Monday, November 03, 2008

தமிழ் சோறு போட வேண்டுமா? (பகுதி 2)

தமிழ் சோறு போடுமா? என நாக்கில் நரம்பில்லாமல் பேசுபவர்கள், தமிழுக்கு உள்ள தனித்தன்மைகளை அறிவார்களா?


1.மொழியின் மற்றொரு பயன் அம்மொழியில் உள்ள நூல்களிலிருந்து கிடைப்பது. தமிழ் நூல்களில் இல்லாத படிப்பறிவுச் செல்வமும் பண்பாட்டு வளமும் வேறெம் மொழியில் உள்ளன? உயர்ந்த வாழ்க்கைக்கு உரிய நெறியும் அதன்படி ஒழுகும் முறைகளும் தமிழ் இலக்கியங்களிலும் அறிவு நூல்களிலும் கிடைக்குமளவுக்கு வேறெங்குக் கிடைக்கும்?

2.திருக்குறள் போன்ற அறிவு நூல் மனித வாழ்க்கையில் எத்துணைப் பெரும்பயனை உருவாக்கவல்லது! 99 மலர்களைப் பெயர்கூறி அடையாளம் காட்டும் கபிலரின் குறிஞ்சிப் பாட்டுப் போலொரு பழம் பாடல் தமிழிலன்றி வேறெம் மொழியில் உள்ளது? விவேக சிந்தாமணியின் விவேகம் கண்டால் வியக்காதவர் யார்?

3.தமிழின் சொல்வளம் என்பது வெறும் சொற்களின் எண்ணிக்கையா? அ•து ஓர் பழம் பெரும் இனத்தின் பல்லாயிரம் ஆண்டுப் பட்டறிவுப் பெட்டகம் அன்றோ!


4.பூ என்னும் ஒரு பொருளுக்கு அரும்பு, வீ, போது, முறுக்கு, மொட்டு, அலர், மலர் என அதன் ஒவ்வொரு பெயர் கொண்ட மொழி உலகில் எத்தனை உண்டு? கல்வியை முறையாகத் தமிழில் தொடங்கும் குழந்தை, பூ என்னும் ஒரு பொருளைத் தெரிந்து கொள்ளும்போதே அதன் பல நிலைகளையும் அவற்றுக்கான சொற்களையும் சேர்த்தே தெரிந்து கொள்கிறது! இப்படி ஒன்றை அறியும்போதே அதைப் பலவாகப் பகுத்தும் ஆய்ந்தும் பார்க்கப் பழகும் குழந்தையின் பகுத்தறியும் ஆய்வாற்றலும் எத்தகையதாக இருக்கும் எனச் சொல்லவும் வேண்டுமோ!

5.இதனால் அன்றோ தமிழர்கள் குறிப்பாகத் தமிழ் பயின்றவர்கள், அறிவியலிலும் கணிதத்திலும் அரும்திறம் பெற்றிலங்குகின்றனர்! உலகெங்கும் தலைசிறந்த மருத்துவர்களாகவும் கணினித் துறை வல்லுநர்களாகவும் திகழ்கின்றனர்.

6.ஒரு பழம் 75 காசு. 46 பழங்கள் எவ்வளவு என்றால், மற்றவர்கள் தாளில் எழுதிப் பெருக்கிக் கொண்டிருக்கிற அல்லது கணக்கியைத் (கல்குலேட்டரைத்) தேடிக் கொண்டிருக்கிற நேரத்தில், பெரிய அளவில் கல்வி இஆல்லாத, ஆனால் தமிழ் பயின்ற முதியவர்கள் "நாமுக்கா மூணு, அற முக்கா நாலரை ஆக முப்பத்து நாலு வெள்ளி ஐம்பது காசு (34.50)" என்று பட்டென்று கூறி விடுகின்றனரே! இந்தத் திறம் எங்கிருந்து கிடைத்தது. தமிழ் பயின்றதால் வந்த தனித்திறம் அன்றோ இது.

7.மொழியின் இன்னொரு பயன் அதன் இலக்கணத்தாலும் மொழி மரபாலும் உருவாகும் மனப்போக்கு, உறவினரை, மை வைபு (my wife), மை சன் (my son) என்னுடைய மனைவி, என்னுடைய மகன் என்று குறிப்பது ஆங்கிலத்திலும் மற்ற பல மொழிகளிலும் மரபாக இருக்கிறது. தமிழ் இலக்கணமோ, உறவினர்கள் உடைமைப் பொருள்கள் அல்லர்; அவர்களை எனக்கு மனைவி, எனக்கு மகன் என்று முறைப்பொருளில்தான் குறிப்பிட வேண்டும். "உடைய" என்னும் சொல்லைக் கொண்டு உடைமைப் பொருளாகக் குறிக்கக் கூடாது என்கிறது.


8.தமிழ் இலக்கணம் தருக்க முறையிலானது. அறிவியல் அடிப்படையிலானது; எனவே அதைக் கற்பவன் பகுத்தறிவுத் திறம் பெறுகிறான். எதையும் முறையாகச் சிந்திக்கின்ற, செய்கின்ற ஆற்றல் பெறுகிறான். தமிழின் பொருளிலக்கணம் இயற்கையோடு ஒட்டிய வாழ்க்கையைக் கற்பிக்கிறது. யாப்பிலக்கணம் கற்பவன் இசையறிவும் கற்பனை வளமும் பெறுகிறான். தமிழ் இலக்கியங்கள் பல்துறை சார்ந்த அறிவைக் கற்பவனுக்கு வழங்குகின்றன.

9.பொதுவாகத் தமிழ் இலக்கண இலக்கியங்களை முறையாகப் பயில்பவன், பகுத்தறிவுக் கூர்மை அடைகிறான். பண்பாடு கொண்டவனாகிறான். இசை, கணிதம், அறிவியல், மருத்துவம், ஆன்மிகம் என மனித வாழ்க்கைக்குத் தேவையான எண்ணற்ற துறைகளில் அடிப்படை அறிவு பெறுகிறான்.

10.தமிழ் இனியது; மெல்லியது. அதுபோலவே தமிழை முறையாகப் பயின்றோர் இனிமையான, மென்மையான, மேன்மையான இயல்புகள் கொண்ட பண்பாளர்களாக விளங்குபவர் என்பது கண்ணெதிரே எண்ணற்ற சான்றுகள் கொண்ட உண்மையன்றோ! இப்படி மொழியால் ஏற்படக்கூடிய பயன்கள் அனைத்தையும் செம்மையாகவும் சிறப்பாகவும் வழங்கி வருவதன்றோ; தமிழ், மொழி, மொழியால் விளையக்கூடிய பயன்களைத்தான் விளைக்கும்.

அதை விடுத்து, அது சோறுபோடுமா என்று குருட்டு வினாத் தொடுப்பவர்களை என்னவென்று சொல்வது? கண் பார்த்தற்குரியது. செவி கேட்டற்குரியது. கண்ணால் கேட்க முடியுமா என்று வினவுவதும் தமிழ் சோறு போடுமா என்று கேட்பதும் ஒரே தன்மையிலான பேதைமையன்றோ!

>>3-ஆம் பகுதி விரைவில் வரும்...

1 comment:

  1. ஐயா அவர்களே,
    நிலம் வைத்திருப்பவன் உழுது பயிரிட்டால் தானே பயன் அடைய முடியும். விளையாத நிலத்தால் பயன் யாதும் இல்லை. எனினும் அது நிலத்தின் தவறும் அல்ல;நில உரிமைக்காரரின் தவறு. அதுபோல் வளம் கொழித்த தமிழை வெறுமனே சோறு போடக் கேட்பது மடமையின் உச்சம்.
    மொழியை வணிக வகையில் பயன் தர வைப்பது மொழிக்காரனின் வேலைதான். மொழியின் வேலையில்லை.
    அணுக்குண்டால் அழிந்த சப்பானும் அடுத்து இருக்கும் கொரியாவும் உலகின் சிறு நாடுகள். அவை மீது உலகப் பார்வையும் மரியாதையும் திரும்பியது மொழியாலா? மொழிக்காரனாலா?
    நம் நாட்டில் சீனர் ஒரு தொழிலை உருவாக்கி, அதில் சீனம் அறிந்த சீனர்கள் வேலை செய்ய வழி செய்கிறான்... நம்மவர் செய்வது என்ன..?
    தமிழ் படித்தவன் முட்டாள் என்று நினைப்போ..? தமிழ் படிப்பவன் 7A பெறுகிறான்... தமிழ் படிக்காதவன் 5A பெறுகிறான்.. யார் அறிவாளி? அவனை அறிவாளி ஆக்குவது எது..?
    தமிழில் எழுதப்படும் நிறுவனப்பலகைகள் எத்தனை? தமிழ்மொழியில் உள்ள நிறுவனப் பெயர்கள் எத்தனை? தமிழன் தரும் முக்கியத்துவமே தமிழுக்குத் தரம் சேர்க்கும். தமிழை வாணிபத் தடத்தில் ஏற்றினால், தன்னால் வரும் சோறு!

    இனியன்,
    பினாங்கு.

    ReplyDelete

வணக்கம் திருத்தமிழ் அன்பர்களே. உங்கள் எண்ணங்களையும் ஏடல்களையும் இங்கே மறுமொழியாக இட்டுச்செல்லுங்கள். நன்றி.
அன்புடன்;
திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்