Saturday, February 21, 2009

அனைத்துலகத் தாய்மொழி நாள் (21-2-2009)

இன்று 21-2-2009 அனைத்துலகத் தாய்மொழி நாள். கடந்த 1999ஆம் ஆண்டில் ஐக்கிய நாட்டு அவையின் யுனெசுகோ மன்றம் உலகத் தாய்மொழி நாளை அதிகாரப்படியாக அறிவித்தது. இன்று பத்தாவது ஆண்டாக உலகத் தாய்மொழி நாள் கொண்டாடப்படுகிறது.

"எந்த நாட்டில் வாழ்கின்ற மக்களாக இருந்தாலும், அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தம் கருத்தை உறுதியாக உரைக்கவும் - பாரம்பரியம் பண்பாட்டைப் பேணவும் - இன ஒற்றுமைக்குக் கருவியாகவும் அவரவர்க்கு இயற்கையாகவே அமைவது தாய்மொழி ஒன்றுதான்" என்று யுனெசுகோ அறிவித்துள்ளதை உலகத் தமிழர்கள் அனைவரும் தம் உள்ளங்களில் ஆழப் பதிந்துகொள்ள வேண்டும்.


இந்த அனைத்துலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு மலேசியப் பாவலரும் - 'உங்கள் குரல்' இதழாசிரியரும் – தொல்காப்பிய அறிஞருமாகிய கவிஞர் செ.சீனி நைனா முகம்மது அவர்களின் இனியப் பாவொன்றை இங்கே வெளியிடுவதில் 'திருத்தமிழ்' பேருவகைக் கொள்கிறது.

*********************************************
தமிழ்ப்பேறு! தவப்பேறு!

*********************************************


தாய்மொழி என்பது தாயின்மொழி- அது
தாயும் நீயும் பேசும்மொழி
ஆயிரம் மொழிகள் நீயறிந் தாலும்
ஆன்மா உணர்மொழி அந்தமொழி – அது
அன்னையின் கருவில் வந்தமொழி!

அன்னையின் மடியில் கிடக்கையிலே – அவள்
அன்பினைப் பாலாய்க் குடிக்கையிலே
சின்னவுன் செவியில் சில்லெனப் பாய்ந்து
தேனாய் இனித்திடக் கேட்டமொழி – உன்
சிந்தையில் விதைகள் போட்டமொழி!

தோளிலும் மார்பிலும் சாய்கையிலே – நீ
தொட்டிலில் ஆடி ஓய்கையிலே
ஏழிசை மிஞ்சிடும் தாயிசை கேட்டே
இதமாய்த் தூங்கிய பாட்டுமொழி – அது
இதயங்கள் பேசிடும் வீட்டுமொழி!

அன்னையை அழைத்தே அழுகையிலே – அவள்
அணைத்ததும் உடன்நீ சிரிக்கையிலே
தன்னிலை மறந்தே தாய்மனம் பொங்கி
தவிப்புடன் உன்னைக் கொஞ்சுமொழி – அது
தரணியில் எதையும் மிஞ்சுமொழி!

தொல்லைகள் அறியாப் பருவத்திலே – நீ
துருதுருத் தாடிய உருவத்திலே
பல்லுமில் லாமல் சொல்லுமில் லாமல்
பலகதை சொல்லிய மயக்குமொழி – அது
பயிலுமுன் பேசிய இயற்கைமொழி!

உன்னுடன் இணைந்தே பிறந்தமொழி – உன்
உள்ளமும் உணர்வும் புரிந்தமொழி
எண்ணியல் என்ன மின்னியல் என்ன
எதையும் பயின்றிடச் சிறந்தமொழி – அது
இறைவன் உனக்கென வரைந்தமொழி!

தமிழினம் எய்திய பெரும்பேறு – அது
தாய்மொழி தமிழெனும் அரும்பேறு
அமிழ்தினை உரிமை அடைந்தவர் யாரும்
அருந்தா திருந்தால் அவப்பேறு – தமிழ்
அமிழ்தம் அருந்துதல் தவப்பேறு!

8 comments:

  1. தங்கள் முயற்சி வெல்க
    மு.இளங்கோவன்
    புதுச்சேரி,இந்தியா

    ReplyDelete
  2. பயனான தகவல் ஐயா, இப்போது தான் அறிந்துக் கொண்டேன்..

    ReplyDelete
  3. தமிழ்..

    காதலி ஒருத்தி எனக்குண்டு - உயிர்
    போகிற வரையவள் நினைவுண்டு..
    பாடலில் பலமுறை சொன்னதுண்டு - என்
    பாட்டுக்கு பல்லவி அவளென்று..!

    தமிழ்.. தமிழ்.. தமிழ்.. அவள் பெயர் தமிழ்...
    தமிழ்.. தமிழ்.. தமிழ்.. அவளெங்கள் உயிர்..

    ஓவியத்தோடு ஒப்பித்தால் அது
    ஓவியத்தின் பெருமை..
    காவியத்தோடு கற்பித்தால் அந்த
    காவியமே இனிமை..
    அவள் என்றுமே பதினாறு..அவள்
    பிறப்பினை அறிந்தவர் யாரு?
    உலகில் உயிர்கள் பிறந்திட்ட அன்றே
    பிறந்தவள் 'தமிழ்' என்று கூறு..!

    தமிழ்.. தமிழ்.. தமிழ்.. அவள் பெயர் தமிழ்...
    தமிழ்.. தமிழ்.. தமிழ்.. அவளெங்கள் உயிர்..

    உலகில் உள்ள அழகிகள் எல்லாம்
    அவளுக்கு பின்னே பாரு..
    உலகத்துக் கவளை அளித்தது அந்த
    தமிழகம் என்னும் ஊரு..
    கம்பன் கைகளிலே குழந்தை - அந்த
    கந்தன் அருளிய மடந்தை..
    அவள் சிறப்பை இந்த பாரே போற்ற
    உழைப்பவருக்கு நான் உடந்தை!

    தமிழ்.. தமிழ்.. தமிழ்.. அவள் பெயர் தமிழ்...
    தமிழ்.. தமிழ்.. தமிழ்.. அவளெங்கள் உயிர்..

    ReplyDelete
  4. திருத்தமிழ் அன்பர் முனைவர் ஐயா,

    வாழ்த்துகளுக்கு நன்றி!

    *****

    திருத்தமிழ் அன்பர் விக்கினேசுவரன்,

    நீண்ட நாளைக்குப் பின் உங்கள் மறுமொழி கண்டத்தில் மகிழ்ச்சி.

    *****

    திருத்தமிழ் அன்பர் கிருட்(ஷ்)ணா,

    கவிதையே மறுமொழியாக கண்டத்தில் மகிழ்ச்சி..!

    உங்கள் கவிதையும் மனதை அழகாய் வடுகிறது. உங்கள் வலைப்பதிவில் இடுங்களேன்.

    ReplyDelete
  5. ஆஹா... என்ன அருமை, என்ன அருமை! சுவையான கவிதைக்கு கவிஞர் செ.சீனி நைனா முகம்மது அவர்களுக்கு வாழ்த்துக்கள். இங்கே 'திருத்தமிழில்' வெளியிட்டதில் சுப.நற்குணன் - உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  6. உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க இக்கவிதையை எனது வலைப்பதிவில் இடுகிறேன்.. வாழ்க தமிழ்...!

    ReplyDelete
  7. அன்பு நண்பர் சுப.நற்குணன்,

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு வலைப்பதிவின் வழி இணைகிறோம்!

    இடைவெளிக்குப் பல காரணங்கள்;
    பதிக்காததற்கு சுய காரணங்கள்!

    வலைப்பூ பல்கிப் பிரபலம் (மலேசியாவில்)அடைவதற்குத் தங்களைப் போன்றவர்களின் தொடர் முயற்சி கண்டு நெகிழ்கிறேன்; இனிய வாழ்த்துகள்!

    தொடர்க உங்கள் சீரிய வலைப்பணி.

    வலைப்பூ கலந்துரையாடலில் கலந்து கொள்ள இயலாமைக்கு வருந்துகிறேன்!

    சந்தர்ப்பம் கிடைத்தால் சந்திக்கலாம்!

    வாழ்க!

    ReplyDelete
  8. வணக்கம்,
    நல்ல தமிழுணர்வை ஊட்டும் கவிதை.தங்களின் தமிழ்ப் பணி தொடரர்ந்து இருக்க எனது வாழ்த்துகள்.

    அன்புடன்,
    ஆதிரையன்.

    ReplyDelete

வணக்கம் திருத்தமிழ் அன்பர்களே. உங்கள் எண்ணங்களையும் ஏடல்களையும் இங்கே மறுமொழியாக இட்டுச்செல்லுங்கள். நன்றி.
அன்புடன்;
திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்