Tuesday, January 20, 2009

என் இனியத் தமிழ் வலைப்பதிவர்களே...

என் இனிய மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களே, வலையுலக வாசகர்களே, தமிழ்க் கணினி, இணையப் பயனாளர்களே...
வணக்கம். வாழ்க! தமிழ்நலம் சூழ்க!


இரண்டாம் முறையாகப் பதிவர் சந்திப்பு ஏற்பாடாகி உள்ளதை இந்நேரம் அறிந்திருப்பீர்கள். இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தி மட்டுமல்ல; அடுத்த இலக்குகளைத் தொடப்போகும் வெற்றிக்குரிய செய்தியுமாகும்.

மிக வேகமாக வளர்ந்துவரும் இணைய உலகில், மலேசிய வலைப்பதிவுகள் கடலில் கரைத்த பெருங்காயமாக இருந்துவந்த காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. இன்று, உலகத் தமிழ் வலைப்பதிவுகளுக்கு நடுவில் நமது மலேசிய வலைப்பதிவுகளும் குறிப்பிடத்தக்க அடையாளத்தை நிறுவி வருகின்றன என்பது நடப்பியல் உண்மை.

இருந்தாலும், நாம் செல்லவேண்டிய தொலைவுகள் அதிகமுள்ளன; செய்யவேண்டிய பணிகள் நிறையவுள்ளன.

இதனைக் கருத்தில்கொண்டு முன்னெடுக்கப்பட்ட முயற்சிதான் "வலைப்பதிவர் சந்திப்பு" என்ற இந்த முனைப்பு.

"வலைப்பதிவர் சந்திப்பு" எனும் பெயரில் மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களை ஒருங்கிணைத்து – வழிகாட்டி – வளர்த்தெடுக்கும் உயரிய சிந்தனையை முன்மொழிந்ததோடு மட்டுமல்லாமல், முதற்கட்ட சந்திப்பை முடித்துக்காட்டிய பெருமை நன்னோக்கம் கொண்ட சிலரைச் சாரும்.

அவர்களுள் முகாமையானவர்கள் விக்னேஷ்வரன் அடைக்கலம் அவர்களும் அவருடன் உழைத்த மு.வேலன், மூர்த்தி போன்றோர்களும், முதல் சந்திப்பில் கலந்துகொண்ட பன்னிருவரும் தான் என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.

இந்தக் கூட்டணியின் முனைப்பில்தான், கடந்த 2008 திசம்பர் 14ஆம் நாள் கோலாலும்பூரில் முதலாவது வலைப்பதிவர் சந்திப்பு நடந்தது. 12 பேர் மட்டுமே கலந்துகொண்ட இதுவோர் எளிய சந்திப்பாக இருக்கலாம். ஆனால், மலேசியத் தமிழ் வலைப்பதிவு வரலாற்றில் முக்கியமான நிகழ்வு என்பதைக் காலம் கண்டிப்பாக அடையாளப்படுத்தும் – அடையாளப்படுத்த வேண்டும்.

இத்தோடு நின்றுவிடாமல், "வலைப்பதிவர் சந்திப்பு" தொடர வேண்டும் என்ற ஆவலின் விளைவுதான் தற்போது நடைபெறவுள்ள மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு – 2.

அதன் விவரம் பின்வருமாறு:-

நாள்:-25-1-2009 (ஞாயிறு)
நேரம்:-பிற்பகல் மணி 2.00 தொடக்கம்
இடம்:-தமிழியல் நடுவம், பாரிட் புந்தார், பேரா.
(பள்ளிவாசல் எதிர்ப்புறம் – ஏ.ஆர்.ரகுமான் உணவகம் அருகில்)

மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு 2இன் நோக்கம்:-

*1.மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களிடையே அறிமுகத்தை ஏற்படுத்துதல்
*2.மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களை ஒருங்கிணைத்தல்
*3.மலேசியத் தமிழ் வலைப்பதிவுகளின் தரத்தை மேம்படுத்தும் வழிவகைகளை ஆராய்தல்
*4.கணினி – இணையத் துறையில் தமிழ்மொழியின் பயன்பாட்டையும் பயனாளர்களையும் விரிவுபடுத்துதல்
*5.புதியப் பதிவர்களை உருவாக்கி; ஊக்கப்படுத்தி; வழிகாட்டுதல்
*6.மலேசியத் தமிழ் வலைபதிவுகளை மாற்று ஊடகமாக வளர்த்தெடுத்தல்

நமது மலேசியாவைப் பொறுத்தவரை, ஆங்கில, மலாய், சீன வலைப்பதிவு(புளோக்) ஊடகம் மக்களின் உற்ற ஊடகமாகவும் மாற்று ஊடகமாகவும் வேறூன்றி வளர்ந்து நிற்கிறது.

ஆனால், தமிழ் வலைப்பதிவு ஊடகம் இப்போதுதான் மெல்லென தலையெடுத்து வருகின்றது. மலேசியத் தமிழ் வலைப்பதிவுகளைத் தமிழ் மக்களின் முதல்தேர்வு ஊடகமாக உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுப்பதற்கு இதுபோன்ற வலைப்பதிவு சந்திப்புகள் மிகவும் பயன்படும் – பயன்படுத்தப்பட வேண்டும்.

ஆகவே, மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள், வலைப்பதிவு வாசகர்கள், தமிழ் இணைய ஆர்வலர்கள், தமிழ்க் கணினி பயனாளர்கள், வலைப்பதிவு தொடங்க விரும்புபவர்கள் என அனைவரும் இந்தச் சந்திப்பில் தவறாமல் கலந்து பயன்பெற அன்போடு அழைக்கிறோம்.

மேல்விளக்கத்திற்கும் தொடர்புக்கும்:-
விக்னேஷ்வரன் அடைக்கலம் (012-5578257), சுப.நற்குணன் (012-4643401), கோவி.மதிவரன் (013-5034981), கி.விக்கினேசு (012-4532803)

வருகைதரும் நண்பர்கள் தங்களின் வருகையைக் குறுஞ்செய்தி வழியாக தயவுசெய்து உறுதிபடுத்தவும். Type:-MTV[இடைவெளி]உங்கள் பெயர்[அனுப்பவேண்டிய எண்]0124643401

பி.கு:-
1.தெற்கிலிருந்து வருபவர்கள் PLUS நெடுஞ்சாலையிலிருந்து கமுண்டிங் அல்லது பண்டார் பாருவில் வெளியேறி பாரிட் புந்தார் வரலாம்.
2.வடக்கிலிருந்து வருவோர் நிபோங் திபாலில் வெளியேறி பாரிட் புந்தார் வரலாம்.
3.பாரிட் புந்தார் மணிக்கூண்டுக்கு அருகில்தான் பள்ளிவாசல் உள்ளது. பள்ளிவாசலுக்கு எதிர்புறத்தில் ஏ.ஆர்.ரகுமான் ஊணவகத்திற்கு பக்கத்தில் 'தமிழியல் நடுவம்' உள்ளது.

  • அன்புடன்,

ஏற்பாட்டுக் குழுவின் சார்பில்,

சுப.நற்குணன்.

5 comments:

தமிழ் said...

வாழ்த்துகள்

Anonymous said...

இனிய வாழ்த்துக்கள்.


பதிவர் சந்திப்பு வெற்றிபெற வாழ்த்துக்கள்.
முயன்றால் முடியாதது இல்லை,
தமிழ் காக்க,தமிழர் மானம் காக்க‌
எழுந்திரு, விழித்திரு, குறிசாரும் வரை.

வானம் வசப்படும்

அன்புடன்
பாலாஜி

அகரம் அமுதா said...

மலேசிய வலைப்பதிவர்க் கூடுகை நூறைக் கடந்து வெற்றிநடை போட வாழ்த்துகள்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர்கள் திகழ்மிளிர், பாலாஜி, அகரம் அமுதா,

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள் உரித்தாகட்டும்.

Anonymous said...

தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு நிறைவுடன் நடந்தேற எனது இதயப் பூர்வ வாழ்த்து.இச்சந்திப்பில் பங்குபெற ஆர்வம் இருந்தும் வர இயலாத நிலை. இருப்பினும்,இக்களம் வெற்றியடைய ஏற்பாட்டாளர்களை வாழ்த்துகிறேன்.

அன்பு வாழ்த்துடன்,
சந்திரன் இரத்தினம்,
ரவாங், சிலாங்கூர்.

Blog Widget by LinkWithin