Thursday, February 21, 2013
கோலாலம்பூரில் "தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம்" உலகப் பரந்துரை மாநாடு-3
Friday, April 27, 2012
தமிழ்ப் புத்தாண்டு காப்புக்குழு நிறுவப்பட்டது
Saturday, January 14, 2012
பொங்கல் 2012 - தமிழ்ப் புத்தாண்டு 2043
இனிய பொங்கல் திருநாள்;
திருவள்ளுவராண்டு 2043
Saturday, January 15, 2011
தைப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்து
இனிய பொங்கல் திருநாள்;
திருவள்ளுவராண்டு 2042
Saturday, January 23, 2010
எங்கூரு பொங்கல் கொண்டாட்டமும் கோளாறும் (2)

*இதன் முதற்பகுதியைப் படிக்க இங்கு சொடுக்கவும்.
தைத்திங்கள் பிறக்கும் பொழுதெல்லாம் பொங்லோடு சேர்ந்து சில புரட்டுகளும் நடைபெறுவது இயல்பாகிவிட்டது. இந்தக் கோளாறுகளை எல்லாம், கோளாறுகள் என்றே தெரியாமலே பலர் குளறுபடிகள் செய்கிறார்கள். இவர்களுக்கு இடையில், ஒரு குறிப்பிட்டக் கூட்டத்தார் மிகவும் தெளிவாகத் திட்டமிட்டு பொங்கலில் சில கோளாறுகளைச் செய்துவருகின்றனர்; பொங்கலன்று பிறக்கும் தமிழ்ப் புத்தாண்டில் நுண்ணரசியல் விளையாட்டு காட்டுகின்றனர்.
அவற்றை இனி ஒவ்வொன்றாகப் பார்ப்போமா?
கோளாறு 1:- பொங்கல் முதல்நாள், சூரியப் பொங்கல் எனப்படுகிறது. காலையில் கதிரவன் உதயமாகும் நேரத்தில் பொங்கல் வைக்கவேண்டும் என்பதுதான் காலாகாலமாகப் பின்பற்றப்படும் வழக்கம். அதுதான் இயற்கையானதும் இயல்பானதும்கூட. ஆனால் இன்றோ, பொங்கலுக்கு நல்ல நேரம் குறிக்கப்படுகிறது. அந்த நல்ல நேரத்தைத் தெரிந்துகொள்ள நமது மக்கள் பயபத்தியோடு காத்திருப்பதும், பிறகு சாமிக்குற்றம் வந்துவிடுமோ என்று அஞ்சி நடுங்கி நல்ல நேரப்படி பொங்கல் வைப்பதும் பாரிய நகைச்சுவை.
அப்படி குறித்துக் கொடுக்கப்படும் நேரம் எதுவாக இருக்கிறது தெரியுமா? சூரியன் நன்றாகக் கொளுந்துவிட்டு காயும் நேரமாக இருக்கும் அல்லது சூரியன் உச்சி மண்டைக்கு மேலே வரும் மதிய நேரமாக இருக்கும். மாலை நேரத்தில் பொங்கல் வைக்கும் நல்ல நேரம் குறித்துக்கொடுக்கபட்ட கதையும் உண்டு. அதற்கும் மேலே போய், காலையில் ஒரு நேரம் மாலையில் ஒரு நேரம் என்று ஒரே நாளில் இரண்டு நேரங்கள் குறித்துக் கொடுக்கிறார்கள். இதைவிட கொடுமை ஒன்றும் இவ்வாண்டு நடந்தது. பொங்கல் வைக்கும் நல்ல நேரம் இரவு 8.00 மணி என்று முதலில் ஒரு அறிவிப்பு செய்யப்பட்டதுதான் அது. அப்புறம், பொங்கல் அமாவாசையில் வருகிறது. அதனால், மறுநாள்தான் பொங்கல் வைக்க வேண்டும் என்று கூடவே இன்னொரு புரளி வேறு.
இப்படி பொங்கல் வைப்பதற்கு நல்ல நேரம் குறித்துக்கொடுக்கும் கோளாறு எப்படி ஏற்பட்டது? எப்போது ஏற்பட்டது? ஏன் ஏற்பட்டது? என்பதை விளக்கி எழுதினால், சோதிட மேதைகள், பத்திமான்கள், ஏன் ஊதுவத்தி வணிகர்கள் கூட வம்புக்கு வந்துவிடுவார்கள். அதனால், அதை எழுதாமல் விடுகிறேன்.

கோளாறு 2:- சூரியப் பொங்கலுக்கு மெனக்கெட்டு நேரம் குறித்து கொடுக்கின்ற சோதிடக் குருமார்கள், ஏனோ தெரியவில்லை மாட்டுப் பொங்கலுக்கும் மறுநாள் காணும்(கன்னிப்) பொங்கலுக்கும் நேரம் குறித்துக் கொடுப்பதில்லை. பொங்கலுக்கு முதல் நாள் போகிப் பண்டிகையில் இத்தனை மணிக்குதான் பழையத் தட்டுமுட்டு துணிமணிகளைக் கொளுத்த வேண்டும் என்றும் நேரம் குறித்துக் கொடுப்பதில்லை. மண்டையைக் குழப்பும் இந்தக் கோளாறுக்காக எங்கே போய் முட்டிக்கொள்வதோ தெரியவில்லை!
கோளாறு 3:- பொங்கலை அறுவடைத் திருநாள் என்றும் தமிழர் திருநாள், உழவர் திருநாள் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறோம். இப்போது புதிதாக ஒரு புராணப் புழுகை அள்ளிவிடத் தொடங்கி இருக்கிறார்கள். குறிப்பிட்ட கடவுளர் ஒருவர் சூரியனாகவே வடிவெடுத்தாராம். அதனால், பொங்கலன்று சூரியப் பகவானோடு அந்தக் கடவுளரையும் சேர்த்து வழிபட்டால் கோடானும் கோடி நன்மை உண்டாகுமாம். இப்படி, இயற்கை வழிபாட்டை ஒட்டிய பொங்கலின் பண்பாட்டுச் சிறப்பை மழுங்கடித்து அதில் மதச்சாயத்தைப் பூசியும் குறிப்பிட்ட ஒரு சமயத்திற்குச் சார்புபடுத்தியும் கோளாறு செய்யப் பார்க்கிறது ஒரு தரப்பு.
கோளாறு 4:- பொங்கல் நாளில் அதாவது தை முதல் நாளில்தான் தமிழ்ப் புத்தாண்டாகிய திருவள்ளுவராண்டு பிறக்கிறது. இலக்கியத்திலும், வானியலிலும் இதற்குத் தக்க சான்று உண்டு. தமிழ்க்கடல் மறைமலை அடிகள், திரு.வி.க, பேராசிரியர் கா.நமசிவாயர், சிவனியப் பெரியார் சச்சிதானந்தர், நாவலர் சோமசுந்தர பாரதியார், உ.வே.சாமிநாத ஐயர், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் உள்ளிட்ட ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட அறிஞர் பெருமக்கள் ஒன்றுகூடி அய்வுசெய்து, தை முதலே தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்தனர். தமிழ்நாடு அரசும் இதனை ஏற்றுக்கொண்டு அரசாணை பிறப்பித்துள்ளது.
ஆயினும், தை முதல் நாளை இன்னமும் தமிழ்ப் புத்தாண்டாகச் சிலர் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட சமயஞ்சார்ந்த அமைப்புகளும் தலைவர்களும் இதனை ஏற்பதே இல்லை. அதற்கேற்றவாறு மக்களையும் தவறாக வழிநடத்துகின்றனர். இவர்கள் தைப்பொங்கல் வாழ்த்து மட்டுமே சொல்கிறார்கள். மறந்தும்கூட, தமிழ்ப் புத்தாண்டு என்று மூச்சுப் பரிவதே இல்லை.
சமய நாட்டமுள்ளவர்கள், தமிழ்ப் புத்தாண்டு என்னும் தமிழர்தம் வரலாற்று உண்மையை இருட்டடிப்பு செய்வதில் மிகவும் குறியாக இருக்கின்றனர்.
கோளாறு 5:- மலேசியாவில் வெளிவரும் இரு நாளிகைகள் பொங்கல் வாழ்த்தோடு தமிழ்ப் புத்தாண்டு என்றும் அறிவித்து செய்தி போடுகின்றன. ஆனால், சில ஏடுகளில் தமிழ்ப் புத்தாண்டு என்று ஒரு இடத்திலும்கூட வந்துவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்கிறார்கள். இவர்கள் இப்படியொரு வரலாற்று மறைப்பைச் செய்வதற்குச் சில பின்னணிகளும் அடிப்படைகளும் இருக்கின்றன. அதைப் பற்றியெல்லாம் இங்கு விரிவாகப் பேச விருப்பமில்லை.
கோளாறு 6:- நாட்டில் குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளும், சமயம் சார்ந்த அமைப்புகளும், பொது இயக்கங்களும் கூட தமிழ்ப் புத்தாண்டைப் பற்றி கண்டுகொள்வதே இல்லை; வாழ்த்து சொல்லுவதும் இல்லை. அப்படி ஒன்று இருப்பதாகவே காட்டிக்கொள்வதும் இல்லை. இவர்களின் இந்த நடிப்பு இன்னும் எத்தனை காலத்திற்கு நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். (ஆனாலும், இவ்வாண்டு எதிர்க்கட்சிகளில் இருக்கும் நமது தலைவர்கள் வழங்கிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி நாளிகைகளில் வெளிவந்திருந்தன. மாற்றத்திற்கான ஒரு நல்ல தொடக்கமாக இந்தச் சொல்லலாம்.)
கோளாறு 7:- அரசியலாளர்கள் சிலர், சில செய்தியிதழ்கள் போலவே தமிழ் வானொலி தொலைக்காட்சி ஊடகங்களும் தமிழ்ப் புத்தாண்டைத் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்கின்றன. அவ்வளவு ஏன். கண்ட கண்ட குப்பைகளையெல்லாம் உளறிக்கொட்டி கிளறிமூடும் தனியார் வானொலிகூட பொங்கல்! பொங்கல்! என்று முழங்கியதே தவிர தமிழ்ப் புத்தாண்டு என்று ஒருமுறைகூட சொல்லவில்லை. பெர்னாமா தொலைக்காட்சி அலைவரிசை மட்டுமே தன்னுடைய செய்தியில் தமிழ்ப் புத்தாண்டு பற்றி கொஞ்சமாகப் பேசியது.
இத்தனையையும் வைத்துப் பார்க்கும்போது, பொங்கலைத் தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்துவிடக் கூடாது, ‘தைப் பிறப்பே தமிழ்ப் புத்தாண்டு’ என்பது மக்கள் மனதில் பதிந்துவிடக் கூடாது என்பதில் சில தரப்பினர் மிக மிகக் கண்ணும் கருத்துமாக இருப்பதைக் காண முடிகிறது . எது எப்படியோ. ஒன்றுமட்டும் உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது. இந்த நுண்ணரசியலுக்குப் பின்னணியில் யாரோ ஒரு தனியாள் அல்லது ஒரு இயக்கம் கண்டிப்பாக இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழ்ப் புத்தாண்டை இருட்டடிப்புச் செய்வதற்கான ஆதரவும் அதற்குரிய சதித்திட்டமும் வேறொரு நாட்டிலிருக்கும் ஆரிய வழித்தோன்றல்கள் வழியாக இவர்களுக்குக் கிடைக்கலாம்.

இத்தனைக் கோளாறுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டு பொங்கலும் தமிழ்ப் புத்தாண்டும் சதிராட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது.
பொங்கல் திருநாளைச் சமயம் கடந்த பண்பாட்டு விழாவாகவும், உலகத் தமிழருக்கு உரிய தமிழ்ப் புத்தாண்டாகவும் கொண்டாடுகின்ற காலம் மலரவேண்டும். அவ்வாறு மலரும் நாளே தமிழின விடுதலை நாளாக இருக்கும்; தமிழரின் விடிவுக்குரிய தொடக்கமாக அமையும்.
Wednesday, January 20, 2010
எங்கூரு பொங்கல் கொண்டாட்டமும் கோளாறும் (1)
கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வழக்கம், இப்போது போல இருந்ததில்லை. ஆனால், இன்றோ வீட்டுக்கு வீடு பொங்கல் வைப்பது கட்டாயாமான ஒன்றாகிவிட்டது.
இன்றைய நிலையில் பொங்கல் கொண்டாட்டம் பல புதிய பரிணாமங்களைக் கண்டுவிட்டது. இற்றைநாள் பொங்கலில் பெருமைப்படத்தக்க பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவை என்னென்ன என்று கொஞ்சம் விரிவாகக் காண்போமா?
மலேசியாவில் பொங்கல் கொண்டாட்டங்கள்
1.இப்போது மலேசியத் தமிழர்கள் அனைவரும் வீட்டுக்கு வீடு பொங்கல் வைக்கின்றனர். இது பொங்கலுக்குக் கிடைத்திருக்கும் பெருமதியாகக் கொள்ளலாம்.

2.பொது இடங்களில் நூறு, இருநூறு, ஆயிரம் எனப் பெருந்திரளாக மக்கள் ஒன்றுகூடி பொங்கல் வைத்து சாதனை புரிகின்றனர். இதனால், மற்ற இனத்தாரின் கவனம் பொங்கல் மீது இப்போது விழுந்திருக்கிறது.
3.தமிழர்களோடு இணைந்து மலாய்க்காரர், சீனர் என மூவினத்தவரும் பொங்கலிடும் புதிய பண்பாடு அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்து வருகின்றது.
4.நாட்டுப் பிரதமர் தொடங்கி மற்ற இனத்தைச் சார்ந்த அமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர்கள் தீபாவளிக்கு மட்டுமே வாழ்த்துச் செய்தி வழங்கிய காலம் மாறி, இப்போது பொங்கலுக்கும் வாழ்த்துச் செய்தி தருகிறார்கள்.

5.மலேசியத் தமிழ் நாளிதழ்கள் பொங்கலை முன்னிட்டு சிறப்புப் பக்கங்கள், இணைப்புகள் வெளியிடுகின்றன. அதோடு, தங்கள் ஊழியர்களுக்கு ஒருநாள் விடுமுறையும் விடுகின்றனர். இது பொங்கலுக்குத் தரப்படும் மரியாதை எனவும் சொல்லலாம்.
6.நாட்டில் வெளிவரும் வார, மாத இதழ்கள் அனைத்தும் பொங்கல் சிறப்பிதழ் வெளியிட்டு பொங்கல் குதூகலத்தை அதிகப்படுத்துகின்றன.
7.ஒலி – ஒளி ஊடகங்கள் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளைப் படைக்கின்றன. அதுவும், சொந்த நிகழ்ச்சிகளாக உள்ளூர் நிகழ்ச்சிகளாக இருப்பது குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது.
8.தமிழ் சார்ந்த இயக்கங்கள் பொங்கல் விழா, தமிழர் திருநாள் முதலான பெயர்களில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்துகின்றன. கலை, இலக்கியப் போட்டிகளும் நடத்தப்பெற்று பரிசுகள் வழங்கப்படுகின்றன.
9.கோலாலம்பூரில் செயல்படும் தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பு ஆண்டுதோறும் தேசிய அளவில் தமிழர் திருநாள் விழாவை நடத்தி நாடு முழுவதும் தமிழ் உணர்வைப் பரவச் செய்கிறது.
10.பொங்கல் அன்றுதான் திருவள்ளுவர் நாளும் வருகின்றது. திருக்குறளைத் தமிழர் மறையாக ஏற்றுக்கொண்டு தமிழ் வாழ்வு வாழும் தமிழன்பர்கள் திருவள்ளுவர் நாளைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். கூட்டு வழிபாடு, திருவள்ளுவர் குருபூசை என்ற பெயர்களில் ஒன்றுகூடி அகவழிபாடு செய்கின்றனர்.
11.பொங்கலன்று திறந்த இல்ல விருந்துகளும் இப்போது ஆங்காங்கு நடைபெறுகின்றன. தமிழ்ப் பண்பாட்டுச் சூழலை வெளிப்படுத்தும் வகையில் இவ்விருந்து நிகழ்ச்சிகள் நடக்கின்றன. முற்றிலும் மரக்கறி உணவுகள் பரிமாறப்படுகின்றன. விருந்தினர்கள் அனைவரும் தமிழ்ப் பண்பாட்டு உடையில் வந்து விருந்தோம்பலில் கலந்து சிறப்பிக்கின்றனர்.
12.நாட்டில் உள்ள பெரும்பாலான தமிழ்ப்பள்ளிகள் பொங்கலன்று சிறப்பு விடுமுறை எடுக்கின்றன. இது புதிய பண்பாடாக உருவாகி இருக்கிறது. முன்பெல்லாம் திருவிழா, தீமிதி, சித்திரைப் பௌர்ணமி என்று விடுமுறை எடுத்து வந்த தமிழ்ப்பள்ளிகள் இப்போது பொங்கலுக்கு விடுமுறை எடுத்துக்கொள்கின்றன.
13.சில தமிழ்ப்பள்ளிகளில் பொங்கல் விழா கொண்டாடப்படுகின்றன. ஆசிரியர்களும் மாணவர்களும் ஒன்றுசேர்ந்து பொங்கலிட்டு மகிழ்கின்றனர். தவிர, பொங்கல் தொடர்பாக பல போட்டிகளும் நடத்தப்படுகின்றன. நமது மாணவர் சமுதாயத்தில் தமிழ்ப் பண்பாட்டு உணர்வுகளை வளர்ப்பதற்காக தமிழ்ப்பள்ளிகளில் பொங்கல் விழா கொண்டாடப்படுவது மகிழ்ச்சிக்குரியது.
14.இதேபோல், இப்போதெல்லாம் கல்லூரி, பல்கலைக்கழகம், ஆசிரியர் பயிற்சிக் கழகம் முதலான உயர்க்கல்வி நிலையங்களில் பயிலும் நமது மாணவர்கள் ஒன்றுகூடி பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவதையும் காண முடிகிறது.
15.நாட்டில் உள்ள பல கிறித்துவ தமிழன்பர்கள் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். மதத்தால் கிறித்துவர்கள் ஆனாலும் இனத்தால் தமிழர்களே என்ற உனர்வோடு அவர்கள் தேவாலயங்களில் ஒன்றுகூடி பொங்கலிட்டு மகிழ்கின்றனர். பொங்கல் சமயத்திற்கு அப்பாற்பட்ட ஒரு பண்பாட்டு விழா என்பதற்கு இதுவோர் நல்ல சான்று.
16.இத்தனையும் போக, தை முதல் நாள் பொங்கல் மட்டுமல்ல; தமிழ்ப் புத்தாண்டும் கூட. எனவே, இந்தத் தமிழ்ப் புத்தாண்டை வரவேற்கும் வகையில் தமிழ் நாளேடுகளும் சில தமிழ் சார்ந்த பொது இயக்கங்களும் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடுகின்றன. தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வதோடு நெஞ்சை நிமிர்த்தி ‘தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு’ என்று உரக்க அறிவித்துக்கொண்டிருக்கின்றன.
17.மலேசிய நண்பன், மக்கள் ஓசை ஆகிய இரு நாளேடுகளும் மலேசியத் திராவிடர் கழகம், மலேசியத் தமிழ்நெறிக் கழகம், தமிழியல் ஆய்வுக் களம், உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம், தமிழ் வாழ்வியல் இயக்கம் முதலான அமைப்புகளும் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக வலியுறுத்தி வருகின்றன.
18.தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு மலேசியாவில் தொடர்ந்து தமிழ் நாள்காட்டி வெளியிடப்பெறுகின்றது. தமிழியல் ஆய்வுக் களம் இந்த அரும்பணியைச் செய்து வருகின்றது. இப்போது பிறந்துள்ள திருவள்ளுவராண்டு 2041ஐ முன்னிட்டு முழுக்க முழுக்கத் தமிழை முன்படுத்திய நாள்காட்டி வெளியிடப்பட்டிருக்கிறது.
இப்படியாக, மலேசியாவில் பொங்கல் திருநாள் - தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒருவகையில், இவையெல்லாம் தமிழ்ப் பண்பாட்டுச் செழுமையின் வெளிப்பாடுகளாக இருக்கின்றன.
அதற்காக, நமது மக்களிடையே தமிழ்ப் பண்பாட்டின் எச்சங்கள் இன்னும் ஆழமாக இருக்கின்றன; நமது மக்களிடையே தமிழ்ப் பண்பாட்டு உணர்வுகள் மேலோங்கி வருகின்றன என்றெல்லாம் மார்தட்டிக்கொள்ள முடியாது.
காரணம், மேலே சொன்ன அத்தனைக்கும் நேர்மாறான கோளாறுகள் இருக்கவே செய்கின்றன. அல்லது, திட்டமிட்டு சில கோளாறுகள் செய்யப்படுகின்றன. பொங்கல் பெயரில் நடக்கின்ற குளறுபடிகளை அடுத்த இடுகையில் எழுதுவேன்.
அதுவரை.. நீங்களும் கொஞ்சம் உங்கள் சிந்தனைக் குதிரையை ஓடவிடுங்களேன்..!
Thursday, January 14, 2010
பொங்கலோ பொங்கல்! தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்து!
Sunday, January 11, 2009
தை முதல் நாள் - தமிழ்ப் புத்தாண்டு
கடந்த திருவள்ளுவராண்டு 2039 (அதாவது ஆங்கில ஆண்டு 2008)இல், தமிழ்நாட்டு அரசு தமிழகத்தின் ஆளுநர் வழியாகத் தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என உலகத்திற்கு அறிவித்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அறிவிப்பை உலகத் தமிழர்கள் அனைவரும் ஒருமுகமாக வரவேற்றுப் பேருவகை அடைந்தனர்.
இந்த அறிவிப்பின் வழியாக, தமிழர்களிடையே பலகாலம் நிலவிவந்த "தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாளா? அல்லது சித்திரை முதல் நாளா?" என்ற கருத்து வேறுபாட்டுக்கு முடிந்த முடிவாக ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்த அறிவிப்புக்கு முன்பாக...
தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டுமுறையை அதிகாரப்படியாக ஏற்றுக்கொண்டு 1971ஆம் ஆண்டுமுதல் அரசு நாட்குறிப்பிலும் அதன்பின்னர் 1972 முதற்கொண்டு அரசிதழிலும் 1981 தொடங்கி அரசாங்கத் தொடர்புடைய அனைத்து அலுவல்களிலும் பின்பற்றி வந்துள்ளது.
இதற்கும் முன்பாக...

1921ஆம் ஆண்டு தமிழ்க்கடல் தவத்திரு மறைமலையடிகள் தலைமையில் 500 தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கூட்டம் நடத்தப்பெற்றது. சைவம், வைணவம், புத்தம், சமணம், இந்து, கிறித்துவம், முகமதியம் என எல்லா சமயங்களையும் சார்ந்த தமிழ்ப் பேரறிஞர்கள் ஒன்றுகூடி ஆய்வுமுறைகளின் அடிப்பையில் முப்பெரும் உண்மைகளை உலகத்திற்கு அறிவித்தனர்.
1.தைமுதல் நாளே தமிழாண்டுப் பிறப்பு
2.திருவள்ளுவர் பெயரில் தமிழாண்டைப் பின்பற்றுதல்
3.ஆங்கில ஆண்டுடன் (ஏசு கிறித்து பிறப்பாண்டு) 31 ஆண்டுகளைச் கூட்டித் திருவள்ளுவராண்டைக் கணக்கிட வேண்டும்.
தமிழுக்கு அரணாக இருந்துவிளங்கிய 500 தமிழறிஞர்கள் சமய வேறுபாடுகளையும் கொள்கை மாறுபாடுகளையும் மறந்துவிட்டு; ஆரியக் கலப்பையும் வடமொழிக் குறுக்கீட்டையும் உதறிவிட்டு தமிழ் ஒன்றையே முன்படுத்தி முறையான ஆய்வியல் பார்வையோடு தமிழ்ப் புத்தாண்டு அறிவிப்பை வெளியிட்டனர்.
அன்றுதொடங்கி உலகம் முழுவதுமுள்ள தமிழ்ப் பற்றாளர்கள் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக ஏற்றிப் போற்றி கொண்டாடி மகிழ்கின்றனர். தமிழாண்டு முறைப்படி தங்கள் வாழ்வியலை அமைத்துக்கொண்டு தமிழியல் நெறிப்படி வாழ்ந்தும் வருகின்றனர்.
இதற்கெல்லாம் முன்பாக...
தைப் பொங்கல் விழா நாளைத் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கமாக தமிழர்கள் பலகாலமாகக் கொண்டாடி வந்துள்ளனர். இதற்கான அகநிலைச் சான்றுகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன.
"தைஇத் திங்கள் தண்கயம் படியும்" என்று நற்றிணையும்
"தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" என்று குறுந்தொகையும்
""தைஇத் திங்கள் தண்கயம் போல்" என்று புறநானூறும்
"தைஇத் திங்கள் தண்கயம் போல" என்று ஐங்குறுநூறும்
"தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" என்று கலித்தொகையும்
தைத் திங்களில் புத்தாண்டு தொடங்கிய தமிழரின் வரலாற்றை இன்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இலக்கியப் பாடல்களில் சான்றுகள் இவ்வாறு இருக்க, பாமர மக்கள் வழக்கிலும் பழமொழி வடிவத்தில் சில சான்றுகளும் இருக்கின்றன.
"தைப் பிறந்தால் வழி பிறக்கும்" என்ற பழமொழியும்
"தை மழை நெய் மழை" என்ற பழமொழியும்
தமிழர் புத்தாண்டுக்கான வரவேற்பையும் தமிழர் வாழ்வில் தைப் பிறப்புக்கு இருக்கின்ற சிறப்பிடத்தையும் பறைசாற்றுகின்றன.
மேற்சொன்ன அனைத்துக்கும் மேலாக...
உலகத்தில் இயற்கை என்று ஒன்று இருக்கின்றது. அது இயங்கிக்கொண்டே இருக்கிறது. இயற்கையின் இயக்கத்திற்கு ஏற்பவே உலகத்தின் அனைத்து நடப்புகளும் அமைகின்றன. அந்தவகையில், இயற்கைக்கும் தைப் பிறப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தைத்திங்கள் அதாவது சுறவ மாதம் முதல் நாளில் சூரியன் வடதிசை நோக்கி தன்னுடைய பயணத்தைத் (அயணம்) தொடங்குகிறது. இதனைத் தமிழில் வடசெலவு எனவும் வடமொழியில் உத்தராயணம் என்றும் கூறுவர்.
ஆக, சூரியன் வடதிசை நோக்கிப் புறப்படும் புதிய பயணத்தைத் தொடங்கும் நாளில் தமிழர்கள் பொங்கல் வைப்பதும் அதனைச் சூரியப் பொங்கல் என்று வழங்குவதும் மிகப் பொருந்த அமைந்துள்ளன. ஆகவே, இதனைத் தமிழர்கள் ஆண்டுத் தொடக்கமாகக் கொண்டது இயற்கையின் சட்டத்திற்கும் உட்பட்டு இருப்பது கவனிக்கத்தக்கது.
இத்தனைக்கும் இடையில்...ஆதியிலிருந்து தைத் திங்களையே தமிழ்ப் புத்தாண்டாக இருந்தாலும், இடைக்காலத்தில் சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கிய மரபும் தமிழரிடையே இருந்துள்ளது. கி.மு 317ஆம் ஆண்டுக்குப் பின்னர் சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக உருவாகியது. சித்திரைப் புத்தாண்டுக் கணக்கும் தமிழருக்கு உரியதே.
பிற்காலச் சோழர் காலத்தில் சித்திரைப் புத்தாண்டுக்குப் பெரும் செல்வாக்கு ஏற்பட்டது. இதற்குக் காரணம், சோழநாட்டில் தமிழியத்தின் தலைமை கொஞ்சங் கொஞ்சமாக மாறியும் மறுவியும் திரிந்தும்போய் ஆரியப் பார்ப்பனியம் தலையெடுக்கத் தொடங்கியதுதான்.
இதனால், அதுவரை தூயத்தமிழாக இருந்த தமிழரின் வானியல் கண்டுபிடிப்புகளும், ஐந்திரக் குறிப்புகளும், நாள், நாள்மீன், பிறைநாள், திங்கள், ஓரை (ஜோதிடம், தினம், நட்சத்திரம், திதி, இராசி, மாதம்) ஆகிய அனைத்தும் வடமொழிக்கு மாற்றப்பட்டன. தமிழர் கண்ட வானியல் மரபு ஆரியமயமாக்கப்பட்டு அடியோடு மறைக்கப்பட்டது.
இதுமட்டுமல்லாது, தொல்காப்பியர் காலத்தில், அதாவது கி.மு 5ஆம் நூற்றாண்டுக்கும் கி.மு.7ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆவணி முதல்நாளில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கப்பட்டுள்ளது. தொடிதோட் செம்பியன் எனும் முசுகுந்த சோழன் என்ற மன்னன் ஆட்சிக்காலத்தில் ஆவணிப் புத்தாண்டுக்குப் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாக மணிமேகலைக் காப்பியம் தெரிவிக்கின்றது.
முடிவும் விடிவும் இதுதான்!
ஓர் இடைக்கால மாற்றம் என்பதாலும், ஆரிய வலைக்குள் சிக்கிக் கொண்டதாலும், மீட்க முடியாத அளவுக்குக் கலப்படம் நேர்ந்துவிட்டதாலும், பார்ப்பனியக் கூறுகளும் மத ஊடுறுவல்களும் அளவுக்கதிமாக நேர்ந்துவிட்டதாலும் சித்திரையைத் தமிழ்ப் புத்தாண்டாக ஏற்கமுடியாது என 1921இல் 500 தமிழறிஞர்கள் எடுத்த முடிவு முற்றிலும் சரியானதே என்பதை ஆய்வுப்பார்வையும் அறிவுநோக்கும் கொண்ட எவரும் ஒப்புவர். அதுபோலவே ஆவணிப் புத்தாண்டும் வழக்கற்றுப் போனதோடு காலச்சூழலும் மாறிப்போய்விட்டது.
இந்நிலையில், அகநிலையிலும் புறநிலையிலும் தமிழர்கள் விடுதலை பெற்ற இனமாக வாழவும் உயரவும் தனித்திலங்கவும் தைப்பிறப்பையே தமிழாண்டுப் பிறப்பாக – தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்! கடவுளின் தீர்ப்பு!
உலகின் பழமையான இனமாகிய தமிழினம் தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால், தமிழரின் வாழ்வியல் தமிழியலைச் சார்ந்திருக்க வேண்டும்; தமிழியத்தின் விழுமியங்களைத் தாங்கியிருக்க வேண்டும்; தமிழிய மரபுவேர்களில் எழுந்துநிற்க வேண்டும். இந்த முடிவொன்றே தமிழருக்கு விடிவாக அமையும்.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
முந்தையக் கட்டுரைகள்:-
Monday, April 14, 2008
தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 1

மாந்த நாகரிகம் தொடங்கிய காலம் தொட்டு வெவ்வேறு இன மக்கள் வெவ்வேறு நாட்களைத் தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள். இன்று சமய அடிப்படையில் கிறித்தவர்கள் சனவரி முதல் நாளையே புத்தாண்டின் தொடக்கமாகக் கொண்டாடுகிறார்கள். இசுலாமியர்கள் முகமது நபி மெக்காவில் இருந்து மதினாவிற்குப் புலம்பெயர்ந்த நாளில் இருந்தே ஆண்டுகளைக் கணக்கிடுகிறார்கள். இப்படியே புத்த சமயத்தவர் புத்தர் பிறந்த நாளில் இருந்து ஆண்டுகளை எண்ணுகிறார்கள்.
கிறித்தவர்களுக்கு சனவரி முதல்நாள் எப்போதுமே புத்தாண்டின் தொடக்கமாக இருந்ததில்லை. பதினெட்டாம் நூற்றாண்டுவரை யேசுபிறந்த திசம்பர் 25 ஆம் நாளே புத்தாண்டின் தொடக்கமாக இருந்தது. ஆயினும், கிறித்துவ நாட்காட்டியின் அடிப்படையிலேயே சனவரி முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்காட்டி காலத்துக்குக் காலம் திருத்தப்பட்டு ஒழுங்குபடுத்தி வரப்பட்டிருக்கிறது.
உரோம சக்கரவர்த்தி யூலியசு சீசர் அவர்கள் கி.மு. 45 ஆம் ஆண்டு ஒரு புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தினார். அதற்கு யூலியன் நாட்காட்டி என்று பெயர். அதற்கு முந்தி ஒரு ஆண்டில் பத்து மாதங்களும் 304 நாட்கள் மட்டுமே இருந்தன. கிறித்துவ பாதிரிமார்கள் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக நாட்காட்டியில் உள்ள நாட்களையும் மாதங்களையும் கூட்டியும் குறைத்தும் சமயத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்தினார்கள். சில சமயங்களில் கையூட்டு வாங்கிக் கொண்டு ஆண்டை நீட்டியும் குறைத்தும் காட்டினார்கள்! யூலியஸ் சீசர் அந்தக் குளறுபடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். தனது பெயரில் ஒரு மாதத்தைக் கூட்டினார். அவர் கணித்த நாட்குறிப்பு கிபி 1,500 வரை பயன்பாட்டில் இருந்தது. கிமு 45ஆம் ஆண்டில் நாட்காட்டியைத் திருத்தி அமைத்ததால் அந்தக் குழப்ப ஆண்டு மொத்தம் 445 நாட்களைக் கொண்டிருந்தது.
அதன் பின் கிரிகோறியன் (Gregorian) நாட்காட்டி நடைமுறைக்கு வந்தது. ஆனால் கிபி 1900 வரை பழைய நாட்காட்டியை கிரேக்கம், உருசியா போன்ற நாடுகள் கைவிடவில்லை. இன்றும் உருசியாவின் பழைமைவாத தேவாலயங்கள் யூலியன் நாட்காட்டியைத்தான் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன.
யூலியன் நாட்காட்டி ஒரு ஆண்டில் 365 1/4 நாட்கள் இருப்பதாகக் கணக்கிட்டது. கணக்கைச் சரிசெய்ய நாலாண்டுக்கு ஒருமுறை (Leap Year) ஒரு நாள் பிப்பிரவரி மாதத்துக்குரிய நாட்களோடு கூட்டப்பட்டது. ஆனால் உண்மையில் ஒரு ஆண்டு 365 நாட்கள், 5 மணி, 49 நிமிடம், 12 வினாடியைக் (365.2424) கொண்டது. இதனால் ஒரு புதிய சிக்கல் உருவாகியது. 128 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 நாள் வித்தியாசம் ஏற்பட்டது. எனவே 1582இல் போப் கிரிகோறியன் அதைச் சரிசெய்ய 10 நாட்களைக் குறைத்தார். அதன் பின்னர் 400 ஆல் பிரிக்கக்கூடிய நூற்றாண்டுகளில் (1700, 1800, 1900) ஒரு நாள் கூட்டப்பட்டது. ஆனால் 2000இல் கூட்டப்படவில்லை.
அப்படியும் கிபி 4,000 அல்லது 5,000 ஆண்டளவில் 12 நாட்கள் வித்தியாசம் ஏற்பட்டுவிடும் எனத் தெரிய வந்தது. எனவே இந்தத் தொல்லையில் இருந்து விடுபட 1972 ஆம் ஆண்டு அணு மணிப் பொறி ஒன்றினைக் கண்டு பிடித்தார்கள். அது காட்டும் நேரமே உலகத்தின் முறைமைப்பட்ட (official) நேரம் என எல்லா நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.
வரலாற்றில் எகிப்தியர்கள்தான் முதன் முதலில் ஒரு ஆண்டில் 365 நாட்களைக் கொண்ட நாட்காட்டியை கிமு 4236இல் கண்டு பிடித்ததாகச் சொல்லப்படுகிறது.
தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 2
ஆனால் தமிழர்கள் ஞாயிறு ஆண்டைக் (365 1/4); கொண்ட நாட்காட்டியை உருவாக்கியதாகத் தெரியவில்லை. உருவாக்கியதற்கான சான்று எதுவும் இல்லை.
காலத்தை இவ்வளவு நுணுக்கமாகக் கணக்கிட்ட புலவர்கள், இலக்கண ஆசிரியர்கள், அறிஞர்கள் தமிழர்களுக்கென ஒரு பொதுவான தொடர் ஆண்டை வரையறை செய்யாது போயினர். அதனால் அரசர்கள் புலவர்கள் சான்றோர்கள் பிறப்பு ஆண்டு, மறைவு ஆண்டு இவற்றைத் தொடர் ஆண்டோடு தொடர்பு படுத்தி வரலாற்றைப் பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது.





