Showing posts with label தமிழ்க் கல்வி. Show all posts
Showing posts with label தமிழ்க் கல்வி. Show all posts

Tuesday, October 25, 2016

பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்


மகாகவி பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி
அக்தோபர் 20 – 23 வரையில் கெடா, எயிம்சு பல்கலைக்கழகத்தில் பார்புகழ் பாவலர் பாட்டுக்கொரு புலவன் மகாகவி பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி கலந்துகொண்டார். பாரதியாரின் சரவடியாகிய அவருடைய வருகை மாநாட்டிற்கே கலை கட்டியது; மெருகு கூட்டியது என்றுதான் சொல்ல வேண்டும்.

பாரதியின் பாடலைப் படித்தும் இன்புற்றும் உணர்வு பெற்றும் இருக்கின்ற ஆசிரியர்கள்; வகுப்பறையில் பாரதியின் பாடல்களை அழகழகாகக் கற்பிக்கும் தமிழாசிரியர்கள் இந்த மாநாட்டில் நிரஞ்சன் பாரதியை நேரில் கண்டதும் மகிழ்ச்சியும் குதூகலமும் அடைந்தனர். அவருடைய வருகையும் உரையும் வந்தவர்கள் அனைவருக்கும் புதிய உந்துதலை ஏற்படுத்தியது என்பது மிக வெளிப்படையாகவே தெரிந்தது.
வே.இளஞ்செழியன் நிரஞ்சன் பாரதிக்குச் சிறப்பு செய்கிறார்
நிரஞ்சன் பாரதியோடு பேசவும், கைகுலுக்கவும், தாமி எடுக்கவும் பேராளர்கள் அவரைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டே இருப்பதைக் காண முடிந்தது. நிறைவு விழாவில் உணர்வுகளைத் தொடுகின்ற வகையில் தமிழ்க்கல்வி பற்றியும் மலேசியத் தமிழர்களின் தமிழ்ப்பற்று பற்றியும் அழகாகப் பேசினார் நிரஞ்சன்.

உலகத்தில் பல நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்தாலும் மலேசியத் தமிழர்கள் உள்ளத்தில் தமிழ் என்னும் தீ கொளுந்துவிட்டு எறிவதாகக் குறிப்பிட்ட பொழுதும்; “தாய் தமிழ்நாட்டில் தமிழ் தேய்ந்து போகும் நிலைமையைப் பார்க்கும் பொழுது மனம் சோர்ந்து போனாலும் மலேசியத் தமிழர்களைப் பார்க்கும் பொழுது தமிழை நீங்கள் காப்பாற்றி விடுவீர்கள் என்று புதிய நம்பிக்கை உண்டாகிறது” என்று சொன்ன பொழுதும் மாநாட்டு அரங்கம் கரவொலியால் அதிர்ந்தது.
சுப.நற்குணன், முத்து நெடுமாறன், நிரஞ்சன் பாரதி
மலேசியத் தமிழர்களுக்காக நிரஞ்சன் பாரதி ஓயாத கரவொலிகளுக்கு நடுவில் ஓர் அழகிய கவிதை வாசித்தார்.

லோ லோ லோ
என்று பேசுவோர் பலர் இருக்க
லா லா லா
என்று இசை ததும்ப
பேசுபவர்கள் நீங்கள்;

ஆதலால் உங்களுக்கு
என் வணக்கம் லா
நான் தான் உங்கள்
நிரஞ்சன் லா;

கடாரமே
கடலில் சொலிக்கும் ஆரமே
இராஜேந்திர சோழனின் கண்ணே
தமிழ் பேசும் அழகான பெண்ணே
கீழே குனிந்து கையால் அணைத்து
மனதால் முத்தமிடுகிறேன் உன்னை
ஏற்றுக்கொள்வாய் என்னை;

தாய்த் தமிழகத்தில்
தாய்மொழி தாய்மொழி என்று
தம்பட்டம் அடித்தாலும் அது எங்கள்
வாய்மொழியாக வருவதில்லை;
அப்படியே வந்தாலும் அது
ஆனந்தம் தருவதில்லை;

நாங்கள் “டிஃபன் சாப்டாச்சா” என்கிறோம்
நீங்கள் “பசியாறியாச்சா” என்கிறீர்கள்

தூக்கத்தில் எழுப்பினாலும்
தமிழ்ப் பேசுகிறீர்கள் நீங்கள்
தமிழைத் தூங்க வைத்துவிட்டு
உலவுகிறோம் நாங்கள்;

எதையும் விடாமல்
தமிழ்ப்படுத்தி விடுகிறீர்கள் நீங்கள்;
எப்போதும் விடாமல்
தமிழைப் படுத்துகிறோம் நாங்கள்;

தமிழ் எங்களுக்கு வார்த்தை
தமிழ் உங்களுக்கு வாழ்க்கை;

தாயகத்தில் தமிழ் தளர்கிறதே
என்னும்போது சற்றே வற்றிப்போகிறேன் – எனினும்
அயலகத்தில் தமிழ் வளர்வதைக் கண்டு
என்னைத் தேற்றிக் கொள்கிறேன் நான்

பலநூறு வருடம் முன்னம்
பலநூறு மைல் தாண்டி
பிழைப்பின் பொருட்டு
மலாயம் வந்தீர்கள்;
கூடவே தமிழையும்
கொணர்ந்து வந்தீர்கள்;

கடல்தாண்டி வந்தாலும்
கடலுக்குள் மூழ்காமல்
உங்களுக்குள் மூழ்கியது தமிழ்;

இங்கு வந்து
ரப்பர் மரங்களை
வெட்டியதாலோ என்னவோ
இழுத்து இழுத்து தமிழைத்
தழைக்க வைத்திருக்கிறீர்கள்;

ரப்பர் மரத்தில் வழியும் பால்
உங்கள் மனதிலும் வழிய
அன்பால் பண்பால்
நினைப்பால் முனைப்பால்
துடிப்பால் உழைப்பால்
ஆண்பால் பெண்பால்
என அனைவரும்
தமிழை நிலைக்கச் செய்தீருக்கிறீர்கள்;

கார்கள் செல்ல மட்டுமா
சாலை போட்டீர்கள்
கல்வி பயிலவும் அல்லவா
சாலை போட்டீர்கள்;

உங்களை உளமாற
வணங்கி மகிழ்கிறேன்
உங்களையே உந்து சக்தியாக
உளத்தில் வரித்துக் கொள்கிறேன்;

இந்த மாநாட்டில்
கன்னித்தமிழையும் கணிப்பொறியையும்
முயங்க வைத்தீர்கள்
முயங்குவதை நேரில் காட்டி
மயங்க வைத்தீர்கள்
எனக்குள் சோர்ந்து
கிடந்த ஏதோ ஒன்றை
இயங்க வைத்தீர்கள்;

இணைப்பு நிசமாக்கம் மூலம்
இலக்கியம் கற்கலாம் என்றீர்கள்
அசைவுருவாக்கம் மூலம்
இலக்கணம் பயிலலாம் என்றீர்கள்;
இதையெல்லாம் கேட்டுக் கேட்டுக்
குதூகளித்தேன் - தமிழ்மேல்
மீண்டும் காதலில் விழுந்தேன்

தன் மாணாக்கனைச்
சேயாகக் கருதி
தாயாக மாறும்
ஆசிரியைகள் பார்த்து
ஆசிரியம் என்னும்
புத்தறம் தோன்றக் கண்டேன்;

உங்களிடம் கொளுந்துவிட்டு எறிகிறது
தமிழ் என்னும் நெருப்பு – அதனை
என் கண்களால் ஒற்றிக்கொள்கிறேன்
அந்த நெருப்பெடுத்து என் மனதைப்
பற்றிக் கொள்கிறேன் – அந்நெருப்பைத்
தாய்த் தமிழகத்திற்கு அணையாமல்
அணைத்துச் செல்வதே என் பொறுப்பு;

அந்த நெருப்பால்
அங்குத் தமிழுக்கு
ஒளியூட்டுவதே உங்களுக்கு
நான் செய்யும் சிறப்பு..!


@சுப.நற்குணன்

Friday, October 21, 2016

மலேசிய மண்ணில் தமிழ்க்கல்வியை 200 ஆண்டு வாழ வைத்துள்ளோம்




2016ஆம் ஆண்டு நம் மலேசியத் திருநாட்டில் தமிழ்க்கல்வி தொடக்கப்பட்டு 200 அகவை நிறைவடைகிறது.

கடந்த 200 ஆண்டாக இந்நாட்டில் தமிழ் மொழி, இனம், சமயம், பண்பாடு, கலை, இலக்கியம் ஆகிய அனைத்தும் இடையறாது வாழ்ந்து கொண்டிருப்பதற்கும் வளர்ந்து கொண்டிருப்பதற்கும் தமிழ்க்கல்வியின் பங்களிப்பு மிக மிக உன்னதமானது; உயர்வானது; அளப்பரியது என்றால் அது மிகையாகாது.

மலேசியாவில் 200 ஆண்டு நிறைவை அடையும் தமிழ்க்கல்விக்கு மனமகிழ்ச்சியோடு மகுடம் சூட்டி மாண்புறச் செய்ய வேண்டியது மலேசியத் தமிழரின் கடமை; அதனால் மலேசியத் தமிழருக்குப் பெருமை.

மலேசியாவில் தமிழ்க்கல்விக்கென்று தனி வரலாறு உண்டு. மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளுக்கு நீண்ட நெடிய பாரம்பரியம் உண்டு. மலேசியாவில் தமிழ்க்கல்வி கற்று வாழ்வில் முன்னேறியவர்கள் பற்றி ஆயிரமாயிரம் வெற்றிக் கதைகள் உண்டு.

1816 மலேசியக் கல்வி வரலாற்றில் ஒரு முக்கியமான ஆண்டு. அன்றைய காலத்தில் மலாயாவில் ஆட்சி நடத்திய பிரிட்டிசார் அரசாங்கம் பினாங்கில் ஒரு பள்ளிக்கூடத்தைத் தொடங்கியது.

பினாங்கு பொதுப்பள்ளி அல்லது ஆங்கிலத்தில் Penang Free School என்பதுதான் அந்தப் பள்ளி. ஆங்கிலம் வழி கல்வி கற்க இந்தப் பள்ளி உருவாக்கப்பட்டது. இந்தப் பள்ளியில் தான் முதன்முதலாக, நமது அன்னைமொழியாம் தமிழ்மொழிக்காக ஒரு தமிழ் வகுப்பு தொடங்கப்பட்டது. 21.10.1816 நாளன்று அன்றைய  Penang Free School  பள்ளியின் தலைவராக இருந்த சர் ரெவரண்டு அட்சிங்ஸ் என்பவர் இந்தத் தமிழ் வகுப்பைத் தொடங்கியதாக வரலாறு கூறுகின்றது.

அன்று தொடங்கி இந்த 21.10.2016ஆம் ஆண்டு வரையில் நமது மலேசியத் திருநாட்டில் தமிழ்ப்பள்ளிகள் இயங்கி வருகின்றன; தமிழ்க்கல்வி இடையறாது நடைபெற்று வருகின்றது என்பது மகிழ்ச்சியும் பெருமையும் தருகின்ற செய்தியாகும்.

அன்று பினாங்கில் ஒற்றை வகுப்பறையில் தொடங்கிய தமிழ்க்கல்வி சரியாக 200 ஆண்டுகளைக் கடந்து இன்று அரச வேராக ஆழ ஊன்றி ஆல விழுதுகளாகப் பெருகி 524 பள்ளிகளில் தமிழ்க்கல்வி பயிலப்படுகிறது என்பது நாம் அடைந்திருக்கும் மிகப்பெரிய சாதனை என்று சொன்னால் மிகையாகாது.

தமிழ்க்கல்வியின் சாதனை தமிழ்ப்பள்ளிகளோடு நின்றுவிட்டதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இடைநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, ஆசிரியர் கல்விக்கழகம், பல்கலைக்கழகம் வரையில் தமிழ்க்கல்வியைப் பயிலும் நிலை இன்று கைகூடி உள்ளது.

பாலர் பள்ளித் தொடங்கி முனைவர் பட்டம் வரையில் தமிழ்க்கல்வியைப் படிக்கும் வாய்ப்பையும் உரிமையையும் மலேசியத் தமிழர்களாகிய நாம் பெற்று இருக்கிறோம் என்பதைச் சொல்லும் பொழுதே நாவெல்லாம் இனிக்கிறது; மனமெல்லாம் மணக்கிறது.

இந்தியா, தமிழ்நாட்டு, இலங்கை முதலான தமிழின் தாய்நிலத்திற்கு வெளியே கடல் கடந்த ஒரு நாட்டில் கடந்த 200 ஆண்டுகளாகத் தமிழ்மொழியும் தமிழ்க்கல்வியும் நீடித்து வருவதும் நிலைபெற்று வாழ்வதும் கல்வி மொழியாக விளங்குவதும் போற்றுதலுக்கு உரிய மரபு; கொண்டாடப்பட வேண்டிய மாண்பு என்றால் அது மிகையாகாது.


மலேசியத் தமிழர்கள் வரலாற்றில் தமிழ்ப்பள்ளிகளுக்குத் தனிச்சிறப்பிடம் உண்டு என்றால் மிகையாகாது. பல்லாயிரக்கணக்கில் பட்டதாரிகள், கல்வியாளர்கள், நிபுணர்கள், தொழிலதிபர்கள், வணிகர்கள், விளையாட்டாளர்கள், தலைவர்கள், அரசியல்வாதிகள், அனைத்துலக நிலையிலான சாதனையாளர்கள் என வெற்றியாளர்கள் பலர் தமிழ்ப்பள்ளிகளிலிருந்து உருவாகி வந்திருக்கின்றனர். அன்று தமிழ்நாட்டிலிருந்து ஒப்பந்தத் தொழிலாளர்களாக மலாயாவுக்கு வந்த பலர் இன்று முதலாளிகளாகவும் திறன்மிக்க தொழிலாளர்களாவும் உருவாகுவதற்குத் தமிழ்ப்பள்ளிகள் பங்காற்றியுள்ளன.  அதுமட்டுமல்லாமல் தமிழர்களின் கலை, இலக்கியம், பண்பாட்டு, சமய வளர்ச்சிக்கும் தமிழ்ப்பள்ளிகளின் பங்களிப்பு நிறைவாகவே இருக்கின்றது.

1816 முதல் 2016 வரையில் 200 ஆண்டுகளில் பல்வேறு இடர்கள், நெருக்கடிகள், அரசியல் பூசல்கள், பொருளியல் வெல்விளிகள், சமுதாயச் சிக்கல்கள், சிந்தனைப் போராட்டங்கள், ஏற்றத் தாழ்வுகள் எனப் பற்பல பரிணாமங்களைக் கடந்து மலேசியாவில் தமிழ்க்கல்வி வெற்றிக் கண்டிருக்கும் இந்தத் தருணத்தில், மலேசியத் தமிழர்கள் அனைவரும் பெருமைகொள்ள வேண்டும். அதே வேளையில், மலேசியாவில் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபட்ட அரசியல், சமூக, பொது இயக்க, தோட்டத் தொழிற்சங்க, தன்னார்வ முன்னோடிகளையும் மூத்த தலைவர்களையும் இந்தத் தருணத்தில் நன்றியோடு நினைத்துப் பார்க்கவேண்டும்.

மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடர்ந்து நிலைக்கவும் அதனுடன் தமிழ்மொழி நிலைபெற்று வாழ வேண்டும். இதன்வழி மலேசியத் தமிழர்களின் கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, வாழ்வியல், விழுமியங்கள் ஆகிய அனைத்தும் காக்கப்பட வேண்டும். அனைத்திற்கும் மேலாக மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்க்கல்வியும் அடுத்துவரும் நூற்றாண்டுகளுக்கு முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். 

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்க்கல்வி!

@சுப.நற்குணன்

Thursday, October 31, 2013

தமிழ் இலக்கியப் பாடத்தை எடுக்க மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்

12.10.2013ஆம் நாள் நடந்த 'எசுபிஎம் தமிழ் இலக்கியக் கருத்தரங்கம்' தொடர்பாக வெளிவந்த நாளிதழ் செய்தி இது. நன்றி: மக்கள் ஓசை (28.10.2013)

***************
 

தமிழ் இலக்கியப் பாடம் கடுமையான பாடமல்ல. மலேசியக் கல்வி சான்றிதழ் (எசுபிஎம்) தேர்வுப் பாடமாகத் தெரிவு செய்யும் ஒவ்வொரு மாணவரும் தமிழ் இலக்கியப் பாடத்தையும் கண்டிப்பாகத் தேர்வு செய்ய வேண்டுமென்று தமிழ் வாழ்வியல் இயக்கச் செயலாளர் சுப.நற்குணன் வேண்டுகோள் விடுத்தார். 

தமிழ் வாழ்வியல் இயக்க ஏற்பாட்டில் தமிழியல் நடுவத்தில் நடைப்பெற்ற எசுபிஎம் மாணவர்களுக்கான தமிழ் இலக்கியப் பாடக் கருத்தரங்கு நிகழ்ச்சியில் பேசிய அவர் மேற்கண்ட கருத்தை வலியுறுத்தினார்.

தமிழ் இலக்கியப் பாடத்தில் நமது மாணவர்கள் பெறும் புள்ளிகள் அவர்கள் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் சேர உதவியாக இருப்பதுடன் தங்களின் வாழ்க்கையில் நல்ல வழிகாட்டுதலையும் தரவல்லதாக உள்ளது.

எனவே, நம் மாணவர்கள் தமிழ் மொழியுடன், தமிழ் இலக்கியப் பாடத்தையும் தேர்வு செய்ய பெற்றோர்களும், இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர்களும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். தமிழ் இலக்கியங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லத் தமிழ் இலக்கியப் பாடங்களை நமது மாணவர்கள் கற்பது அவசியமாகும்.

மாணவர்களுக்குப் போதிப்பதற்குத் தேவையான வழிகாட்டி நூல்கள் தற்போது கடைகளில் கிடைப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இங்கு நடைப்பெற்ற கருத்தரங்கில் அனுபவமிக்க ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களையும் தேர்வு அணுகுமுறைகளையும் மாதிரி வினாக்களும் விடை அமைப்பு முறைகளையும் எளிய முறையில் விளக்கப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் செலாமா, பேரா, நிபோங் டிபால், சிம்பாங் அம்பாட், பாரிட் புந்தார் நடுவங்களைச் சேர்ந்த 80 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

@நன்றி: மக்கள் ஓசை
 

Tuesday, June 04, 2013

உலகத் தமிழாசிரியர் மாநாடு 2013 - கோலாலும்பூர், மலேசியா

கோலாலம்பூர் பெர்ல் இண்டர்நேசனல் விடுதியில், உலகத் தமிழசிரியர் மாநாடு கோலாகலமாகக் தொடங்கி நடைபெறுகின்றது. இம்மாநாடு சூன் திங்கள் 3 - 5 வரை நடைபெறுகின்றது. "உலகத்தரக் கற்றல் கற்பித்தலை நோக்கி தமிழ் ஆசிரியர்கள்" எனும் கருப்பொருளில் நடைபெறும்  இம்மாநாட்டில் 10 நாடுகளைச் சேர்ந்த 500 பேராளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


1992ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் தொடங்கிய 'உலகத் தமிழாசிரியர் மாநாட்டு" இடையறாது நடைபெற்று வருவது பாராட்டுக்குரியது. பெருமைக்குரிய நல்லார் சிலர் முயற்சியால், குறிப்பாக அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் பொதுச் செயலாளர் நல்லாசிரிய மாமணி ஈஸ்வரன் ஐயா அவர்கள், அனைத்துலக ஆசிரியர் பேரவைப் பேராளர் இராமநாதன் ஐயா, சிங்கை மாணிக்கம், சாமிக்கண்ணு, கோலாலம்பூர் கோ.இராதாகிருஷ்ணன், பேராசிரியர் முனைவர் என்.எஸ்.இராஜேந்திரன், மலேசியா ஏ.சகாதேவன், நாகரத்தினம், மொரிசியசு புஷ்பரதம், தென்னாப்பிரிக்கா முனுசாமி முதலான எண்ணற்ற ஆசிரியப் பெருந்தகைகளால் வளர்க்கப்பட்ட உலகத் தமிழாசிரியர் மாநாடு இன்று ஆல்போல் வளர்ந்து பரந்து விரிந்து பயந்தருவதைக் காண முடிகின்றது.

தொடர்ந்து 10 தடவை நடந்துவரும் இம்மாநாட்டின் விளைவாகப் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில ஐரோப்பிய நாடுகளில் பண்பாட்டு விழுமியங்கள், தமிழ்க் கல்வி கற்றல் கற்பித்தல் தொடர்பான பயிற்சி வகுப்புகள் - ஒன்றிய அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டு இன்று சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக,உலகத் தரத்தை நோக்கி தமிழ்க்கல்வியை உயர்த்தவும், கணினி தகவல் தொழில்நுட்பம் வழி தமிழ்க்கல்வி பயணிக்கவும் பல்வேறு ஆய்வுப்பணிகள் நடந்துவருகின்றன.

ஏற்கனவே 2ஆம், 6ஆம் மாநாடுகளை ஏற்று நடத்திய மலேசியாவில் இப்பொழுது 10ஆம் மாநாடு வெகு சிறப்புடன் நடைபெறுகின்றது. மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடர்பான புதிய சிந்தனைகள் மிளிரவும் தமிழ்க் கற்றல் கற்பித்தல் புதுப்பொழிவுடன் வளரவும் இம்மாநாடு உதவும் என நம்பப்படுகிறது.
மன்னர் மன்னன்

இன்று நம் தமிழ்மொழியும் தமிழ் ஆசிரியர்களும் தமிழ்க்கல்வியும் எதிர்கொள்ளும் வெல்விளிகள் மிகப் பெரியது. தமிழை முதன்மொழியாகக் கற்கும் காலம் மெல்லென தூர்ந்துகொண்டிருக்கிறது. தமிழர்களே தமிழை இரண்டாம் மொழியாகவோ அல்லது மூன்றாம் மொழியாகவோ கற்க வேண்டிய இக்கட்டான சூழல் உலகம் முழுவதும் உருவாகிக் கொண்டிருக்கிறது. மலேசியாவில் தமிழை முதன்மொழியாகக் கற்கும் வாய்ப்பு கடல்போல் விரிந்து இருந்தாலும், தமிழின் மீதான தமிழ் மக்களின் எண்ணப்போக்கும் எதிர்பார்ப்பும் எதிர்மறையாக இருப்பதைக் காண முடிகிறது. தமிழகத்தில் தமிழ்வழிக் கல்விக்கான வாய்ப்புகள் இந்தித் திணிப்பின் வழியாகவும் ஆங்கில வழிக்கல்வி தாக்கத்தினாலும் சிதைந்து கொண்டிருக்கிறது. இன்னுஞ்சில நாடுகளில் தமிழைப் பேச்சுமொழி என்னும் அளவில் கற்றுக்கொண்டாலே போதுமென்ற சிந்தனைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன.




 
இப்படியான வெல்விளிகளுக்கு இடையிலும் நெருக்கடிகளுக்கு நடுவிலும் தமிழையும் தமிழ்க்கல்வியையும் வென்றெடுக்கும் தலைமையான திட்டங்களும் தூய்மையான பணிகளும் முன்னெடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதற்கு உலகத் தமிழாசிரியர் மாநாடு பெரும் பங்களிக்க முடியும். மேலும், பன்னாட்டுத் தமிழ்க் கல்வியாளர்களிடையே அணுக்கத் தொடர்பும் நுட்பத்திற ஒத்துழைப்பும் ஏற்பட இதுபோன்ற மாநாடுகள் உதவ முடியும். 













முனைவர்  மு.இளங்கோவன், மன்னர் மன்னன், முத்து நெடுமாறன்,  சுப.நற்குணன், இல.வாசுதேவன், கோவி.சந்திரன்     
விரிவுரைஞர் மன்னர் மன்னன் தலைமையில் அமைந்த ஏற்பாட்டுக் குழுவினர் இந்த மாநாட்டை நன்முறையில் நெறிபடுத்தியுள்ளனர். ஏற்பாட்டுக் குழுவினருக்கும் மாநாட்டுப் பேராளர்களுக்கும் 'திருத்தமிழ்' தன் நெஞ்சார்ந்த நல்வாழ்த்தினை அன்பளிக்கின்றது.

@சுப.நற்குணன், திருத்தமிழ்

Blog Widget by LinkWithin