Tuesday, December 18, 2007

தனித்தமிழ் நாள்காட்டி 2008

தமிழை முன்னெடுக்கும் உலகின் முதலாவது
தனித்தமிழ் நாள்காட்டி 2008

தமிழ் நாள்காட்டி வரலாற்றில் தனிப்பெரும் சிறப்பாக இதுகாறும் கண்டிராத மாபெரும் முயற்சியாக, முழுமையாகத் தமிழிலேயே நாள்காட்டி வெளிவந்துள்ளது. தமிழ் மொழி, இன, சமய, பண்பாடு சார்ந்த தமிழியல் மீட்பு, மேம்பாட்டுப் பணிகளை அமைதியாகவும் ஆக்ககரமாகவும் ஆற்றிவருகின்ற தமிழியல் ஆய்வுக் களம் இந்தத் தமிழ் நாள்காட்டியை வெளியிட்டுள்ளது. தமிழியல் ஆய்வுக் களத்தின் நிறுவனர் ஆய்வறிஞர் இர.திருச்செல்வம் இந்த நாள்காட்டியை வடிவமைப்புச் செய்துள்ளார்.

தமிழ்க்கூறு நல்லுலகம் முதன்முறையாகக் கண்டிருக்கும் தனித்தமிழ் நாள்காட்டியென இதனைத் துணிந்து குறிப்பிடலாம். இப்படியொரு அரிய சாதனை நம் மலேசியத் திருநாட்டில் நிகழ்ந்திருக்கிறது என்பது மலேசியத் தமிழர்களுக்குப் பெருமையளிக்கும் செய்தியாகும். முற்றும் முழுவதுமாகத் தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ள இந்த நாள்காட்டி தமிழர்கள் இல்லங்கள்தோறும் கண்டிப்பாக இடம்பெறவேண்டும்.



இந்தத் தனித்தமிழ் நாள்காட்டியின் தனிச்சிறப்புகள்

1.முழுமையாகத் தமிழிலேயே வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது.
2.திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றி மாதங்கள், கிழமைகள், நாட்கள் என அனைத்தும் தமிழ்ப்பெயர்களோடும் தமிழ் எண்களைப் பயன்படுத்தியும் அமைக்கப்பட்டுள்ளன.
3.ஓரை(இராசி), நாள்மீன்(நட்சத்திரம்), பிறைநாள்(திதி) முதலியன தமிழில் குறிக்கப்பட்டுள்ளன.
4.பெயர் சூட்டுவதற்கான எழுத்து அட்டவணையும் ஐந்திர(சோதிட)க் குறிப்புகளும் உள்ளன.
5.தமிழ் அருளாளர்கள், சான்றோர்கள், அறிஞர்கள், தலைவர்கள் ஆகியோரின் சிறப்பு நாட்களும் உருவப்படங்களும் உள்ளன.
6.பொதுவிடுமுறை, பள்ளி விடுமுறை, விழா நாட்கள் முதலான விவரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
7.ஆங்கில நாள்காட்டியை உள்ளடக்கியதோடு, தேவையான அளவு சமற்கிருதத் துணை விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
8.தமிழியல் முறையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விழைவோருக்கும் இனி வாழ முயல்வோருக்கும் வழிகாட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
9.வள்ளுவர் வள்ளலார் இணைந்திருக்கும் அட்டைப் படத்தோடு முழு வண்ணத்தில் தரமாகவும் கவரும் வகையிலும் அமைந்திருக்கிறது.


உள்ளத்தில் தமிழ் உணர்வும் ஊக்கமும் கொண்டு தமிழ்நலத்திற்காக மு‎ன்னின்று செயலாற்றும் தமிழ் அன்பர்களையும் ஆர்வலர்களையும் இலக்காகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த நாள்காட்டியை வாங்கி ஆதரவு நல்குவதோடு பரப்பும் முயற்சியிலும் துணைநிற்குமாறு தமிழியல் ஆய்வுக் களம் கேட்டுக்கொள்கிறது.




தொடர்புக்கு : தமிழியல் ஆய்வுக் களம் (Persatuan Pengajian Kesusasteraan Tamil)
d/a No.17, Lorong Merbah 2, Taman Merbah, 14300 Nibong Tebal, SPS, P.Pinang, Malaysia.
தொலைப்பேசி : 6013-4392016 / 6012-4643401
இணையம் : aivukalam.6te.net
மின்னஞ்சல் : aivukalam@gmail.com



5 comments:

  1. வணக்கம். வாழ்க தமிழ்!
    தனித்தமிழ் நாள்காட்டியை வெளியிட்டு மலேசியத் தமிழர்களுக்கு உலக அரங்கில் பெருமை சேர்த்துள்ள தமிழியல் ஆய்வுக் கள அன்பர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். மலேசியாவிலும் இப்படிப்பட்ட அரிய பணிகள் நடப்பது மிகப்பெரும் சாதனையாகும். இதேபோன்ற நாள்காட்டி கடந்த ஆண்டிலும் வெளிவந்துள்ளது. திருத்தமிழ் வலைப்பதிவில் அந்தச் செய்தியைப் படித்தேன். அந்தச் சாதனை இந்த ஆண்டிலும் தொடர்வது கண்டு மகிழ்கிறேன். தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள்காட்டி வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்த நாள்காட்டியை வாங்கிப் பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறேன். நன்றி.

    அன்புடன்,
    கரிகாலன், ஈப்போ, பேரா.

    ReplyDelete
  2. சொல்லிய வண்ணம் செயல்

    அண்ணன் திருச்செல்வம் அவர்களின் பெருமுயற்சியில் இரண்டாம் ஆண்டாக வெளிவந்துள்ள தமிழ் நாள்காட்டியினை பரப்பும் முயற்சியில் நானும் இணைந்து கொள்வேன்.

    இந்து நாள்காட்டியை பார்க்கும் போதெல்லாம் தமிழர் நாள்காட்டி ஒரு வராதா? என நான் ஏங்கியதுண்டு.

    அக்கனவை அண்ணன் திருச்செல்வம் அவர்கள் நிறைவேற்றி இருக்கிறார்.

    அவரின் முயற்சியை பரப்ப வேண்டிய பெரும் பணி நமக்குண்டு.

    நன்றி

    தமிழோடு உயர்வோம்.

    ReplyDelete
  3. வணக்கம். தமிழ்நலம் சூழ்க!
    தனித்தமிழ் நாள்காட்டி ஒன்று நம் மலேசியாவில் வெளிவந்திருப்பது வியப்பிற்குரிய செய்தியாகும். தமிழ்நாட்டைக் கடந்து அயல்நாடு ஒன்றில் அதுவும் நம் மலேசியத் திருநாட்டில் தனித்தமிழை முன்னெடுக்கும் முயற்சி நடைபெற்றிருப்பது பெருமையும் உவகையும் கொள்ளச் செய்கிறது. இப்படியான தனிதமிழ்ப்பணிகள் நம் நாட்டில் நடப்பதை நம் நாட்டுத் தகவல் ஊடகங்கள் பெரிதுபடுத்தி செய்திகளை வெளியிட்டு விளம்பரப்படுத்த வேண்டும். தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் இந்த நாள்காட்டிக்கு முழு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும்.

    இதனை வெளியிட்டிருக்கும் தமிழியல் ஆய்வுக் களத்திற்கும் அதன் பொறுப்பாளர்களுக்கும் சிறப்பானதொரு பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அன்புடன்,
    தமிழ் அன்பன் அறிவழகன்
    தலைநகர்

    ReplyDelete
  4. தனித்தமிழ் நாள்காட்டி மலேசியாவில் வெளிவந்திருப்பது பாராட்டுக்குரிய செய்தியாகும். தமிழ்நாட்டைக் கடந்து அயல்நாடு ஒன்றில் தமிழ் உணர்வோடு மலேசியத் திருநாட்டில் தனித்தமிழை முன்னெடுக்கும் முயற்சி நடைபெற்றிருப்பது மகிழ்ச்சி கொள்ளச் செய்கிறது.

    ஒரு பிரதி அனுப்பி வைத்தால் தமிழகத்தில் எங்களது வார இதழில் வெளியிட வசதியாக இருக்கும்


    தொடர்புக்கு

    விதுரன்
    தேவி வார இதழ்

    9444056541

    ReplyDelete
  5. தமிழ் நாள்காட்டி என்ற பெயர் இந்த ஒரு நாள்காட்டிக்கே பொருந்தும் என நினைக்கிறேன். காரணம் நாள்காட்டியின் அனைத்துக் கூறுகளும் தமிழில்.. அதுவும் தனித்தமிழில்! தமிழால் முடியும் என்பதற்கு இந்த நாள்காட்டி புதிய சான்று சொல்லுமோ? தமிழ் நாள்காட்டி என்ற பெயரில் ஆரியத்தையும் சமஸ்கிருதத்தையும் வளர்க்கும் போக்குதான் இந்த நாட்டிலும் ஏன் தமிழ் நாட்டிலும் நிலவுகிறது. தமிழின் பெயரால் பணம் பண்ணும் நிறுவனங்களுக்கு மத்தியில் இப்படி ஒரு நல்ல தமிழ்ப் பணியா? வியப்பாக உள்ளது. இந்த நல்ல தமிழ்ப் பணியை செய்துள்ள தமிழ் உள்ளங்கள் வாழ்க!

    இராசி, நட்சத்திரம், திதி, எண்கள் என எல்லாமே தமிழில் என்பது நம்பமுடியாத உண்மை! இப்படி ஒரு நாள்காட்டியை நான் இதுவரையில் கண்டதே இல்லை. தமிழ்நாட்டில் இப்படி ஒரு பணி நடந்திருக்கலாம். அதுபற்றிகூட நான் அறிந்தது இல்லை. ஆனால், மலேசியாவில் இப்படி ஒரு சாதனை நடந்திருப்பது பெருமைதான்.

    இந்த தனித்தமிழ் நாள்காட்டியை கண்டிப்பாகத் தமிழன் நான் வாங்குவேன்! பரப்புவேன்! இது உறுதி!

    -சித்தன் சிவாஜி

    ReplyDelete

வணக்கம் திருத்தமிழ் அன்பர்களே. உங்கள் எண்ணங்களையும் ஏடல்களையும் இங்கே மறுமொழியாக இட்டுச்செல்லுங்கள். நன்றி.
அன்புடன்;
திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்