Thursday, November 19, 2009

2012 திரைப்படமும் தமிழரின் தாயகம் குமரிக்கண்டமும் (பாகம்2)

2012 படத்தில் காட்டபடுவது போன்ற பூதாகரமான பேரழிவு முந்தய தமிழர் தாயகமான குமரிக்கண்டத்தைத் தாக்கி அழித்தது என்ற கட்டுரையின் இரண்டாம் பகுதி இது. குமரிக்கண்டம் என ஒரு நாடு இருந்ததா என்பதற்கான சான்றுகளை இந்தப் பகுதியில் மேலும் அலசிப்பார்க்க உங்களை அழைக்கிறேன்.
இத்தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க பின்வரும் இணைப்பைச் சொடுக்கவும்.


(அதற்குமுன், இந்த விடயம் தொடர்பாக எனதருமை மலேசிய நண்பர் மனோகரன் கிருஷ்ணன் அரிய பல தகவல்களை அடுக்கி மறுமொழியாக எழுதியிருக்கிறார். அதனையும் படிக்கவும். அவருடைய அருமையான பகிர்வுக்கு நன்றிசொல்லி தொடருகின்றேன். )

ஒரு நாட்டு வரலாறு எழுதப்பட்ட வரலாறு (Written History), எழுதப்படா வரலாறு (Unwritten History) என இருவகைப்படும். கிறித்துவிற்குப் பிற்பட்ட நாடாக இருப்பின் பெரும்பாலும் அதன் வரலாறு எழுதப்பட்டிருக்கும். அதற்கு முற்பட்டதாயின் எழுதப்பட்டிருக்கலாம் அல்லது எழுதப்பட்டாமலும் இருக்கலாம்.

எழுதபடா வரலாறு என்பது, அறியப்பட்ட வராலாறு (Known History) – அறியப்படா வரலாறு (Unknown History) என இரண்டாகக் கூறப்படும். வரலாற்றுக் குறிப்புகளும் கருவிகளும் சான்றுகளும் போதிய அளவு இருப்பின் அது அறியப்பட்டதாகும். இலையேல் அறியப்படாதது எனவாகும்.

எழுதப்பட்ட வரலாறு என்பதுகூட மெய் வரலாறு (True History) – பொய் வரலாறு (False History) என இரு தன்மைகள் கொண்டது.

ஒரு நாட்டின் வரலாறு அந்நாட்டின் மீது பற்றும் நடுநிலையும் உள்ளவரால் எழுதப்படுமானால் பெரும்பாலும் மெய்யாகவே இருக்கும். மாறாக, வேற்றினப் பகைவராலும் சொந்த இனத்தின் கொண்டான்மாராலும் (Quislings) எழுதப்படுமானால் பொய்யானதாகவே இருக்கும்.

எழுதப்படா வரலாற்றை எழுதுவதற்குச் சில சான்றுகள் இருக்க வேண்டும். அவை, இலக்கியம் (Literature), வெட்டெழுத்து(Inscriptions), பழம்பொருள் நூல்கள்(Archaeology) என மூன்று வகைப்படும்.

இந்த அறிமுகத்தோடு குமரிக்கண்ட வரலாற்றுக்குள் நுழைந்து பார்ப்போம்.


குமரிக்கண்ட வரலாறு தெளிவாகவும், முறைப்படுத்தப்பட்டும் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியது எந்த அளவுக்கான நேர்மையோ அதே அளவுக்கான நேர்மை, குமரிநாடு என்ற ஒன்று வரலாற்றுக்கு முத்திய காலத்தில் இருந்தது; அது பின்னர் கடற்கோள்களால் தாக்குண்டு மூழ்கியது; அல்லது இன்றைய அறிவியல் சொல்லுகின்ற கண்டங்களின் நகர்வுக் கொள்கையின்படி (Continental Drift) நகர்ந்து பின்னர் கடலுக்குள் சென்றிருக்கலாம் என நம்புவதிலும் இருக்க வேண்டும்.

இப்போது தமிழில் கிடைத்துள்ள வெட்டெழுத்துகள் பெரும்பாலும் கி.பி.4ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவை என்பதால் குமரிக்கண்ட ஆய்வுக்கு அவை பயன்படவில்லை. பழம்பொருள் என தேடிப்பார்த்தால், கற்காலத்து, இரும்புக்காலத்துப் பொருட்செய்திகளைத் தவிர ஒழுங்கான வரலாற்றுக்குரிய நுண்குறிப்புகளைத் தெரிவிக்காததாலும், அதனை ஆராய்வதற்கு ஏதுவாக முற்காலப் பழந்தமிழகமாகிய குமரிக்கண்டம் முழுதும் மூழ்கிப் போனதாலும் பழம்பொருள் எதுவும் கிடைப்பதாக இல்லை.

ஆகவே, இந்தியமாக்கடலில் பழங்காலத்தில் ஒரு கண்டம் இருந்தது. அது கடலில் மூழ்கிவிட்டது என 19ஆம் நூற்றாண்டு இறுதியில் ஏக்கலும் (Hackle) வேறு சில ஆய்வாளர்களும் கருதி “லெமூரியா” எனப் பெயரிட்ட கண்டமும், அதனையே குமரிநாடு என தமிழ் இலக்கியங்கள் அடையாளப்படுத்துவதும் உண்மையே என்பதை நிறுவுவதற்கு ஒரே சான்றுதான் இருக்கின்றது. அதுதான் தமிழ் இலக்கியம்! அல்லது தமிழ்மொழி!

அவ்வாறான இலக்கியச் சான்றுகளை ஏற்கனவே இரண்டு தொடர்களின் சொல்லிவிட்டதால் மீண்டும் எழுதாமல் விடுகின்றேன். பழந்தமிழ் நூல்களில் பெரும்பாலானவை அழியுண்டு போனதால், வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய குமரிநாட்டு வரலாற்றைத் தெளிவாகக் காணமுடியாத நிலைமையே இன்றும் இருக்கிறது.

இருப்பினும், தமிழன் பிறந்தகம் குமரிக்கண்டம் பற்றி முச்சங்க வரலாற்றாலும் – கலித்தொகை போன்ற சங்க இலக்கியங்களாலும் – தொல்காப்பிய இளம்பூரனார் உரையாலும் - சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரையினாலும் – பி.தி.சீனிவாச ஐயங்கார், சேசை ஐயங்கார், இராமசந்திர தீட்சிதர் முதலியோர் எழுதிய வரலாற்று நூல்களாலும் – மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர், பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரை, பேரா.கா.சுப்பிரமணியப்பிள்ளை ஆகியோர் எழுதிய ஆய்வுநூல்களாலும் குமரிநாட்டு வரலாறு விளக்கப்பட்டிருக்கிறது.

தவிர, பண்டைத் தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள குமரிநாட்டு கடற்கோள்கள் பற்றிய செய்திகளை விளக்கி எழுதப்பட்ட ஆய்வுரைகள் பின்வருமாறு:-

அ)ச.சோமசுந்தரபாரதி (1913), தமிழ்ப் பண்டை இலக்கியங்களும் தமிழகமும், சித்தாந்த தீபிகா XIV

ஆ)வி.ஜே.தம்பி பிள்ளை (1913), மாணிக்கவாசகர் தொன்ம வரலாறு, தமிழியன் ஆண்டிகுவாரி II – 1

இ)மறைமலையடிகள் (1930), மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

ஈ)ஏ.எஸ்.வைத்யநாத ஐயர் (1929), கீழைநாடுகளின் பிரளய தொன்மங்கள், பம்பாய் வரலாற்றுக் கழக ஜர்னல் II – 1

உ)ஜே.பெரியநாயகம் (1941), மனுவின் பிரளயம், தி நியூ ரிவியூ XI

ஊ)ஹீராஸ் பாதிரியார் (1954), தொல் இந்தோ நண்ணிலக்கரை நாகரிக ஆய்வுகள் இயல் IV பக்.411-439

எ)வால்டர் பேர்சர்வீஸ் (1971), The Roots Of Ancient India

Stone Age in India, Pre-Aryan Tamil Culture, History of the Tamils, Dravidian India, Pre-Historic South India, Origin and Spread of Tamils, Tamil India முதலிய நூல்மூலங்களில் பல அரிய செய்திகளை அறியலாம்.

1950களுக்குப் பின்னர் “லெமூரியாக் கண்டம்” அல்லது “குமரிக்கண்டம்” கொள்கையை அறிவியல் உலகம் கைவிட்டுவிட்டது என்பது உண்மைதான். ஆனால், தமிழ் இலக்கியங்களும் சீரளமைக் குன்றாத தமிழ்மொழியும் அதன் நூல்களும் பறைசாற்றிக்கொண்டிருக்கும் சான்றாதாராங்களை எவரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அல்லது, இன்று தமிழ்மொழிக்குத் தாயகமாக இருக்கும் இந்தியாவோ, தமிழ்நாடோ, இலங்கையோ அந்தச் சான்றாதாரங்களை உலகத்திற்கு எடுத்துக் காட்டுவதாகவும் இல்லை; முழுமையான ஆராய்ச்சியைத் தொடங்கியதாகவும் இல்லை.

ஏற்கனவே நான் குறிப்பிட்டது போல, குமரிக்கண்ட சான்றுகளும் ஆதாரங்களும் தமிழுக்கும் தமிழருக்கும் சொந்தமானதாக இருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம்.

நிலைமைகள் இப்படி இருக்கையில், 2012 படத்தில் காட்டுவது போன்ற உலகப் பேரழிவு குமரிக்கண்டத்திலும் நிகழ்ந்தது – அதனால் தமிழன் பிறந்தகமாம் குமரிநாடு கடலுக்குள் காணாமல் போனது என்ற உண்மையை உலகம் அறிவது எப்படி?

இன்று இல்லாவிட்டாலும், 2212 – 2912 – 3012 என்று என்றேனும் ஒரு காலத்தில் குமரிக்கண்ட உண்மை உலகத்தித்கு தெரியவரலாம். அன்று, குமரிநிலத்தில் பிறந்த இனத்தித்குச் சொந்தமானவன் நான்தான் என உரக்கச் சொல்லுவதற்கு, உலகின் எந்த மூலையிலும் ஒற்றைத் தமிழன்கூட இல்லாது போகலாம்.

21 comments:

  1. குமரிகண்டம் அழிந்ததுபோல் இன்னும் ஓர் பேரழிவு வந்தாலும் உலகின் எதாவது மூலையில் கண்டிப்பாக தமிழன் வாழ்வான், தமிழை வாழவைப்பான். யாராலும் தமிழை அழிக்கமுடியாது.

    ReplyDelete
  2. >பெயரில்லாத் திருத்தமிழ் அன்பரே,

    உங்கள் நம்பிக்கை பலிக்க வேண்டும். அதுவே என் ஆவலும்கூட.

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  3. நீலகண்டன்20 November, 2009

    பண்டைய நிலப்பரப்பு குறித்த ஆய்விற்கு, இலக்கியம் (Literature), வெட்டெழுத்து(Inscriptions), பழம்பொருள் நூல்கள்(Archaeology) போன்றவற்றைவிட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது Oceanographic and Plate Tectonics movements குறித்த தகவல்களே ஆகும். லெமுரியா என்ற பெயர் எப்படி ஏற்பட்டது? குமரிகண்டமும் லெமுரியாவும் ஒன்றா அல்லது வெவ்வேறு நிலப்பரப்புகளா? இதற்கு முதலில் ஆதாரம் காட்டுங்கள்!

    ReplyDelete
  4. >திருத்தமிழ் அன்பர் நீலகண்டன்,

    //குமரிகண்டமும் லெமுரியாவும் ஒன்றா அல்லது வெவ்வேறு நிலப்பரப்புகளா? //

    பதில்கள் என் பதிவுகளில் உள்ளன.

    //லெமுரியா என்ற பெயர் எப்படி ஏற்பட்டது? //

    இவ்வளவு செய்திகளை அறிந்துள்ள உங்களுக்கு 'லெமூர்' என்ற குரங்கினத்திலிருந்து வந்த பெயர் இது என தெரியாதா என்ன?

    உங்களிடம் போதிய தரவுகள் இருந்தால், லெமூரியா, குமரிக்கண்டம் அல்ல என்றோ, குமரிக்கண்டம்,லெமூரியா அல்ல என்றோ அல்லது லெமூரியா குமரிக்கண்டம் இரண்டுமே எப்போதும் இருந்ததே இல்லை என்று ஒரு வலைப்பதிவு தொடங்கி எழுதுங்களேன்.

    உங்கள் கருத்துகளை எழுத உங்களுக்கும் உரிமை இருக்கிறதே.

    ReplyDelete
  5. நீலகண்டன்20 November, 2009

    ’லெமூர்’ எனும் குரங்கினம் உலகின் இரண்டு இடங்களில்தான் காண இயலும். ஒன்று தமிழ் நாடு, மற்றொன்று மடகாஸ்கார். ஆகவே, பண்டைய காலத்தில் தமிழகத்தின் நிலப்பரப்பு மடகாஸ்கார் வரை பரந்து விரிந்திருக்க வேண்டும் என ஒரு சர்ச்சை எழுந்தது. அதனை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஒரு பூகோள வரைப்படத்தையே வரைந்து காட்டி இதுதான் லெமூரியா என்றால் நம்பிவிட முடியுமா என்ன? உயிரியல் தடயங்கள் மனிதனின் தோற்றம் ஆப்பிரிக்க கண்டம் என நிரூபித்திருக்கும்பொழுது, இல்லாத ஒரு நிலப்பரப்பில் தோன்றிய மனிதன் தமிழன் என்று கூறுவது எவ்வளவு அறியாமை. நான் கேட்ட ஆதாரங்களை உங்களால் சரிவரத் தர முடியவில்லை. நீங்கள் அளித்த இணைய இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களால் சரியான ஆதாரத்தை எடுத்துக் கூறவுமில்லை.

    வரலாற்றைக் கூறும்பொழுது தயவு செய்து பக்கசார்பற்று முறையான ஆய்வுகளை மேற்கொண்டு எழுதவும்!

    ReplyDelete
  6. பிதாமகன்20 November, 2009

    எங்க நீலகண்டன் பேச்சு மூச்சையே காணவில்லை? தானாவது சொல்லவேண்டும், அல்லது சொல்ல வந்தவர்களையாவது சொல்ல விடவேண்டும்.சும்மா நானும் மேதாவி என்று கேள்வி மட்டும் கேட்டால் போதாது. விரைவில் இதுப்பற்றி உங்களின் பதிவை எதிர்ப் பார்க்கிறோம்.

    ReplyDelete
  7. >திருத்தமிழ் அன்பர் நீலகண்டன்,

    //இல்லாத ஒரு நிலப்பரப்பில் தோன்றிய மனிதன் தமிழன் என்று கூறுவது எவ்வளவு அறியாமை. நான் கேட்ட ஆதாரங்களை உங்களால் சரிவரத் தர முடியவில்லை.//

    வரலாற்றுக் காலத்திற்கு முந்திய குமரிநிலம் மூழ்கிவிட்டது என்று சொல்லியிருக்கிறேன். அதனால், புறச்சான்றுகள், பொருள்நிலைச் சான்றுகள், வெட்டெழுத்துச் சான்றுகள் எதுவும் கிடைக்க வாய்ப்பில்லை என்று சொல்லியிருக்கிறேன். இலக்கியச் சான்றும் மொழியியல் சான்றும் மட்டுமே உறுதியாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறேன்.

    இத்தனையும் விவரமாகப் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அதன்பிறகும் சான்று வேண்டும் என்று வந்து நிற்கிறீர்களே..! விடாக்கொண்டனய்யா நீங்கள்..!!

    ஆனாலும் நான் கொடாக்கொண்டனல்லன்.. பார்த்தீர்களா?

    இன்னும் எழுத நிறைய இருக்கிறது. இது போதும் என்பதால் நிறுத்திக்கொண்டேன். இலக்கிய, மொழியியல் ஆதாரங்களை விரிவாகச் சொல்லியிருக்கிறேன். மற்ற ஆதாரம் வேண்டும் என்றால் நீங்களாக கொஞ்சம் முயன்று பாருங்களேன்..!

    //வரலாற்றைக் கூறும்பொழுது தயவு செய்து பக்கசார்பற்று முறையான ஆய்வுகளை மேற்கொண்டு எழுதவும்!//

    அதேபோல, ஒரு வரலாற்றைப் படிக்கும்பொழுதும் தயவுசெய்து பக்கச்சார்பு இல்லாமல் பொறுமையாகவும் முழுமையாகவும் படித்துப் பார்க்கவும்; பக்கச்சார்பு இல்லாமல் நடுநிலையோடு சிந்திக்கவும் தெரிந்திருப்பது எல்லாருக்கும் நல்லது.

    ReplyDelete
  8. >திருத்தமிழ் அன்பர் பிதாமகன்,

    அன்பர் நீலகண்டன் இன்று வந்தவர். இதற்கு முன்னால் பற்பலர் தமிழனையும் தமிழன் வரலாற்றையும் பழந்தமிழன் நிலத்தையும் எள்ளி நகையாடி ஏகடியம் செய்திருக்கிறார்கள். அந்த வரலாற்றை எல்லாம் ஏற்கனவே படித்திருப்பதால் அன்பர் நீலகண்டன் மீது எந்த வித எரிச்சலும் நமக்கு ஏற்படவில்லை.

    தமிழன் எங்காவது தாண்டிக் குதித்தால், அங்கெல்லாம் சிலர் தடைக்கல்லாக எழுந்து நிற்பது வரலாற்றில் வழக்கமான ஒன்றுதான்.

    தமிழுக்கும் தமிழனுக்கும் எதிராகப் பகைவர்கள் செய்யும் கொடுமை எள்மூக்கு அளவென்றால், தமிழனே செய்யும் கேடு பரங்கி அளவினது என்று பாவாணர் சொல்லியிருப்பது நமக்கெல்லாம் ஆறுதலான மருந்து.

    ReplyDelete
  9. //உயிரியல் தடயங்கள் மனிதனின் தோற்றம் ஆப்பிரிக்க கண்டம் என நிரூபித்திருக்கும்பொழுது, இல்லாத ஒரு நிலப்பரப்பில் தோன்றிய மனிதன் தமிழன் என்று கூறுவது எவ்வளவு அறியாமை//

    ஐயா மடகாச்காரும் ஆப்ரிக்க கண்டமும் அருகில் தான் இருக்கின்றன என்பது ஆறாம் வகுப்பு மாணவர்க்கு கூட தெரியும் என்பதை நினைவுறுத்துகிறேன்

    ReplyDelete
  10. நீலகண்டன்21 November, 2009

    என்னே கொடுமையிது சாமி! கடைசியில் எனக்கு தமிழினத் துரோகி பட்டமா? துரோகி பட்டங்களை அள்ளி வாரி வழங்கும் வலைப்பதிவோ இது?

    எந்தவொரு இனத்தின் வரலாறும் பிழையாக எழுதப்பட்டுவிடக் கூடாது என்பதில் கண்ணுங்கருத்துமாக இருப்பவன் நான். அதிலும் தமிழர்களின் வரலாற்றை தக்கச் சான்றுகளுடன் நிறுவவேண்டும் என்பதில் எனக்கு நிறைய ஆவல் இருக்கிறது.

    ஆணி அடித்தாற்போல் அறிவித்துவிட்டு, இப்பொழுது புறச்சான்றுகள் இல்லை வெறும் இலக்கியம் கூறும் தகவல்களையே ஆதாரமாக்கிக் கொண்டு எழுதுகிறேன் என்றால் என்ன நியாயம்.

    புறச்சான்றுகள் இல்லையென்றால் பின்பு எதற்கு லெமூரியாவை மடகாஸ்காரிலிருந்து ஆஸ்துரீலியா வரை நீண்டு பரந்து விரிந்த நிலப்பரப்பாக வரைந்து வைத்திருக்கின்றனர்? இதற்கான சான்று எங்கு கிடைத்தது இவர்களுக்கு?

    முன்னூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்திய துணைகண்டம் தென் துருவத்தின் நிலப்பரப்போடு ஒட்டியிருந்ததை நீங்கள் அறிவீர்களா?

    பதில் கூறுங்கள் என் அனைத்து கேள்விகளுக்கும்!

    ReplyDelete
  11. >திருத்தமிழ் அன்பர் நீலகண்டன்,

    //எந்தவொரு இனத்தின் வரலாறும் பிழையாக எழுதப்பட்டுவிடக் கூடாது என்பதில் கண்ணுங்கருத்துமாக இருப்பவன் நான். அதிலும் தமிழர்களின் வரலாற்றை தக்கச் சான்றுகளுடன் நிறுவவேண்டும் என்பதில் எனக்கு நிறைய ஆவல் இருக்கிறது. //

    நிறைய ஆவல் உள்ளவராக இருந்திருந்தால் நான் சொன்ன சான்றுகளுக்கு மாற்றாகத் தக்கச் சான்றுகளை முன்வைத்து தெளிவை ஏற்படுத்தி இருக்க வேண்டும் நீங்கள்.

    தவறுகளைச் சுட்டிக்காட்டி சரியான விவரத்தை முன்வைத்திருக்க வேண்டும்.

    இதற்கு மாறாக, நான் முன்வைத்த பல செய்திகளை; சான்றுகளை; ஆதாரங்களை மடைமாற்றும் (Divert) பணியைத்தான் மிகவும் அருமையாக உங்கள் மறுமொழி வழியாக செய்திருக்கிறீர்கள்.

    நான் முன்வைத்த மொழியியல் சான்றுகள் தொடர்பில் நீங்கள் ஒருவரிகூட மூச்சுப் பரியவில்லை. இப்படியேதான் தமிழ்ப் பகைவர்களும் அன்னியர்களும் கண்முன்னே இருக்கும் இலக்கியச் சான்றுகளைப் பொருட்படுத்தவே இல்லை. அதனால், குமரிக்கண்ட ஆய்வுக்கு வழிதிறக்கவே இல்லை எனபதுதான் இத்தனைக் காலமும் நாம் கண்டிருக்கும் உண்மை நிலவரம்.

    //ஆணி அடித்தாற்போல் அறிவித்துவிட்டு, இப்பொழுது புறச்சான்றுகள் இல்லை வெறும் இலக்கியம் கூறும் தகவல்களையே ஆதாரமாக்கிக் கொண்டு எழுதுகிறேன் என்றால் என்ன நியாயம்.//

    குமரிக்கண்டம் பற்றி இதுவரை சொல்லப்பட்ட எல்லா செய்திகளையும் மறைக்காமல் சொல்லியிருப்பதாகக் கருதுகிறேன்.

    குமரிநிலம் இருந்தது என்று தமிழ் அறிஞர்களும், மேலைநாட்டு ஆய்வாளர்களும் ஆய்ந்து சொன்ன விவரங்களை அப்படியே எழுதியுள்ளேன்.

    தமிழ் இலக்கிய, மொழியியல் சான்றுகளை எடுத்துச் சொல்லியுள்ளேன்.

    குமரிகண்ட வரலாற்று ஆய்வை இன்றைய அறிவியல் உலகம் கைவிட்டுவிட்ட உண்மையைச் சொல்லியுள்ளேன்.

    எவர் குமரிக்கண்ட வரலாற்றை மறுத்தாலும் மறைத்தாலும் அது என்றேனும் ஒருநாள் வெளிப்படலாம் என்ற நம்பிக்கையையும் முன்வைத்துள்ளேன்.

    என்னைப் பொறுத்தவரையில் மிகவும் நியாயமாகவே இந்தத் தொடரை எழுதியிருக்கிறேன். அதில் மிகவும் நிறைவாக இருக்கிறேன்.

    //முன்னூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்திய துணைகண்டம் தென் துருவத்தின் நிலப்பரப்போடு ஒட்டியிருந்ததை நீங்கள் அறிவீர்களா?//

    கண்டிப்பாக அறியேன் ஐயா. இதுமட்டுமல்ல, இன்று உலக வரலாறாகச் சொல்லப்படும் எதையும் நான் நேரடியாகப் பார்த்து அறியேன்.. ஆய்ந்து அறியேன்..! ஆய்வதற்குரிய அறிவும் கொண்டிலேன்..!

    எல்லாமும் நூல்வழி கற்ற அறிவு மட்டுமே! அறிஞர் பெருமக்கள் காட்டிய வழி மட்டுமே! தமிழ்மொழி கொடுத்த தன்னம்பிக்கை மட்டுமே! இதனைத் தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே!

    உங்களின் அடுத்த 'மடைமாற்று திருப்பணியை' ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    மீண்டும் வருக நண்பரே..!

    ReplyDelete
  12. நீலகண்டன்21 November, 2009

    தமிழ் துரோகி பட்டம்போய், இப்பொழுது மடைமாற்றி பட்டமா? உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? பொய்யை உரக்கச் சொல்வதும் பிறரை வைவதும்தான் உங்களுடைய திருத்தமிழ் பணியா?

    நீங்கள் கூறும் இலக்கிய ஆதாரங்கள் இருவகையாகப் பிரிக்கலாம். எளிமையாகவே கூறுகிறேன். ஒன்று உண்மை, மற்றொன்று புனைவு. சோழன் தேவேந்திரனுடன் போரிட்டு வென்றான் என்று கூறுவதும் தமிழ் இலக்கியம்தான். எனவே, இலக்கியங்களை கவனமாகத்தான் கையாள வேண்டும். வெறும் இலக்கியத்தைக் கொண்டு நிலப்பரப்பு குறித்த சர்ச்சைகளுக்கு அச்சாணி போடுவது அறியாமை.

    300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்திய துணை கண்டம் தென் துருவத்துடன் இணைந்திருந்தது. அப்பொழுது மடகாஸ்கார் (தற்போது தென் ஆப்பிரக்கா அருகில் இருக்கும் தீவு) இந்திய துணைகண்டத்துடன் இணைந்திருந்தது. அப்பொழுது மனிதனைத் தவிர பல உயிரினங்கள் அங்கு இருந்திருக்கின்றன. இந்திய துணைகண்டம் ஆசியாவுடன் இணையும்பொழுதே மடகாஸ்கார் ஆப்பிரிக்க கண்டத்திற்கு இடப்பெயர்வாகிவிட்டது. எனவே, அங்குள்ள அரிய உயிரினமாகிய லெமூர் குரங்கினம் தமிழ் நாட்டிலும் இருப்பதில் ஆச்சரியமில்லை.

    ஆனால், ஒரு வெள்ளையன் பூகோள வரைபடத்தையே மாற்றி வரைந்து இதுதான் லெமூரியா என்கிறான். அதனை கொஞ்சம்கூட ஆய்ந்தறியாமல் துரை சொல்கிறார் என்று அக்காலத்திய தமிழ் அறிஞர்கள் வாயைப் பிளந்து கொண்டு ஏற்றுக் கொண்டார்கள். இலக்கியத்தில் குறிப்பிடப்படும் குமரி கண்டம் லெமூரியாதான் என சாதித்தார்கள். தமிழறிஞர்கள் என்ற பெயரில் எதையும் ஆராயாமல் வெள்ளையன் சொன்னானே என அப்படியே ஏற்றுக் கொண்ட அவர்கள் அடிமையா, இல்லை நானா?

    உலக அறிவியல் தமிழ் வரலாற்றை ஏற்க மறுக்கிறது என்று நீங்கள் கூறுவது முற்றிலும் பொய்! எத்தனையோ இயக்கங்கள் வரலாற்றை முறையே ஆய்ந்து நிறுவ பக்கசார்பற்ற ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. லெமூரியா என்ற நிலப்பரப்பு உண்மையிலேயே இருந்திருந்தால், நாமே அழைக்காமல் ஆய்வுகள் எப்பொழுதோ நடந்தேறியிருக்கும்.

    அனைத்தையும்விட மிக முக்கியத்துவம் வாய்ந்த தடயம் உயிரியல் தடயமாகும். உயிரியல் ஆராய்ச்சியில் மனிதன் மத்திய ஆப்பிரிக்க கண்டத்தில்தான் தோன்றினான் என்பதை ஆதாரப்பூர்வமாக நிறுவுகிறார்கள். மத்திய ஆப்பிரிக்காவிற்கும் தென் ஆப்பிரிக்கா அருகில் இருக்கும் மடகாஸ்கார் தீவிற்கும் எவ்வளவு தொலைவு என்று ஆறாம் ஆண்டு மாணவனுக்குத் தெரியுமா நற்குணன் ஐயா?

    ReplyDelete
  13. >திருத்தமிழ் அன்பர் நீலகண்டன்,

    //தமிழ் துரோகி பட்டம்போய், இப்பொழுது மடைமாற்றி பட்டமா? உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? பொய்யை உரக்கச் சொல்வதும் பிறரை வைவதும்தான் உங்களுடைய திருத்தமிழ் பணியா?//

    இப்படி உங்களுக்கு யார் எப்போது பட்டம் கொடுத்தார்கள். யாரும் அடிப்பதற்கு முன்பே "ஐயோ அடிக்கிறான்.. குத்துறான்" என்று கத்தி கூப்பாடு போடுவது போலிருக்கிறது உங்கள் செயல் நண்பரே..!

    நீங்கள் வழங்கியிருக்கும் தகவல்களுக்கு நன்றி. அவை திருத்தமிழ் அன்பர்களுக்குப் பயன்படுமானால் மிகவும் மகிழ்வேன்.

    அதேபோல், குமரிநாடு தொடர்பாக எழுதப்பட்ட செய்திகளும் திருத்தமிழ் வாசகர்களுக்குப் பயனுள்ளதாக, புதிய சிந்தனை ஓட்டத்தை ஏற்படுத்துவதாக அமையும் என நம்புகிறேன்.

    //ஆனால், ஒரு வெள்ளையன் பூகோள வரைபடத்தையே மாற்றி வரைந்து இதுதான் லெமூரியா என்கிறான். அதனை கொஞ்சம்கூட ஆய்ந்தறியாமல் துரை சொல்கிறார் என்று அக்காலத்திய தமிழ் அறிஞர்கள் வாயைப் பிளந்து கொண்டு ஏற்றுக் கொண்டார்கள். //

    இதுகுறித்து மேலதிக தகவல்கள் தெரிவித்தால், ஏற்பதா? இல்லையா? என சீர்தூக்கிப் பார்க்க அணியமாக இருக்கிறேன்.

    //உலக அறிவியல் தமிழ் வரலாற்றை ஏற்க மறுக்கிறது என்று நீங்கள் கூறுவது முற்றிலும் பொய்! எத்தனையோ இயக்கங்கள் வரலாற்றை முறையே ஆய்ந்து நிறுவ பக்கசார்பற்ற ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. லெமூரியா என்ற நிலப்பரப்பு உண்மையிலேயே இருந்திருந்தால், நாமே அழைக்காமல் ஆய்வுகள் எப்பொழுதோ நடந்தேறியிருக்கும்.//

    நான் அப்படி நினைக்கவில்லை. குமரிநிலம் தமிழ் மண்; தமிழன் வரலாறு. இப்படியிருக்க, தங்களுடைய கடல் எல்லையில் ஆய்வுகள் நடத்துவதற்கு இந்தியாவோ.. அல்லது இலங்கையோ இசைவு கொடுக்கும் என்று நினைக்கிறீர்களா நண்பரே..?

    உங்கள் தொடர் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  14. மகேந்திரன் நவமணி23 November, 2009

    குமரிக்கண்டத்தின் அறியப்படாத உண்மைகள் என்றாவது ஒரு நாள் உலகுக்குத் தெரிய வரும் என நம்புவோம்...

    ReplyDelete
  15. மகேந்திரன் நவமணி23 November, 2009

    மீண்டும் ஒரு பேரழிவில் புதைந்து போன உண்மைகள் தெரிய வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...
    பதிவுகள் ஒவ்வொன்றும் நன்று.

    ReplyDelete
  16. >திருத்தமிழ் அன்பர் மலேந்திரன் நவமணி,

    திருத்தமிழ் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

    //குமரிக்கண்டத்தின் அறியப்படாத உண்மைகள் என்றாவது ஒரு நாள் உலகுக்குத் தெரிய வரும் என நம்புவோம்...//

    உண்மைதான். நம்பிக்கைதானே வாழ்க்கை.

    அதற்காக, நாம் வாளாவிருந்துவிடாமல் நம்மால் ஆன சிறுசிறு பணிகளைச் செய்து தமிழை முன்னெடுக்க வேண்டும். அதற்கு முன், நம் வாழ்வின் எல்லா நிலைகளிலும் எதையும் விட தமிழையே முன்நிறுத்த வேண்டும்.

    உங்கள் அன்பான பாராட்டுக்கும் நன்றி. மீண்டும் வருக!

    ReplyDelete
  17. பிதாமகன்.26 November, 2009

    சுப.நற்குணன் ஐயா,
    திரு நீலகண்டனிடம் கேட்கவேண்டிய கேள்வியே வேறு. அது என்னவென்றால்," ராமர் பாலம் உண்மையா? ". இதற்கு பதில் சொல்லிவிட்டால் அவர் விஷயம் என்னவென்று தெரிந்துவிடும். இதற்கு பதில் சொல்லுங்கள் திரு நீலகண்டன் சார்.

    ReplyDelete
  18. >திருத்தமிழ் அன்பர் பிதாமகன்,

    கேள்வி கேட்பவருக்கு அதன் தொடர்பாக பதில் கொடுப்பதே பண்பாடு எனக் கருதியே கொஞ்சமும் சலிப்பு அடையாமல் எழுதி வருகிறேன்.

    கேள்விக்கு கேள்வி என விதண்டாவாதம் செய்ய அதிக நேரம் பிடிக்காது. அதனால், பயன் இல்லை என்பதால் அதனைச் செய்யாது விடுகின்றேன்.

    ஆனாலும் பாருங்கள், இதைகூட பொறுத்துக்கொள்ள முடியாமல் திருத்தமிழ் வலைப்பதிவில் கோளாறுகளைச் செய்கிறார்கள்.. கீழறுப்புப் பண்ணுகிறார்கள்.

    இந்தப் பதிவை கொஞ்சம் பார்க்கவும் அன்பரே.

    http://thirutamil.blogspot.com/2009/11/2010.html

    ReplyDelete
  19. //எந்தவொரு இனத்தின் வரலாறும் பிழையாக எழுதப்பட்டுவிடக் கூடாது என்பதில் கண்ணுங்கருத்துமாக இருப்பவன் நான்.//

    ஐயா நீலகண்டனார் இதுவரை எத்தனை இனத்தின் வரலாற்றுப் பதிவுகளுக்கு மறுமொழி இட்டு இருக்கிறார் என்று சான்றோடு குறிப்பிடுவாரா?

    உண்மையில் அக்கறை இருப்பின் தமக்குத் தெரிந்த தமிழன் வரலாற்றுச் சான்றுகளை அல்லவா இங்கே பதிவேற்றி இருக்க வேண்டும்!

    இவர் அறிவில் ஆதவரா! இல்லை....

    ReplyDelete
  20. இஃது ஒர் அருமையான தலைப்பு. நிச்சயம் தமிழர்க்கு ஒரு தெளிவைத் தரக்கூடிய வாய்ப்பு.நன்முறையில் பயன்படுத்துவோம்

    ReplyDelete
  21. >திருத்தமிழ் அன்பர் விக்கினேசு கிருட்டிணன்,

    நீண்ட இடைவேளைக்குப் பின்னர் உங்களைத் திருத்தமிழில் காண்பதில் மகிழ்ச்சி. நீண்ட காலமாக உங்கள் வலைப்பதிவு புதுப்பிக்கப்படாமல் இருக்கிறதே..! நேரமில்லையோ? விரைவில் புதிய செய்தி எழுதுவீர்கள் என நம்புகிறேன்.

    //எந்தவொரு இனத்தின் வரலாறும் பிழையாக எழுதப்பட்டுவிடக் கூடாது என்பதில் கண்ணுங்கருத்துமாக இருப்பவன் நான்.//

    சில நாட்டுக்காரன்கள் அண்டப் புழுகும் ஆகாசப் புழுகுமாக வரலாற்றைத் திரித்து எழுதிவைத்துக்கொண்டு என்னாமோ இவர்கள்தாம் உலகத்தையே உண்டாக்கியவர்கள் போல 'புருடா' விடுகின்ற கதையெல்லாம் அன்பர் நீலகண்டன் அறியமாட்டார் போலும்.

    ஆட்சி, அதிகாரம் தங்கள் கையில் இருக்கும் ஆணவத்தில் கொழுத்துபோய் ஆடுகின்ற.. உண்மை வரலாற்றை அழித்து ஒழிக்கின்ற நாடுகள் இருப்பதை அவர் அறியமாட்டார் போலும்.

    உலகத்தில் எவன் எப்படி புழுகினாலும் சரி.. அதைப்பற்றியெல்லாம் கேள்வி கேட்கமாட்டார்கள்.

    அனால், தமிழன் மட்டும் ஓர் உண்மையைச் சொன்னாலும் ஆயிரத்தெட்டு கோணங்களில் குறுக்கு விசாரணை செய்வார்கள்.

    அதுகூட உண்மையை தேடி அறிவதற்கு அல்ல. மற்ற யாருக்கும் உண்மை தெரிந்துவிடக் கூடாதே என்பதற்குத்தான்.

    ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை..
    ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை..

    ReplyDelete

வணக்கம் திருத்தமிழ் அன்பர்களே. உங்கள் எண்ணங்களையும் ஏடல்களையும் இங்கே மறுமொழியாக இட்டுச்செல்லுங்கள். நன்றி.
அன்புடன்;
திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்