேசியாஇன்று’ என்ற பெயரில் அழகுதமிழில் இயங்குவதையும் எண்ணற்ற தமிழ் இணையத் தளங்களும் வலைப்பதிவுகளும் வண்ணத்தமிழில் வளமையாக இயங்குவதையும் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவருகின்றேன்.

இப்படியிருக்கும் நிலையில், தங்கள் நேரடிப் பார்வையில்; தங்கள் பொற்கரங்களின் ஆணையில் செயல்படும் 1மலேசியா வலைப்பதிவில் தமிழுக்கு இடமில்லாமல் போனது எங்கள் தமிழ் மக்களை ஆழந்த வருத்தத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கி இருக்கிறது.

ஆகவே, இதற்கான நல்லதொரு தீர்வைத் தாங்கள் உடனே அறிவித்தால் தமிழ் மக்கள் மனங்களில் பாலை வார்த்ததாக அமையும். 1மலேசியா வலைப்பதிவில் தமிழும் இடம்பெறுவதன் மூலம், தங்களின் உயரிய பார்வைகளும் நேரிய எண்ணங்களும் பரந்த சிந்தனைகளும் தமிழ் மக்களுக்கு நேரடியாகச் சென்று சேர்வதாக அமையும். அதுமட்டுமலாமல், தங்களின் ஆட்சி மிகவும் நடுநிலையானது – 1மலேசியா கொள்கை மிகவும் உன்னதமானது என்பதை உறுதிபடுத்துவதாக அமையும். இத்த்னைக்கும் சேர்த்து தங்களின் கடைக்கண் பார்வையைப் பெரும் ஏக்கத்தோடு எதிர்பார்க்கிறோம்.

மாண்புமிகு டத்தோ ஸ்ரீ அவர்களே,

எங்கள் தமிழ் உங்கள் 1மலேசியா வலைப்பதிவில் விரைவில் இடம்பெறும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம் – உங்களையே என்றும் நம்புகின்றோம்.

நன்றி, வணக்கம்.

அன்புடன்,
மலேசியத் தமிழர்கள் சார்பில்,
திருத்தமிழ் ஊழியன்,
சுப.நற்குணன்

Thursday, August 06, 2009

தமிழா! நீ பேசுவது தமிழா?




தமிழா! நீ பேசுவது தமிழா?
தமிழா! நீ பேசுவது தமிழா?

அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை 'பேபி' என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை 'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழைக் கொன்று தொலைத்தாய்...

தமிழா! நீபேசுவது தமிழா?

உறவை 'லவ்' என்றாய் உதவாத சேர்க்கை...
'ஒய்ப்' என்றாய் மனைவியை பார் உன்றன் போக்கை...
இரவை 'நைட்' என்றாய் விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை 'ஸ்வீட்' என்றாய் அறுத்தெறி நாக்கை...

தமிழா!நீ பேசுவது தமிழா?

வண்டிக்காரன் கேட்டான் 'லெப்ட்டா? ரைட்டா?
'வழக்கறிஞன் கேட்டான் என்ன தம்பி 'பைட்டா?
'துண்டுக்காரன் கேட்டான் கூட்டம் 'லேட்டா?'
தொலையாதா தமிழ் இப்படிக் கேட்டா?

தமிழா!நீ பேசுவது தமிழா?

கொண்ட நண்பனை 'பிரண்டு' என்பதா?
கோலத் தமிழ்மொழியை ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம் 'சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி சாவது நல்லதா?

தமிழா!நீ பேசுவது தமிழா?

பாட்டன் கையில 'வாக்கிங் ஸ்டிக்கா'
பாட்டியின் உதட்டிலே 'லிப்ஸ்டிக்கா?'
வீட்டில பெண்ணின் தலையில் 'ரிப்பனா?'
வெள்ளைக்காரன்தான் நமக்கு அப்பனா?

தமிழா! நீ பேசுவது தமிழா!

Tuesday, August 04, 2009

பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் வலையகம்

மலேசியத் தமிழ்க்கல்வி உலகில் ஒரு புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது. பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் தாம் இந்த வரலாற்றை நிகழ்த்திக் காட்டியிருக்கின்றன. ஒட்டுமொத்த மாநிலத் தமிழ்ப்பள்ளிகளையும் ஒருசேர இணையத் தேரில் ஏற்றிவைத்து உலகவலம் வரச்செய்த முதல் மாநிலமாகப் பேரா மாநிலம் சிறப்புப் பெற்றுள்ளது.

பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் வரலாற்றுத் தொகுப்பாக – வரலாற்று ஆவணமாக மிக நேர்த்தியுடன் உருவாகி இருக்கிறது 'பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் வலையகம்' என்னும் இணையத்தளம்.

பேரா மாநிலத்தில் செயல்படும் 134 தமிழ்பள்ளிகளின் விவரம் - வரலாறு - வளர்ச்சிகள் - அடைவுநிலைகள் ஆகியவற்றைத் தாங்கி இந்த வலையகம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் - மலாய் - ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

இப்படியொரு பெரும் திட்டத்தினை முன்னெடுத்ததோடு மட்டுமல்லாமல், இதன் உருவாக்கப் பணிக்குத் தலைமையேற்றுச் செயலாற்றியவர் பேரா மாநிலக் கல்வித் திணைக்கள உதவி இயக்குநர் முனைவர் சா.சாமிக்கண்ணு அவர்கள். இந்த வலையகத்தின் உருவாக்கத்தில் அன்னாரின் பங்கும் பணியும் மிகவும் அளப்பரியது. இந்த வலையகத்தைப் பற்றி தமது முன்னுரையில் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

"பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் தோற்றம் – வரலாறு - வரலாறு – அடைவுகள் ஆகியவற்றைத் தொகுத்திட வேண்டும் என்ற உணர்வின் வெளிப்படுதான் இந்த வலையகம். பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் இருப்பும் வாழ்வும் கால வெள்ளத்தில் கரைந்துபோய்விடக் கூடாது என்ற காப்புணர்வின் கட்டமைப்புதான் இந்த வலையகம். பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் வரலாற்றை முறையாக ஆவணப்படும் முயற்சிதான் இந்த வலையகம்.

ஒரு காலக்கட்டத்தில் இம்மாநிலம் முழுவதும் முந்நூறு தமிழ்ப்பள்ளிகள் இருந்ததாக வரலாறு பகர்கின்றது. ஆனால், இன்றைய நிலையில் நூற்று முப்பத்து நான்கு தமிழ்ப்பள்ளிகள் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கின்றன. காலவெள்ளத்தால் கரைந்துபோன – காணாமற்போன - மூடப்பட்ட தமிழ்ப்பள்ளிகளின் வரலாறு இன்று கண்டெடுப்பதற்கு அறியதாகிப் போய்விட்டது.

இன்றைய நிலையில் இருக்கின்ற பள்ளிகளின் வரலாற்றைக் காத்துவைத்துவிட வேண்டும் என்ற நோக்கத்திலும், பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் நிலையை மலேசியா மட்டுமின்றி உலகத்தோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் இந்த வலையகம் வடிவமைக்கப்பட்டுள்ளது."

பேரா மாநிலக் கல்வித் திணைக்கள ஆதரவுடனும் முப்பதுக்கும் மேற்பட்ட தமிழாசிரியர்களின் கூட்டு முயற்சியாலும் இந்த வலைப்பதிவு மிகவும் அருமையாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏழு ஆண்டுகள் செலவிடப்பட்டதாகவும் அறியப்படுகிறது.

மலேசியாவில், முதலாவதாகச் சொந்த வலையகத்தை நிறுவியுள்ள பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி குழுமத்தைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளிகளின் மாநிலக் கண்காணிப்பாளர், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கும் குறிப்பாக, இந்தச் வரலாற்றுச் சிறப்புமிகு சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ள உதவி இயக்குநர் முனைவர் சா.சாமிக்கண்ணு அவர்களுக்கும் 'திருத்தமிழ்' நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

(பி.கு:-மேலே உள்ள படத்தைச் சொடுக்கி 'பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் வலையகத்தைப்' பார்வையிடலாம்)

Monday, August 03, 2009

நவின இலக்கியம் + பாலியல் = எச்1என்1 பன்றிக்காய்ச்சல்

நேற்று முன்தினம் எங்கள் ஊரில் இரண்டு தமிழ்ப்பள்ளிகள் மூடப்பட்டன. காரணம் வேறொன்றுமில்லை. எச்1என்1 நோய்க்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைதான். ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதைவிட கொடுமை என்னவென்றால், இதுவரை பேராவிலும் சொகூரிலும் இரண்டு மாணவர்கள் இந்த எச்1என்1 எமனுக்கு இறையாகி உள்ளனர்.

இன்று உலகத்தையே குலைநடுங்க வைத்திருக்கிறது இந்த எச்1என்1 எனப்படும் பன்றிக் காய்ச்சல். மெக்சிக்கோ நாட்டில் எங்கோ ஓர் மூலையில் ஏதோ ஒரு பன்றிக் கொட்டகையில் எந்தவொரு பன்றியிடமிருந்தோ பரவியதுதான் இந்தக் கிருமி. ஆனால் பாருங்கள். கண்டங்கள் கடந்து – நாடுகள் கடந்து – கடல் கடந்து – வெளி கடந்து – பல்லாயிரக் கணக்கில் மனிதர்களைக் கடந்து இன்று மலேசியாவில் – ஒரு மாநிலத்தில் – ஒரு வட்டாரத்தில் – ஒரு சிற்றூரில் – ஒரு தமிழ்ப்பள்ளியில் – ஒரு வகுப்பறையில் பயிலும் ஒரு மாணவனை வந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. என்ன ஒரு வியப்பு! என்ன ஒரு விந்தை!


அறிந்தோ அறியாமலோ எவனோ – எங்கோ – எப்போதோ செய்த ஒரு சிறு தவறினால் இன்று இவ்வளவு பெரிய பேராபத்து நடந்துகொண்டிருக்கிறது.

மெக்சிக்கோவில் உருவான இந்த உயிர்க்கொல்லிக் கிருமியானது நமது ஊர் வரை – வீட்டு வாசல் வரை வந்து உயிரை அச்சுறுத்தும் என யாராவது கனவிலும் நினைத்திருப்பார்களா? அவதானித்திருப்பார்களா? அல்லது தின்றுகொழுத்த அந்த அறிவுகெட்டப் பன்றிகள்தான் இதனை அறியுமா? சிந்தித்துப் பாருங்கள்! ஆனால், இது நடந்திருக்கிறது என்பதுதான் இன்றைய நடப்பியல்(நிதர்சனம்).

இதைத்தான் கயாசு கோட்பாடு (Chaos Theory) அதாவது வண்ணத்துப்பூச்சி விளைவு (Butterfly Effect) என்கிறார்கள் போலும். இது என்ன கோட்பாடு என்று நீங்கள் கேட்கலாம். உடனே ஓடிப்போய் கமலின் ‘தசாவதாரம்’ படத்தை மீண்டுமொரு முறை போட்டுப் பார்த்தால் இந்தக் கயாசு கோட்பாடு புரிந்துவிடும்.

அதாவது, உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் ஏதோ ஒரு பின்னணி இருக்கிறது. காரணமே இல்லாமல் எதுவும் நடப்பதில்லை. இன்று 21ஆம் நூற்றாண்டில் நிகழும் ஒரு பேரழிவுக்கான பின்னணி 12ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கியிருக்கலாம் என கூறுவதே இந்த கயாசு கோட்பாடு..

சரி இருக்கட்டும். இதற்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்று இந்நேரம் உங்கள் மண்டையில் மணி அடித்திருக்கும். சொல்கிறேன்.

இன்று, தெரிந்தோ தெரியாமலோ - அறிந்தோ அறியாமலோ நவின இலக்கியம், பாலியல் கதை, நவின மொழி என்றெல்லாம் வரைமுறை தெரியாமல் சிற்சிலர் செய்துகொண்டிருக்கும் வேலையற்ற வேலைகள் பிறகு ஒரு காலத்தில் நமது மொழிக்கும் – இனத்திற்கும் – மக்களுக்கும் பெரும் கேடாகவும் கொடுமையாகவும் பேரிடராகவும் மாறக்கூடும்.

அப்படி ஒரு நிலைமை வரும்போது ஒருவேலை இன்று இந்தக் கேடுகளைச் செய்பவர்கள் உயிரோடு இல்லாமல்கூட போகலாம். ஆனால், இவர்கள் தூவிவிட்டுச் செல்லுகின்ற நச்சுக்கிருமிகள், எச்1என்1 போல சமூகத்தில் பரவி பெரும் சீரழிவை ஏற்படுத்துமா இல்லையா? அப்போது இதற்கு தீர்வு காண்பது இயலுமா?

தசாவதாரம் படத்தில் எப்போதோ கடலில் வீசப்படும் பெருமாள் சிலைக்கும் அண்மையில் நடந்த சுனாமிக்கும் தொடர்பு இருக்கிறது என்று காட்டுகிறார்களே.. அப்படித்தான் இதுவும்.

மரபு இலக்கியங்களில் மிக நயமாகச் சொல்லப்பட்ட பாலியல் விடயங்களைத் தப்பும் தவறுமாக – அரையும் குறையுமாகப் புரிந்துகொண்ட சிலர், நாங்களும் அப்படித்தான் நவின இலக்கியம் படைக்கிறோம் என்று கிளப்பியுள்ளார்கள். இந்தக் குறைகுடங்களால் ஏற்படும் சங்கடங்களே இன்று எல்லைமீறிக் கொண்டிருக்கின்றன.

அப்படி என்றால், இந்தக் குறைகுடங்கள் வாரி இறைக்கும் வரம்புமீறிய பாலியல் கதைகள் – பாலுணர்ச்சிப் படைப்புகள், தமிழ் அறிவும் மரபியல் தெளிவும் அறவே அற்றுப்போய் மக்குப்பிண்டங்களாக இருக்கும் இன்றைய / நாளைய இளையோர்களை என்ன செய்யும்? எப்படி பாழ்படுத்தும்? எவ்வாறு சீரழிக்கும்? என்று சிந்தித்துப் பாருங்கள்..!!

ஐயகோ! நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது..!! உயிரின் வேர்வரையில் நடுக்கம் ஏற்படுகிறது..!!

இதனை இன்றைய நவினப் படைப்பாளிகள் எண்ணிப்பார்க்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அவர்களைக் கட்டுப்படுத்த நமக்கு உரிமையும் இல்லை. ஆனாலும், அவர்களுக்கு ஒரு பொறுப்புணர்ச்சி வேண்டாமா? சமூகக் கடப்பாடு வேண்டாமா? மொழிநலம் – இனநலம் வேண்டாமா? இதுவே நமது கேள்வி – ஆதங்கம் எல்லாம்.

இந்த உணர்வின் காரணமாகத்தான்,

“இலக்கணமும் இலக்கியமும் தெரியாதான்
ஏடெழுதுதல் கேடு நல்கும்”
என்று பாவேந்தர் உணர்ந்து பாடினார் போலும்!

அதேபோலத்தான், பாவலரேறு பெருஞ்சித்திரனார் இசை, நடனம், நாடகம், திரைப்படம், இலக்கியம் என அனைத்து கலைகளிலும் ஈடுபட்டுள்ள கொடுங்கேடர்களைக் கண்டு மனம்நொந்துபோய் இவ்வாறு பாடினார் போலும்!!



படித்த மடையர் பாழ்செய்யும் உலகம்!
படித்த கயவரே வலம்வரும் உலகம்!
வீணர் நிறைந்த விளம்பர உலகம்!
நாண மற்றவர் நடக்கின்ற உலகம்!
கலையெனும் பெயரால் காமத்தைப் பாய்ச்சும்
புலையர் புகுந்த புழுக்கறை உலகம்!

Blog Widget by LinkWithin