Friday, November 20, 2009

இந்தியாவின் பழமையான மொழி சமஸ்கிருதம்?


ண்மையில் எங்கள் நாட்டு தொலைக்காட்சி ஒளிபரப்பில் தமிழ்நாட்டு ஜெயா டிவி நிகழ்ச்சியான ‘ஜாக்பாட்’ நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு ஒரு தோழி என்னிடம் விவரம் கேட்டார். அது என்னவென்றால், அந்த நிகழ்ச்சியில் ஒரு கேள்வி இடம்பெற்றுள்ளது. “இந்தியாவின் பழமையான மொழிகள் என்னென்ன?” என்பதுதான் கேள்வி. கேள்வியில் ஒரு சிக்கலும் இல்லை. அதற்கு, பலபேர் கொடுத்த பதிலாகத் திரையில் காட்டப்பட்ட பதிலில்தான் சிக்கல்.

இந்தியாவின் பழமையான மொழிகள் வரிசையில் முதல் இடத்தில் சமஸ்கிருதம் இருந்ததாம். அதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழ் என்று வந்ததாம். இது உண்மையா என்பதுதான் அந்தத் தோழியார் கேட்ட விவரம். அவருக்கு விளக்கம் சொல்லிவிட்டேன். அதனை இங்கு எழுதலாமே? இந்தப் புளித்துப்போன செய்தியை எழுதவும் வேண்டுமா? என்ற இரு மனதோடு போராடி, சரி எழுதித்தான் வைப்போமே என்று எழுதுகிறேன்.

இந்தியாவைப் பொறுத்த வரையில், பன்னெடுங்காலமாகவே இருக்கும் ஒரு போராட்டம், எது மூத்த மொழி சமஸ்கிருதமா? அல்லது தமிழா? என்பது. இந்திய இறையாண்மை சமஸ்கிருதத்தைக் கொண்டாடும் அளவுக்கு.. சமஸ்கிருதத்தை அங்கீகரிக்கும் அளவுக்கு.. சமஸ்கிருதத்தை மூத்த மொழியென பறைசாற்றும் அளவுக்கு.. சமஸ்கிருதம் உயர்ந்த மொழி என தம்பட்டம் அடிக்கும் அளவுக்கு என்றுமே தமிழ்மொழியைச் செய்தது கிடையாது.

ஏதோ, இந்திய மொழிகளில் பத்தோடு பதினொன்றாக வைக்க முடியாதா இக்கட்டான சூழ்நிலைகளும் சான்றுகளும் ஆவணங்களும் உறுதியாக இருப்பதால் செம்மொழி தகுதியை ஒரு பெயருக்குக் கொடுத்துவிட்டு வாளாவிருக்கிறது இந்திய இறையாண்மை என்பதுதான் உண்மை என்ற விவரம் எல்லாருக்கும் வெள்ளிடை மலை.

சமஸ்கிருதம் பழையதா? அல்லது அதற்கும் பழையது தமிழா? என்ற ஆராய்ச்சிக்கே அவசியம் இல்லாத அளவுக்கு, தமிழே இந்தியாவின் மூத்த மொழி என்பதோடு மட்டுமல்லாமல், உலக மொழிகளுக்கே தாய்மொழி என்ற அளவுக்கு தகுதிபடைத்திருக்கிறது என்பது பல அறிஞர் பெருமக்களின் நடுநிலையான முடிவாகும்.

“உலக மொழிகளில் மூத்த முதல்மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும்” என்று ஆகக் கடைசியாக மொழியியல் அறிஞர் நோவாம் சோம்சுகி (Noam Chomsky) அறிவித்துள்ளார். யார் இவர்?

பல துறைகளில் அடிப்படையான அறிவாக்கங்கள் தந்திருக்கின்றார். அமெரிக்காவில் உள்ளமாசாச்சுசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃவ் டெக்னாலஜியில் (MIT) பல்லாண்டுகள் பணியாற்றி, பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.மொழியியல் துறையில்தோற்றுவாய் இலக்கணம்(generative grammar) என்னும் அறிவுக்கொள்கையை முன்வைத்தவர். மொழியியல் துறையில் தலைசிறந்த பேரறிஞர்களில் ஒருவராய் அறியப்படுகின்றார். உள்ளம், அறிவுத்திறன், உள்ளறிவு, உள்ளுணர்தல் முதலியவற்றைத் தொடர்பு கொள்ளும்அறிதிறன் அறிவியல் (cognitive science) என்னும் துறையில் பெரும் புரட்சியைத் தூண்டியவர் இவர்.மொழியியல், அறிதிறன் அறிவியல், கணினியியல் ஆகிய துறைகளில் ஏற்படுத்திய தாக்கம் மட்டுமின்றி, இவர் ஐக்கிய அமெரிக்க நாடுகள் உட்பட பன்னாட்டு வெளியுறவுக் கொள்கைகளையும் செயல்பாடுகளை மிக முனைப்புடன் திறனாய்வு செய்து பரவலாக பகிர்ந்து கொண்டு வந்திருக்கின்றார். கலை, இலக்கியம் பற்றிய தலைப்புகளில் எழுதுகின்ற உயிர் வாழும் அறிஞர்கள் யாவரைக் காட்டிலும் அதிக அளவு எண்ணிக்கையில் மேற்கோள்கள் காட்டப்பட்ட புகழ் மிக்க எழுத்தாளராக இருப்பவர் இவர். அண்மையில் நடத்திய ஆய்வின் படி 1980-1992 ஆம் காலப்பகுதியில், மேற்குல வரலாற்றிலேயே அதிக அளவு மேற்கோள் சுட்டப்பட்ட ஆசிரியராக அல்லது படைப்புகளில் முதல் 10 ஆக அறியப்படுபவர். - விக்கிபீடியா.



நோவாம் சோம்சுகியின் கருத்தை அவருக்கு முன்னாலேயே மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் உறுதிபட நிறுவியுள்ளார். அவருடைய அயராத மொழியியல் ஆய்வின் பயனாக அவர் கண்டுசொன்ன அரிய உண்மைகள் பற்பல. அவற்றில் ஒன்றுதான் தமிழே உலகின் மூத்தமொழி என்பது.

இதனை நிறுவும் வகையில் அவர் கொடுத்திருக்கும் ஆய்வின் அடிப்படையிலான சில ஆதாரங்களின் பட்டியலை இங்கே தருகின்றேன்.

1.மாந்தன் பிறந்தகமாகிய குமரிக்கண்டத்தில் தமிழ் தோன்றி இருத்தல்.

2.இப்போது இருக்கும் மொழிகளுள் தமிழ் மிகப் பழைமையானதாக இருத்தல்.

3.தமிழ் எளிய ஒலிகளைக் கொண்டிருத்தல்.

4.தமிழில் சிறப்புப் பொருள்தரும் சொற்கள் பிறமொழிகளில் பொதுப்பொருள் தருதல் [எ.கா: செப்பு(தெலுங்கு), தா(இலத்தின்)]

5.தமிழ் இயற்கையான சொல்வளர்ச்சி கொண்டதாக இருத்தல். (செயற்கையான சொல்வளர்ச்சி இல்லை)

6.ஆரிய சேமியமொழிச் சொற்கள் பலவற்றின் வேரைத் தமிழ் தன்னகத்தே கொண்டிருத்தல்.

7.பல மொழிகளின் மூவிடப் பதிற்பெயர்கள் தமிழ்ப் பெயர்களைப் பெரிதும் சிறுதும் ஒத்திருத்தல்.

8.தாய் தந்தையரைக் குறிக்கும் தமிழ் முறைப்பெயர்கள், ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் திரிந்தும் திரியாதும் வழங்கி வருதல்.

9.தமிழ்ச்சொற்கள் வழங்காப் பெருமொழி உலகத்தில் இல்லாமை.

10.ஒரு தனிமொழிக்குரிய தோற்ற வளர்ச்சி முறைகளைத் தமிழே தெரிவித்தல்.

11.சில பல இலக்கண நெறிமுறைகள் தமிழுக்கும் பிற மொழிகளுக்கும் பொதுவாக இருத்தல்.

12.பல மொழிகள் தமிழிலுள்ள ஒருபொருட் பலசொற்களுள் ஒவ்வொன்றைத் தெரிந்துகொண்டிருத்தல். [எ.கா: இல்(தெலுங்கு)), மனை(கன்னடம்), அகம்(கிரேக்கம்), குடி(பின்னியம்)]

13.பிறமொழிகளுக்குச் சிறப்பாகக் கூறப்படும் இயல்களில் மூல நிலைகள் தமிழில் இருத்தல். [எ.கா: ஆரிய மொழிகளின் அசை அழுத்தமும் சிந்திய மொழிகளின் உயிரிசைவு மாற்றமும் அமெரிக்க மொழிகளின் பல்தொகை நிலையும் போன்றன]

இப்படியான, பல்வேறு உறுதியான காரனங்களின் அடிப்படையில் இந்தியா மட்டுமல்ல.. உலகத்திற்கே மூத்தமொழி.. முதல்மொழி தமிழாகத்தான் இருக்க முடியும் என்பது மொழியியல் அறிஞர்களின் தெளிவும் முடிபும் ஆகும்.
இந்தியாவின் பழமையான மொழி சம்ஸ்கிருதம் என்று 'ஜாக்பாட்' நிகழ்ச்சியில் குசுபு சொல்லலாம்.. காட்டலாம். அது அவருடைய நாட்டின் சட்டமாகக்கூட இருக்கலாம். ஆனால், அதே நாடு உலகறிய வேண்டிய ஓர் உண்மையை மறைத்திருக்கும் சூழ்ச்சி ஒருநாள் கண்டிப்பாக வெளிப்படும்.

23 comments:

  1. சுப.நற்குணன்,

    ஃபோட்டோவில உள்ள பெண் உலகில் தோன்றிய முதல் பெண்,தமிழ்ப் பெண் தானே.இவ்வளவு குண்டா இருக்காங்களே.

    ReplyDelete
  2. நன்று.. நல்ல கட்டுரை . நன்றி !!

    ReplyDelete
  3. இது போல இன்னொரு சம்பவம் இங்கே பாருங்கள்.
    தங்கத்தின் தமிழ்ப் பெயர்:

    http://jeyapal.blogspot.com/2006/05/blog-post_08.html

    ReplyDelete
  4. >பெயரில்லாத் திருத்தமிழ் அன்பரே,

    படத்தில் இருப்பது பெண்தான்.. குண்டா இருப்பதும் உண்மைதான்..
    ஆனால், தமிழ்ப்பெண் என்பது ஐயமாக உள்ளது. ஏனென்றால், பெயர் குசுபு என்று வடநாட்டு நெடி பயங்கரமாக வீசுகிறது..!!

    ReplyDelete
  5. >திருத்தமிழ் அன்பர்கள் யூர்கன் க்ருகியர்

    >திருத்தமிழ் அன்பர் செயபால்,

    உங்களின் தொடர் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  6. நல்ல தகவல், நல்ல பதிவு...
    முதன்முறையாக இன்றுதான் வருகிறேன் என்று நினைக்கிறேன்....
    இனி தொடர்ந்து வருகிறேன்...

    நல்ல பதிவுக்காக வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  7. தமிழை தாய் மொழியாக கொண்ட பலர் தமிழே சமஸ்கிருதத்தில் இருந்து தான் வந்ததாக நினைத்துக்கொண்டிருக்கின்றனர்..

    ReplyDelete
  8. >திருத்தமிழ் அன்பர் கனககோபி,

    தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  9. >திருத்தமிழ் அன்பர் நாஸியா,

    //தமிழை தாய் மொழியாக கொண்ட பலர் தமிழே சமஸ்கிருதத்தில் இருந்து தான் வந்ததாக நினைத்துக்கொண்டிருக்கின்றனர்//

    சிவபெருமான் தன் உடுக்கையை வலதுபக்கமாக அடித்ததும் சமற்கிருதம் வந்தது.. இடதுபக்கமாக அடித்ததும் தமிழ் வந்தது என்று சிலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

    சிவபெருமானுக்கும் மலைமகளுக்கும் திருமணம் நடந்தபோது, முப்பத்து முக்கோடி தேவர்களும் வடதிசை நோக்கி சென்றதும் எடை அதிகமாகி வடக்கு தாழ்ந்ததாம்.. தெற்கு உயர்ந்துவிட்டதாம்..!

    உடனே சிவபெருமான் அகத்தியரைத் தெற்கிற்கு அனுப்பி சமன் செய்தாராம். அப்போது அகத்தியரின் வேண்டுதலுக்கு இணங்க சிவபெருமான் அவருக்கு தமிழை உணர்த்தினாராம். இப்படி சிலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

    இப்படி தொன்மங்களின் மூடத்தனத்தில் தமிழர்கள் பலர் மூழ்க்கிக்கிடக்கிறார்கள் என்பது முற்றிலும் உண்மை நண்பரே!

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. >Mark K Maity,

    இனிய திருத்தமிழ் அன்பரே, தங்கள் வருக்கைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. மீண்டும் வருக.

    ReplyDelete
  12. நண்பர்கள் கவனத்திற்கு

    தமிழர்ஸ் தளத்தில் உங்கள் பதிவை இணைக்கலாம் வாங்க....

    ஆங்கிலம் | தமிழ் | SEO Submit
    காணொளி தேடல் | வலைப்பூக்கள் | இங்கே நீங்கள் இருக்கிறீர்களா?

    ReplyDelete
  13. //“உலக மொழிகளில் மூத்த முதல்மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும்” என்று ஆகக் கடைசியாக மொழியியல் அறிஞர் நோவாம் சோம்சுகி (Noam Chomsky) அறிவித்துள்ளார். //

    ஆதார சுட்டிகள் ஏதேனும் உண்டா?

    ReplyDelete
  14. >திருத்தமிழ் அன்பர் பிரதீப்,

    //ஆதார சுட்டிகள் ஏதேனும் உண்டா?//

    நான் தேடியவரை இணையத்தில் எதுவும் கிடைத்தபாடில்லை.

    இதுகுறித்த மாதிகை(மாத இதழ்) செய்தி என்னிடம் உண்டு. வாய்ப்பு இருப்பின் அதனைப் பதிவிட முயலுகின்றேன்.

    உங்கள் வருகைக்கு நன்றி அன்பரே.

    ReplyDelete
  15. இந்தியாவின் பழமைவாத மொழி சமஸ்கிரதம் தான் !
    :)

    ReplyDelete
  16. //சிவபெருமான் தன் உடுக்கையை வலதுபக்கமாக அடித்ததும் சமற்கிருதம் வந்தது.. இடதுபக்கமாக அடித்ததும் தமிழ் வந்தது என்று சிலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.//

    அதிலும் கூட தமிழை இடது பக்கம் அதாவது இடது கைப்பக்கம் தள்ளி விட்டு தான் "கதை" சொல்லி இருக்கிறார்கள்.

    பழைய வேதமான வடமொழி நான்கு வேதத்தில் சிவலிங்க வழிபாடு ஆண்குறி வழிபாடு என்று பழித்துக் கூறப்பட்டுள்ளது. அப்பறம் எப்போது சிவன் உடுக்கை அடித்தாரோ தெரியவில்லை.

    ReplyDelete
  17. >திருத்தமிழ் அன்பர் கோவி.கண்ணன்,

    உங்களைத் திருத்தமிழில் காண்பதில் மகிழ்ச்சி. வருகைக்கும் மறுமொழிக்கு மிக்க நன்றி.

    //பழைய வேதமான வடமொழி நான்கு வேதத்தில் சிவலிங்க வழிபாடு ஆண்குறி வழிபாடு என்று பழித்துக் கூறப்பட்டுள்ளது. அப்பறம் எப்போது சிவன் உடுக்கை அடித்தாரோ தெரியவில்லை.//

    இப்படி ஏகப்பட்ட குளறுபடிகள் நீங்கள் குறிப்பிடும் 'பழமைவாத' மொழிக்கு மிகவும் இயல்பானதுதான். அம்மொழிக்கும் அதற்கு உரியவர்களும் அறிந்த தனிக்கலை அது.

    இருந்துவிட்டுப் போகட்டும். இன்னும் எத்தனைக் காலத்திற்கு என்று பார்ப்போம்.

    தொடர்ந்து வருக அன்பரே..!

    ReplyDelete
  18. தமிழுக்கும் சங்கத மொழிக்கும் (சமஸ்கிருதம்) உள்ள உறவறியாமல் பிதற்றும் பித்தர்கள். பாரத தேசியத்தை சீர்குலைப்பதற்கும், இந்திய இந்து கலாச்சாரத்தை நாசமாக்குவத‌ற்க்கும் கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கி இருக்கிறீர்களா? எவ்வளவு டாலர்கள் வந்துகொண்டிருக்கிறது மேற்குலகிலிருந்து?

    பாலாஜி

    ReplyDelete
  19. ////உடனே சிவபெருமான் அகத்தியரைத் தெற்கிற்கு அனுப்பி சமன் செய்தாராம். அப்போது அகத்தியரின் வேண்டுதலுக்கு இணங்க சிவபெருமான் அவருக்கு தமிழை உணர்த்தினாராம். இப்படி சிலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.////
    எங்கே எந்த் இடத்தில் தெளிவுரை தேவை. வீணாக குதற்க்கமான கருத்துக்கள் தரத்தை குறைத்துவிடும்

    பாலாஜி

    ReplyDelete
  20. >திருத்தமிழ் அன்பர் பாலாஜி,


    //தமிழுக்கும் சங்கத மொழிக்கும் (சமஸ்கிருதம்) உள்ள உறவறியாமல் பிதற்றும் பித்தர்கள். பாரத தேசியத்தை சீர்குலைப்பதற்கும், இந்திய இந்து கலாச்சாரத்தை நாசமாக்குவத‌ற்க்கும் கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கி இருக்கிறீர்களா? எவ்வளவு டாலர்கள் வந்துகொண்டிருக்கிறது மேற்குலகிலிருந்து? //

    உண்மைகளைச் சொல்லுபவர்கள் எல்லாரும் யாரிடமோ பணம் வாங்கிக் கொண்டுதான் சொல்ல வேண்டுமா என்ன?

    எனக்குத் தெரிந்தது சொல்வேன்.. ஊருக்கு நல்லது சொல்வேன் என எனது பாரதி பாட்டன் சொன்னதைத் தான் நானும் இதற்குச் சொல்ல விரும்புகிறேன்.

    தமிழுக்கும் சங்கதத்திற்கும் தொடர்பு உள்ளதை நான் எங்கேயும் மறுக்கவில்லை. தமிழை இன்னும் ஆழமாக அறிய சங்கதம் கண்டிப்பாகப் பயன்படுகிறது என்பதை உணர்ந்து இருக்கிறேன்.

    அதேபோல், சங்கதத்தின் வரலாற்றை விளக்குவதற்கு தமிழில் மட்டுமே தடங்களும் சான்றுகளும் உள்ளன என்பதையும் அறிந்தே இருக்கிறேன்.

    இந்திய - இந்து கலாச்சாரம் உலகம் முழுவதும் தமிழனை நாசமாக்குவதில் மட்டும் உங்களுக்கு உடன்பாடா அன்பரே?

    யாரும் யாரையும் நாசப்படுத்த வேண்டாம்.. மேலாண்மை செய்ய வேண்டாம்.. நீசமாக எண்ணி ஒதுக்கவும் வேண்டாம்.. தேவராக எண்ணி செறுக்கடையவும் வேண்டாம்.

    யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியம்.. எல்லாருக்கும் சௌக்கியம் தானே நண்பரே..!

    ////உடனே சிவபெருமான் அகத்தியரைத் தெற்கிற்கு அனுப்பி சமன் செய்தாராம். அப்போது அகத்தியரின் வேண்டுதலுக்கு இணங்க சிவபெருமான் அவருக்கு தமிழை உணர்த்தினாராம். இப்படி சிலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.////

    தமிழைக் குறைக்கவும் வடமொழியை தூக்கவும் வேண்டும் காலங்காலமாகச் சொல்லப்படும் சாமிக்கதைதானே இது.

    கைப்புண்ணுக்கு ஏன் கண்ணாடி?

    ReplyDelete
  21. பாலாஜி ஒரு நல்லவர். என்ன பேசினாலம் ஒற்றுமை என்று கூறும் வல்லாதிக்கத்தின் புத்திசாலித்தனமான கொடுரமான பிடிக்குள் விழுந்துவிட்டார்.
    நோம்சொம்சி - தமிழர் தொடர்பான பதிவுகள். அவரின் தமிழ் தொடர்பான கருத்து பற்றி எதுவும் கிடைக்கவிலலை. முயற்சிசெய்கிறேன்
    http://www.tamilnation.org/oneworld/chomsky.htm

    http://en.wikipedia.org/wiki/Politics_of_Noam_Chomsky

    mark k maity

    ReplyDelete
  22. இந்தியாவை நோpடையாக பலம் பொருந்திய ஆரிய நாடோடிகள் ஆக்கிரமிக்க வில்லை என்பது பெரும்பான்மையான ஆய்வாளர்களின் கருத்தாகும். இந்த முடிவின் படி பல கட்டுக் கதைகள் விடுவிக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த முடிவுகள் இருக்கின்ற சமுதாயத்தின் கல்வி அமைப்பு என்பது அடிநிலையில் உள்ளவர்களுக்கு சென்றடைவதை தடுக்கின்றது. இருக்கின்ற அரசியல் அமைப்பு என்பது ஒடுக்கும் வர்க்கத்தைப் பாதுகாப்பதாலும் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் தம்மைப் பற்றிய வரலாற்றை அறிந்து கொண்டார்களானால் தமக்கு எதிராகவே கிளம்பி விடுவர் என்பதால் சாதிய மற்றும் மூலதனத்தைக் கொண்ட வர்க்கம் முடிந்த வரை தடுத்து வருகின்றது.
    இந்த நிலை என்பது இங்கு மாத்திரம் அல்ல சர்வதேச நிலையை எடுத்துக் கொண்டால் அணு பற்றி சிந்தனை என்பது இந்தியா> (குறிப்பாக இந்திய) சீனாவில் இருந்து தான் அறிவு வந்தது என அறிஞர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் மேற்கு அரசுகளே அவற்றை நோpடையாக ஏற்றுக் கொள்ள மறுக்கின்றன. இவ்வாறான ஒடுக்கு முறைகள் பலமாக இருக்கின்ற காரணத்தால் ஒடுக்கப்படுகின்ற மக்கள் தமது சொந்த வரலாறு பற்றிய தெளிவைக் கொண்டில்லாமல் இருக்கின்றனர். மொழி என்பது சமூக மயப்படுத்தல் மூலமாக நிர்ணயிக்கப்படுகின்றது. மொழியின் பரம்பல் என்பது பல நூறு வருடங்களுக்கு முன்னர் இருந்தது போல் அல்லாமல் பல இன மக்கள் தமது சொந்த மொழியை இழந்து அன்னிய மொழியை கற்றுக் கொள்கின்றர்> தமது தாய் மொழியாகக் கொள்கின்றனர். இதற்கு ஆட்சியில் இருக்கின்ற வர்க்கமே இதனை நிர்ணயிக்கின்றன. பழைய கொலனி நாடுகள் ஆட்சியாளர்களின் மொழியையே உத்தியோக பூர்வ மொழியாகவும் கொள்கின்றன.

    ReplyDelete

வணக்கம் திருத்தமிழ் அன்பர்களே. உங்கள் எண்ணங்களையும் ஏடல்களையும் இங்கே மறுமொழியாக இட்டுச்செல்லுங்கள். நன்றி.
அன்புடன்;
திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்