Friday, December 04, 2009

தமிழும் இலக்கியமும் காக்கப்பட்டன; வாழ்க தமிழ்!



2010 தொடங்கி மலேசியக் கல்விச் சான்றிதல் எனப்படும் எசுபிஎம் (SPM) தேர்வில் 10 படங்களை மட்டுமே எடுக்க முடியும் என்ற கல்வி அமைச்சின் முடிவு அகற்றப்படுகிறது. 10 பாடங்களுக்குப் பதிலாகப் 12 பாடங்களை எடுக்க அமைச்சரவை இன்று இசைவு(அனுமதி) வழங்கியுள்ளது. மலேசியாஇன்று இணையத்தளம் இந்தச் செய்தியை உறுதிபடுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தமிழ், தமிழர் சார்ந்த பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள், சமய இயக்கங்கள், தமிழ் நாளேடுகள், தனியாட்கள் என அனைத்து தரப்பினரும் ஒரே நோக்கத்தில் ஒரே குரலில் தமிழ்மொழிக்காகப் பெரிய எழுச்சியோடு போராடினர் என்பதை நாடே அறிந்துள்ளது.

ஒட்டுமொத்த மலேசியத் தமிழர்களுக்குக் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாக இதனைக் கருதலாம். தமிழ்மொழிக்கு வாழ்வா? சாவா? என்ற கடுமையான நெருக்கடியிலிருந்து தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் மீட்டெடுத்திருக்கும் மலேசியத் தமிழர்கள் இப்போது மிகுந்த மகிழ்ச்சியில் இருகின்றனர்.

இன்று மலேசியத் தமிழர்தம் போராட்டத்தின் வழி அடைந்திருக்கும் இந்த வெற்றிக்குப் பொருத்தமாக மலேசியப் பாவலர் ஒருவர் அன்றே பாடி வைத்திருக்கிறார் இப்படி:-

அவனவன் வாயா லன்றிப்
பிறனெவன் உண்ண வல்லான்
அவனவன் கண்ணா லன்றிப்
பிறனெவன் காண வல்லான்
அவனவன் செவியா லன்றிப்
பிறனெவன் கேட்க வல்லான்
அவனவன் மொழியினத்தைப்
பிறனெவன் காப்பான் வந்தே!
-(தமிழ்நெறி ஞாயிறு பாவலர் அ.பு.திருமாலனார்)
ஊர்கூடி தேர் இழுத்ததால் இழுத்ததால்தான் இந்த வெற்றி. ஒருமனதாக அனைவரும் போராடியாதால்தான் இந்த மாற்றம். ஒற்றுபட்டு நின்று குரல்கொடுத்ததால்தான் தமிழும் தமிழ் இலக்கியமும் மீட்கப்பட்டன – காக்கப்பட்டன - மலேசியத் தமிழரின் வாழ்வுரிமை நிலைநிறுத்தப்பட்டது.

இனிவரும் காலங்களிலும் நமது மொழியின உரிமைகளைக் காப்பதற்குத்..
தமிழா ஒன்றுபடு..
தமிழால் ஒன்றுபடு..
தமிழுக்காக ஒன்றுபடு..
தமிழருக்காக ஒன்றுபடு..

இதுதொடர்பான மலேசியாஇன்று செய்தியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

8 comments:

  1. நல்ல செய்தி. முயற்சிக்கு வாழ்த்துகள்.

    பல்கலையில் தமிழ் படிப்பதில் சிக்கல்கள் உள்ளனவா?

    http://www.malaysiakini.com/letters/117543

    பார்க்கவும். நன்றி.

    ReplyDelete
  2. >திருத்தமிழ் அன்பர் ரவிசங்கர்,

    தங்கள் வாழ்த்து இதற்காகப் போராடிய எல்லா தமிழர்களையும் சென்று சேரட்டும்.

    இந்தப் புதிய அறிவிப்பிலும் சில சிக்கல்கள் உள்ளன. அதுபற்றி பின்னர் பதிவிடுகிறேன்.

    //பல்கலையில் தமிழ் படிப்பதில் சிக்கல்கள் உள்ளனவா?//

    இதுகுறித்து விரிவாக பதிவிட்டிருக்கிறேன். காண்க:-

    1.http://thirutamil.blogspot.com/2009/08/blog-post_22.html

    2.http://thirutamil.blogspot.com/2009/09/blog-post_10.html

    3.http://thirutamil.blogspot.com/2009/09/blog-post.html

    நீங்கள் குறிப்பிட்டுள்ள Malaysiakini செய்தியில் உள்ளது போல இங்கே தமிழைத் தற்காக்க தொடர்ந்து போராட வேண்டியுள்ளது.

    எனினும், பல்கலைக்கழகம் வரை; முனைவர் படிப்பு வரை படிக்க படிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் மிகவும் இறுக்கமான சூழல்தான். போராடிப் போராடித்தான் தமிழைப் படிக்க வேண்டியிருக்கிறது.

    தமிழைக் கற்பதற்கு எமது மக்களின் முனைப்பான ஈடுபாடின்மையும் இதற்கு ஒரு காரணம்.

    எமது சிக்கலைத் தொடர்ந்து கவனித்துவரும் தங்களைப் போன்ற தமிழ் உறவுகளுக்கு மிக்க நன்றி நண்பரே.

    ReplyDelete
  3. மிகவும் மகிழ்ச்சி. தமிழும் தமிழ் இலக்கியமும் தொடர்ந்து தேர்வுப் பாடங்களாக இருக்க வேண்டும். அதுவே நம் ஆசை.

    ReplyDelete
  4. >திருத்தமிழ் அன்பர் கந்தசாமி,

    உங்கள் முதல் வருகையை மகிழ்வுடன் வரவேற்கிறேன். தொடர்ந்து வருக.

    //தமிழ் இலக்கியமும் தொடர்ந்து தேர்வுப் பாடங்களாக இருக்க வேண்டும்.//

    இருக்கிறது.. மகிழ்ச்சி! கூடவே தீர்க்கப்படாத சில நெருடல்களும் இருக்கின்றன ஐயா.

    அடுத்த பதிவில் எழுதுவேன். தவறாமல், தொடருங்கள்.

    ReplyDelete
  5. அய்யா,கல்வி அமைச்சரின் அறிவிப்பு வேறு மாதிரி அல்லவா இருக்கிறது
    இதிலும் சூதா ,சி நா மணியன்

    ReplyDelete
  6. >திருத்தமிழ் அன்பர் சி.நா,மணியன்,

    //கல்வி அமைச்சரின் அறிவிப்பு வேறு மாதிரி அல்லவா இருக்கிறது
    இதிலும் சூதா//

    12 பாடங்கள் எடுப்பதற்கு ஒரு தளர்வின் அடிப்படையில் (leeway) வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

    எனினும், தமிழுக்கும் இலக்கியத்திற்கும் பாதுகாப்பற்ற சூழல் இன்னமும் தொடருகின்றது என்பதே பரவலான கருத்து.

    ReplyDelete
  7. தமிழை ஒரு கட்டயா பாட அடிப்படையில் கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும்.அம்னோ விஷத்தை கக்குகிறது.நம் ம இ கா தலைவர்கள் அதையே மறுபடியும் வாந்தி எடுகின்றனர். திரணி அற்ற தலைவர்களால் சரியான முடிவை சரியான தடத்தில் வைக்க முடிவதில்லை. தமிழ் இன்னும் காக்கப்ப்டவில்லை.

    ReplyDelete
  8. >திருத்தமிழ் அன்பர் மனோகரன் கிருஷ்ணன்,

    //தமிழ் இன்னும் காக்கப்ப்டவில்லை.//

    சரிதான் நண்பரே. இன்னமும் நிச்சயமற்ற - பாதுகாப்பற்ற ஒரு சூழல்தான்.

    முழு விவரம் அறிய எனது புதிய இடுகையைக் காண்க:-

    http://thirutamil.blogspot.com/2009/12/12.html

    ReplyDelete

வணக்கம் திருத்தமிழ் அன்பர்களே. உங்கள் எண்ணங்களையும் ஏடல்களையும் இங்கே மறுமொழியாக இட்டுச்செல்லுங்கள். நன்றி.
அன்புடன்;
திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்