Sunday, January 18, 2009

தமிழமுது 6:- 16 பெற்றால் பெருவாழ்வு அமையும்


புதிதாகத் திருமணமாகும் மணமக்களை "பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க!" என வாழ்த்துவது வழக்கம். அவ்வாறு, வாழ்த்தும் போது "ஐயோ! பதினாறா எனக்கு வேண்டாம்" என்று மணமகள் வெட்கப்படுவதும்; "பதினாறா? என்னால் முடியாது!" என்று மணமகன் கூறிச் சிரிப்பதும் கிட்டதட்ட எல்லா மணமேடைகளும் கண்ட நகைச்சுவைதான்.


"பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க!" என்பது பதினாறு பிள்ளைகளைப் பெற்று வளமாக வாழ்வதையா குறிக்கிறது? இல்லவே இல்லை. மாறாக, வாழ்க்கையில் பதினாறு செல்வங்களை அல்லது நலன்களை பெற்று சிறப்பாக வாழ்வதையே குறிக்கிறது.

இன்றைய இளையோர்கள் பலரும் இந்தப் பழமொழியில் வரும் 'பதினாறு' என்ற சொல் வாழ்க்கைக்குத் தேவையான பதினாறு செல்வங்களைத்தான் குறிக்கிறது என அறிந்து வைத்துள்ளனர். ஆனாலும், அந்தப் பதினாறும் யாவை என அறியாமல் இருக்கின்றனர்.

அபிராமி அந்தாதி பதிகப் பாடலொன்று இந்தப் பதினாறு செல்வங்கள் என்னென்ன என்பதை அழகாகக் கூறுகின்றது இப்படி:-

அகிலமதில் நோயின்மை கல்விதன தானியம்
அழகுபுகழ் பெருமை இளமை
அறிவுசந் தானம்வலி துணிவுவாழ் நாள்வெற்றி
ஆகுநல் லூழ்நுகர்ச்சி
தொகைதரும் பதினாறு பேறும்தந் தருளிநீ
சுகானந்த வாழ்வளிப்பாய் -(அபிராமி அந்தாதி பதிகம்)

1.உடலில் நோயின்மை, 2.நல்ல கல்வி, 3.தீதற்ற செல்வம், 4.நிறைந்த தானியம், 5.ஒப்பற்ற அழகு, 6.அழியாப் புகழ், 7.சிறந்த பெருமை, 8.சீரான இளமை, 9.நுண்ணிய அறிவு, 10.குழந்தைச் செல்வம், 11.நல்ல வலிமை, 12.மனத்தில் துணிவு, 13.நீண்ட வாழ்நாள்(ஆயுள்), 14.எடுத்தக் காரியத்தில் வெற்றி, 15.நல்ல ஊழ்(விதி), 16.இன்ப நுகர்ச்சி

ஆகியவையே அந்தப் பதினாறு பேறுகள் அல்லது செல்வங்கள்.

மக்கள் வாழ்க்கைக்கு முழுமையான மகிழ்வையும் நிறைவையும் அளிக்கும் பதினாறு பேறுகளை நமது முன்னோர்கள் அன்றே வகுத்திருப்பது எண்ணிப்பார்க்கத் தக்கது.

மேலும், இந்தப் பதிகம் என்றோ எழுதப்பட்டதாக இருந்தாலும் இன்றும்கூட மக்கள் வாயில் வழங்கிவருவதிலிருந்து இப்பாடலுக்கும், இந்தப் பாடல் எழுதப்பட்ட தமிழுக்கும் இருக்கின்ற தனித்தன்மையும் தெய்வத்தன்மையும் நினைத்து நினைத்து மகிழத்தக்கது.

இப்போது பிறந்திருக்கும் தைத்திங்களில் மணமேடை காணவிருக்கும் வாழ்விணையர் அனைவருக்கும் மனமார சொல்லிவைப்போம் "பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க!" என்று.

4 comments:

  1. சிறப்பான விளக்கம். நன்றி.

    ReplyDelete
  2. கலையாத கல்வி;கபடட்ற நட்பு
    குறையாத வயது;குன்றாத வளமை
    போகாத இளமை;பரவசமான பக்தி
    பிணியற்ற உடல்;சலியாத மனம்
    அன்பான துணை;தவறாத சந்தானம்
    தாழாத கீர்த்தி;மாறாத வார்த்தை
    தடையற்ற கொடை;தொலையாத நிதி
    கோணாத கோல்;துன்பமில்லா வாழ்வு
    எனப்பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்வாயே!

    --திருநள்ளாறு கோவிலில் இருந்து!

    துதி, வானி, வீரம், விசயம், சந்தானம், துணிவு,தனம்
    அதிதானியம், சவுபாக்கியம், போகம், அறிவு, அழகு
    புதிதாம்பெருமை, அறம்குலம், நோய்இன்மை, பூண்வயது
    எனப் பதினாறு பேறும் தருவாய் பராபரனே!

    ---கவி காளமேகப் புலவர் பாடியது.

    ReplyDelete
  3. திருத்தமிழ் அன்பர் மு.வேலன்,

    பாராட்டுக்கு நன்றி.

    *****

    திருத்தமிழ் அன்பர் பழமைபேசி,

    இதே கருத்தைச் சொல்லும் கவி காளமேகப் புலவரின் பாடலை எடுத்துக்காட்டி விளக்கியமைக்கு மிக்க நன்றி.

    புதிய தகவல் அறிந்து மகிழ்கிறேன். பலருக்கும் பயனாக இருக்குமென நம்புகிறேன்.

    ReplyDelete
  4. அருமையான வெப்தளம் நன்றி உன்களுக்கு

    ReplyDelete

வணக்கம் திருத்தமிழ் அன்பர்களே. உங்கள் எண்ணங்களையும் ஏடல்களையும் இங்கே மறுமொழியாக இட்டுச்செல்லுங்கள். நன்றி.
அன்புடன்;
திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்