Monday, September 14, 2009

இவனா தமிழன்? இருக்காது! யானைக்குப் பூனை பிறக்காது!

  • மனதைத் தொட்ட மரபுக்கவிதை - 2
மலேசியாவில் தமிழ் தமிழாக நிலவுவதற்கும் நிலைபெறுவதற்கும் அரும் பாடாற்றி வரும் விரல்விட்டுச் சொல்லத் தகுந்தவர்களில் குரல்விட்டுச் சொல்லத்தக்கவர் கவிஞர் ஐயா செ.சீனி நைனா முகம்மது அவர்கள். தமிழே தம் மூச்சாக வாழ்ந்து வருபவர் இவர். இதழியல் துறையில் மிக ஆழ்ந்த ஈடுபாடும் நீண்ட பட்டறிவும் கொண்டவர்.

தமிழ் இலக்கணத்தின் மரபியலையும் மரபுக் கவிதையின் மாண்பியலையும் தனியராகவே முயன்று காப்பதோடு, இவ்விரண்டையும் இளையோருக்குப் பயிற்றுவிக்கும் அரிய பணியையும் அயராது மேற்கொண்டு வருபவர். அதற்காகவே, நாடெங்கிலும் பம்பரமாகச் சுற்றிச்சுழன்று வகுப்புகள், பட்டறைகள், பயிலரங்குகள் என செயற்கரிய செய்பவர். இலக்கணமும் மரபுக் கவிதையும் கடுமையானது என்ற பொய்யான பரப்புரைகளை அடித்து நொறுக்கி அவை இரண்டையும் எளிதாகவும் இனிதாகவும் ஆக்கிக்காட்டிய பெருமை இவரையே சாரும்.

இவருடைய தொல்காப்பியத் திருப்பணியைப் போற்றி, தமிழகத்தின் தமிழ்ச்சுரங்கம் அமைப்பு கடந்த 2007ஆம் ஆண்டில் இவருக்கு ‘தொல்காப்பிய விருது’ வழங்கி சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

இறையருட்கவிஞர் நல்லார்க்கினியர் என்று எல்லாராலும் அன்பொழுக அழைக்கப்பெறும் இவர் ‘உங்கள் குரல்’ மாதிகையின் ஆசிரியராகவும் இருந்து நல்லதமிழ் வாழ்வுக்கும் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கும் வருந்தி உழைக்கின்றவர். கடந்த 2008இல் தனியொருவராக இருந்து உலக அளவில் முதன்முதலாக ‘தமிழ்ச் செம்மொழி சிறப்புமலரை’ வெளியிட்டு சாதனையை நிகழ்த்திக் காட்டியவர்; மலேசியத் தமிழ் வரலாற்றில் கண்டிப்பாக இடம்பெற வேண்டியவர்.

கவிஞர் ஐயா செ.சீனி நைனா முகம்மது அவர்கள் தம்முடைய உங்கள் குரல் இதழில் (ஆகத்து 2007) எழுதிய இவனா தமிழன்? என்ற கவிதை பற்றிய எனது பார்வையை இங்கு பதிவு செய்வதில் பெருமிதம் கொள்கிறேன்.
***************

டுத்த எடுப்பிலேயே இவனா தமிழன்? என்று நச்சென்று தொடங்கும் சீர்களில் கொப்பளிக்கும் அறச்சீற்றம் கவிதையை ஆறவமர இறுதிவரை படிக்கச் செய்துவிடுகிறது. சொல்லுக்குச் சொல் தமிழுக்கு எதிரான கேடுகளையும் மொழிமானங்கெட்டக் கேடர்களையும் பல்லுக்குப் பல் தட்டுகிறார்.

இவனா தமிழன்? இருக்காது
யானைக்குப் பூனை பிறக்காது!
இவனுக்குப் பாட்டன் பாண்டியன் என்றால்
எதிரிக்கும் கூடப் பொறுக்காது – இவன்
இனத்துக்கு நேர்ந்த குறைபேறு!

தமிழ்மரபுவழி வந்த தமிழர்களே இன்று கோடரிக் காம்புகளாக மாறி, தமிழையே வெட்டிச் சாய்க்கவும் வெறித்தனமாக சிதைக்கவும் செய்கின்றனர். சொந்த மொழிக்கு எதிராக இப்படியொரு ஈவிரக்கமற்றச் செயலை எப்படித்தான் செய்கிறார்களோ? என்று நாம் நினைப்பதற்குள் இப்படித்தான் செய்கிறார்கள் என்று கவிஞரே சொல்லிவிடுகிறார்.

தமிழால் வேலையில் சேருகிறான்
தமிழால் பதவியில் ஏறுகிறான்
தமிழ்ப்பகை கூடி தன்னலம் நாடி
தமிழ்மர பெல்லாம் மீறுகிறான் – அதை
தடுத்தால் பாம்பாய்ச் சீறுகிறான்!

மலேசியாவைப் பொறுத்தவரையில் தமிழர்களுக்கான அரசுப்பணிகள் பெரும்பாலும் தமிழ்ப் படித்ததன் பயனாகவே கிடைக்கிறது. தமிழ் போட்ட பிச்சையால் பிழைப்பு நடத்திக்கொண்டே நன்றிகெட்டத்தனமாகத் தமிழுக்கு இரண்டகம் செய்கிறார்கள். அண்மையில் மலாயாப் பல்கலைகழகத் தமிழ்த்துறையில் அரங்கேறிய அவலங்களை இதற்குச் சான்றாகச் சொன்னால் மிகப் பொருந்தும். இப்படியான இரண்டகச் செயல்களைக் கண்டு நற்றமிழர் பலரும் நொந்துகொண்டிருக்கின்றனர்; கவிஞரும் வருந்திக்கொண்டிருக்கிறார். இந்த நோவும் வருத்தமும் இத்தோடு நின்றதா? என்றால் இல்லை. இன்னும் தொடர்கிறது இப்படி,

வடமொழி சொல்லைப் போற்றுகிறான்
வம்புக்கு தமிழில் ஏற்றுகிறான்
கடுமொழி என்றே கனித்தமிழ்ச் சொல்லைக்
கண்டவர் மொழியில் மாற்றுகிறான் – அதைக்
கடிந்தால் உடனே தூற்றுகிறான்!

வேண்டுமென்றே, வேண்டாத சொற்களைத் தமிழில் கலப்பது இன்று நவினமாகிவிட்டது. மக்கள் பேசுகிறார்கள், தோட்டத்தில் பேசுகிறார்கள், நகர மக்களுக்கு இதுதான் புரிகிறது, இதுதான் நடப்பியல் என்றெல்லாம் நியாயங்கள் கூறிக்கொண்டு ஆங்கிலம், மலாய், சமற்கிருதம் என இன்னும் பிற அன்னிய மொழிகளை அளவுக்கதிகமாகக் கலந்து தமிழைச் சீரழிக்கின்றனர்.

இதைவிட கொடுமை ஒன்றும் உண்டு. நவின படைப்பாளிகள் என கூறிக்கொண்டு ஒருதரப்பினர் இப்போது கொச்சை மொழிகளையும் பச்சைப் பச்சையாகவும் எழுதத் தொடங்கிவிட்டனர். இவற்றால், எதிர்காலத்தில் ஏற்படப்போகும் எதிர்விளைவுகளை இவர்கள் அறிந்தார்களில்லை. யாராவது அதனை எடுத்துச்சொன்னாலும் கொஞ்சமும் காதுகொடுப்பதே இல்லை. இந்த நிலைமை தொடர்ந்தால் நம் கண்முன்னாலேயே தாய்மொழி அழியும் என்றால் பொய்யில்லை. ஆனால், இவர்கள் இதனை நம்புவதே இல்லை. சரி, இவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் தெரியுமா?

தானும் முறையாகப் படிப்பதில்லை
தகுந்தவர் சொன்னால் எடுப்பதில்லை
தானெனும் வீம்பில் தாங்கிய பணியில்
தன்கடன் பேணி நடப்பதில்லை – நல்ல
தமிழே இவனுக்குப் பிடிப்பதில்லை!

இப்படியெல்லாம் தமிழை அழிக்கிறார்களே என வருந்தி அழுதுகொண்டிருக்கும் உணர்வாளர்கள் பற்பலர். அவர்களுக்கெல்லாம் கவிஞர் ஓர் ஆறுதலையும் சொல்லிவைக்கிறார் அடுத்து.

இவனுக்கு முன்னே பலபேர்கள்
இவனுக்கும் பின்னே வருவார்கள்
தவணைகள் தீரும் தவறுகள் மாறும்
தமிழுக்கு நன்மை புரிவார்கள் – இவன்
தந்ததைத் தெருவில் எறிவார்கள்!

தமிழுக்கு எதிராகக் கேடுகளும் கீழறுப்புகளும் நடப்பது வரலாற்றில் புதிதல்ல. ஒரு காலத்தில் முக்கால் பங்கு வடமொழி கலந்து எழுதப்பட்ட ‘மணிப்பிரவாளம்’ இன்று சுவடு இல்லாமல் அழிந்துபோயிருப்பது இதற்கொரு நற்சான்று. காலந்தோறும், கெடுபுத்திகொண்டு தமிழுக்கு கேடிழைத்த கேடர்கள் செத்தொழிந்தார்களே அன்றி தமிழ் இன்றும் வளமோடு வாழுகின்றது. இன்று அப்படியே ஆங்கிலம் போன்ற அன்னிய மொழிகளைக் கலந்தெழுதும் கயவர்களும் காலத்தால் காணாமல் போய்விடுவர்; அவர்களின் படைப்புகளும் கரைந்துபோய்விடும் என்று கவிஞர் உணர்த்துவதாகவே தோன்றுகிறது. அடுத்து வரும் கண்ணியும் இதைத்தான் வலியுறுத்துகிறது.

தமிழ்நலம் கொன்றே பிழைப்பவனும்
தமிழுக்குத் தீங்கே இழைப்பவனும்
அமுதென நஞ்சை அருந்துவர் போலே
அழிவினைக் கூவி அழைப்பவனே – தான்
அடந்ததை எல்லாம் இழப்பவனே!

இவனா தமிழன்? என்ற கவிஞரின் வினாவுக்கு இந்நேரம் விடை கிடைத்திருக்க வேண்டுமே!
  • பி.கு: கடந்த 11-9-2009இல் தம்முடைய 62ஆம் அகவையை எட்டியிருக்கும் கவிஞர் ஐயா அவர்களுக்குத் திருத்தமிழ் வழியாகப் பணிவான வணக்கத்தைத் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறேன். ஐயா அவர்கள் நிலையான உடல்நலமும் நீடித்த ஆயுளும் பெற்று தமிழுக்குப் பணிசெய்ய இறைமைத் திருவுளம் வாய்க்கப்பெற வேண்டுமென மனதார இறைஞ்சுகிறேன். -சுப.நற்குணன்

12 comments:

  1. இவனா தமிழன்? இருக்காது
    யானைக்குப் பூனை பிறக்காது!
    இவனுக்குப் பாட்டன் பாண்டியன் என்றால்
    எதிரிக்கும் கூடப் பொறுக்காது – இவன்
    இனத்துக்கு நேர்ந்த குறைபேறு/

    நறுக்கென்னும் கவிதைகள்..
    மிகவும் நன்றாகவுள்ளன...
    ஒவ்வொ்ரு கவிதைகளும் சவுக்கடிபோல உள்ளன..

    ReplyDelete
  2. >திருத்தமிழ் அன்பர் முனைவர் இரா.குணசீலனார்,

    கவிஞர் ஐயா அவர்களின் கவிதைகள் அனைத்தும் மிக இனியன - எளியன மட்டுமன்று, சமூக அக்கறை கொண்டன, மொழி இன நலத்தை உயர்த்திப் பிடிப்பன.

    எங்கள் மலேசிய நாட்டில் தனியொருவராக பல்லாற்றானும் முயன்று தொல்காப்பியத்தையும் மரபுக் கவிதையையும் வளர்த்தெடுக்கும் அரிய பணியை அயர்வின்றி செய்து வருகிறார்.

    தங்கள் வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  3. வணக்கம்.

    ஒவ்வொரு கன்னியும் புத்திக்கெட்ட புத்திலக்கியவாணர்களைக் கல் போன்ற சொல் கொண்டு அடிப்பது போல் உள்ளது. ஐயா அவர்கள் ஒவ்வொரு கன்னியையும் நடப்புச் சூழலோடும் வரலாற்று நிகழ்வினையும் மேற்காட்டிருப்பது மிகவும் சிறப்பாய் உள்ளது.

    //இவன்
    தந்ததைத் தெருவில் எறிவார்கள்!//

    புத்திலக்கியவாணர்கள் இலக்கியத்தில் சேர்க்க விரும்பும் 'குப்பை' படைப்புகளையே மேற்கண்ட வரி எனக்கு உணர்த்துகிறது.

    நன்றி. மிகச்சிறந்த மரபுக்கவிதைக்குச் சிறந்த கருத்து விளக்கம்.

    ReplyDelete
  4. மிக நல்ல பாட்டு; ஏற்கெனவே படித்துள்ளேன்.

    `அந்த'க் காலத்தில் பாட்டியற்றத் தொடங்கிய நல்ல கவிஞர்களுள் இவரும் ஒருவர்.

    ReplyDelete
  5. //தமிழ்நலம் கொன்றே பிழைப்பவனும்
    தமிழுக்குத் தீங்கே இழைப்பவனும்
    அமுதென நஞ்சை அருந்துவர் போலே
    அழிவினைக் கூவி அழைப்பவனே – தான்
    அடந்ததை எல்லாம் இழப்பவனே!//

    உணச்சி வெள்லம்
    உயிரோட்டமாய்
    ஓடிடும் நடை.

    இவனா தமிழன் என்று
    இடித்துரைக்கும் கவிதை வரிகள்

    தமிழன் எப்படி இருக்க வேண்டும்
    என்று எடுத்துரைக்கும் சமுதாய ஏக்கம்

    அவரின் பாக்களுக்கு
    பூக்கள் போட் வேண்டும்.
    தமிழன் பூஜிக்க தகுந்த
    இறைவா பாக்கள் அவை.

    ReplyDelete
  6. >திருத்தமிழ் அன்பர் தமிழரண்,

    //புத்திலக்கியவாணர்கள் இலக்கியத்தில் சேர்க்க விரும்பும் 'குப்பை' படைப்புகளையே மேற்கண்ட வரி எனக்கு உணர்த்துகிறது.//

    அந்தக் 'குப்பை'களைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.

    இருந்தாலும் 'குப்பை' அதிகம் சேர்ந்து அழகுதமிழில் முடைநாற்றம் அதிகமாகிவிடுமோ? என்பதை நினைக்கும் போதுதான் கொஞ்சம் உறுத்தலாக உள்ளது.. அதனை வேரறுக்க உள்ளம் உந்துகிறது.

    தமிழ் தமிழாக, தமிழர் தமிழராக இணைவோம்!

    ReplyDelete
  7. >திருத்தமிழ் அன்பர் நம்பி ஐயா,

    //`அந்த'க் காலத்தில் பாட்டியற்றத் தொடங்கிய நல்ல கவிஞர்களுள் இவரும் ஒருவர்.//

    கவிஞர் ஐயா அவர்களை நன்கு உணர்ந்துசொன்ன கருத்தாக நினைக்கிறேன்.

    'இந்த'க் கால எம்போன்ற இளையோருக்குக் கவிஞர் ஐயா அவர்கள் ஊட்டச்சத்து..! உயர்ச்சொத்து!

    ReplyDelete
  8. >திருத்தமிழ் அன்பர் மனோகரன்,

    உங்கள் தொடர்வருகைக்கு மிக்க நன்றி. உங்கள் கருத்துகளை அன்போடு வரவேற்கிறேன்.

    //உணச்சி வெள்லம்
    உயிரோட்டமாய்
    ஓடிடும் நடை.//

    உணர்ச்சி வெள்ளம்
    உயிரோட்டமாய்
    ஓடிடும் நடை

    //அவரின் பாக்களுக்கு
    பூக்கள் போட் வேண்டும்.
    தமிழன் பூஜிக்க தகுந்த
    இறைவா பாக்கள் அவை.//

    அவரின் பாக்களுக்கு
    பூக்கள் போட வேண்டும்
    தமிழன் பூசிக்க தகுந்த
    இறவா பாக்கள் அவை

    உங்கள் உள்ளத்து உணர்வுகளும் கவிஞர் ஐயாவுக்குச் சென்று சேரட்டும்.

    அந்த மூத்தவர் மனது, மனோகரன் என்ற இளையோரின் உணர்வால் நனையட்டும்.. குளிரட்டும்.

    பி.கு:- மேலே சில தட்டச்சுப் பிழைகள் திருத்தப்பட்டது போல, கவிஞர் ஐயா 'உங்கள் குரல்' இதழில் இளையோர்கள் எழுதும் மரபுக் கவிதைகளைத் திருத்தி அமைத்து - விளக்கம் அளித்து - இதழில் வெளியிட்டு ஊக்கமூட்டி வருகிறார்; தமிழ்மரபுக்கு ஆக்கமூட்டி வளர்க்கிறார்.

    'உங்கள் குரல்' வாங்கிப் படியுங்கள்! நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்!

    ReplyDelete
  9. 11-9-2009இல் தம்முடைய 62ஆம் அகவையை எட்டியிருக்கும் கவிஞர் ஐயா அவர்களுக்குத் வாழ்த்துக்கள். தமிழோடு வாழ்வோம். காலத்திற்க்கேற்ப தமிழை மேலும் எளிமையாக்கி புதுமை பல புகுத்தி உலக மாந்தர் அனைவரிடமும் கொண்டு செல்வோம்.

    ReplyDelete
  10. >திருத்தமிழ் அன்பர் தமிழ்வாணன்,

    தங்கள் வருகைக்கும், கவிஞர் ஐயாவிற்கான வாழ்த்துக்கும் நன்றி. தங்கள் வாழ்த்தை இந்நேரம் கவிஞர் ஐயா படித்திருப்பார்.

    //தமிழோடு வாழ்வோம். காலத்திற்க்கேற்ப தமிழை மேலும் எளிமையாக்கி புதுமை பல புகுத்தி உலக மாந்தர் அனைவரிடமும் கொண்டு செல்வோம்.//

    தமிழின் 16 சிறப்புகளைப் மொழிஞாயிறு பாவாணர் சான்றுகளோடு நிறுவியுள்ளார்.

    அந்தப் 16 சிறப்புகளுள் 'எளிமை'யும் ஒன்று.

    பழமைக்கும் பழமையாய் ஏனைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் ஒரே மொழி தமிழ்தான்.

    பழைய கிரேக்கம், இலத்தீனம், சீனம், சமற்கிருதம் மட்டுமல்ல.. பழைய ஆங்கிலம், பழைய செருமானியம் போன்ற மொழிகள் இன்று படித்தால் புரிவதில்லை; வழக்கிலும் இல்லை.

    ஆனால், ஈராயிரம் ஆண்டுக்கு முற்பட்ட தொல்காப்பியமும், திருக்குறளும் இன்று படித்தாலும் புரிகிறது.

    தமிழ் 'எளிமை' என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமோ?

    தமிழை எளிமையாக்கும் வேலை நமக்கில்லை.. நாம் செய்ய வேண்டிய வேலை.. நீங்கள் சொல்வது போல "உலக மாந்தர் அனைவரிடமும் கொண்டு செல்வோம்"

    அதைவிட முக்கியம், தமிழைத் தமிழாக அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துச் செல்வோம்.

    நன்றி ஐயா.

    ReplyDelete
  11. அவர்தாம் பாவலர் அடடா ஓ
    தமிழர் உயர்ந்திடப் பாடுகிறார்
    தமிழின மீட்பை நாடுகிறார்
    அருமைத் தமிழில் செறிவாக
    உரிமைக் குரலில் வலிவாக
    உறைக்கும் வண்ணம் உணர்த்துகிறார்
    நரம்பில் தளர்ச்சியைப் போக்குகிறார்
    பேதைத் தமிழனின் பித்தம்தெளிந்திடப்
    பாதையைப் பாட்டால் காட்டுகிறார்
    பாரதிதாசனின் மறு பதிப்பாய்
    பாரதிரத் தமிழ் வீறு பெறப்
    பாடிடும் சீனிப் பாவலர்
    வாழிய வாழிய வாழியவே

    ReplyDelete
  12. >மதிப்புமிகு பேராசிரியர் ஐயா,

    வணக்கம். தங்கள் மறுமொழி கண்டு பெரும் மகிழ்ச்சியும் அதனைவிட மாபெரும் அதிர்ச்சியும் கொண்டேன்.

    தங்களின் திருப்பார்வை என் திருத்தமிழ் மீது விழுவதற்குப் பேறு பெற்றவனாகிறேன்.

    கடந்த சூலை திங்களில் தாங்கள் மலேசியா வந்தபோது எங்கள் பாரிட் புந்தார் ஊரில் பொழிவுரை நிகழ்த்தியிருந்தீர்கள். ஐயா அவர்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன். நவின இலக்கியம் குறித்து ஐயா பேசியிருந்தீர்கள். நிகழ்ச்சியின் இறுதியில் தங்களுடன் அளவளாவியதில் பெரும் பயன் கொண்டேன்.

    அந்த நிகழ்ச்சியில் தாங்கள் முன்வைத்த செய்திகளைத் தொகுத்துப் பதிவிட்டுள்ளேன்.

    காண்க:-
    http://thirutamil.blogspot.com/2009/07/blog-post_15.html

    இந்தச் செய்தியின் தொடர்பில் சில எதிர்வினைகளும் விவாதங்களும் நடைபெற்றன. அவற்றையும் தங்கள் மேலான பார்வைக்குத் தருகிறேன்.

    1) http://thirutamil.blogspot.com/2009/07/blog-post_20.html

    2) http://thirutamil.blogspot.com/2009/07/2.html

    3) http://thirutamil.blogspot.com/2009/07/3.html

    4) http://thirutamil.blogspot.com/2009/07/4.html

    5) http://thirutamil.blogspot.com/2009/07/5_29.html

    தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி ஐயா.

    கவிஞர் ஐயாவிடம் தங்களின் மறுமொழி குறித்து தெரிவித்துள்ளேன்.

    ReplyDelete

வணக்கம் திருத்தமிழ் அன்பர்களே. உங்கள் எண்ணங்களையும் ஏடல்களையும் இங்கே மறுமொழியாக இட்டுச்செல்லுங்கள். நன்றி.
அன்புடன்;
திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்