Friday, March 20, 2009

எசுபிஎம் மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி

எசுபிஎம்(SPM) தேர்வில் தமிழ் இலக்கியத்தை ஒரு பாடமாக எடுக்கும் மாணவர்கள் பயனுக்காக 'எசு.பி.எம். தமிழ் இலக்கியம்' எனும் வலைப்பதிவு உருவாகி உள்ளது. இதன்வழி, இவ்வாண்டிலும் இனிவரும் ஆண்டுகளிலும் நாட்டில் தமிழ் இலக்கியத் தேர்வை எழுதவுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்கள் பெரும் பயனடையலாம்.
தமிழ் இலக்கியத் தேர்வெழுதும் நமது மாணவர்களின் நலனையும்; தமிழ் இலக்கியத்தின் நலனையும் கருத்தில்கொண்டு இப்படியொரு பயன்மிகுந்த வலைப்பதிவைத் தொடங்கியிருக்கும் அந்த வலைப்பதிவருக்கு மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்.
எசுபிஎம் தேர்வில் தமிழ் இலக்கியப் பாடத்தை எடுக்கும் மாணவர்கள் பல சிக்கல்களை எதிர்நோக்கி வருவது உண்மையே. குறிப்பாக,

  • ஆசிரியர் இல்லாமை
  • பள்ளியில் படிக்கும் வாய்ப்பு இல்லாமை
  • கால அட்டவணைக்குள் தமிழ் இலக்கியம் படிக்க முடியாமை
  • தேர்வு அணுகுமுறைகள் - வழிகாட்டல்கள் இல்லாமை
  • துணை நூல்கள் - மேற்கோள் நூல்கள் இல்லாமை

முதலான பல்வேறு சிக்கல்களுக்கு இடையிலும் ஆண்டுதோறும் மூவாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் எசுபிஎம் தமிழ் இலக்கியத் தேர்வை எழுதிவருகின்றனர்.

உண்மையிலேயே, இந்த மாணவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளைச் சொல்லியே ஆகவேண்டும். காரணம், எந்தச் சிக்கல் இருந்தாலும்.. எந்தச் சூழல் வந்தாலும்.. தமிழ் இலக்கியத்தைப் படித்தே ஆகவேண்டும் என்ற தீராத வேட்கையும் உறுதியும் தமிழ்ப் பற்றுணர்வும் கொண்டவர்கள் இம்மாணவர்கள் என்றால் மிகையன்று.

அதே வேளையில், இத்தகைய உணர்வுள்ள மாணவர்களை உருவாக்கிய இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த தமிழ் உணர்வுமிக்க நல்லாசிரியர்களும் கைக்கூப்பி வணங்கத் தக்கவர்களே.

இந்த ஆசிரியர் குழாம்தான் இந்த நாட்டில் தமிழ் இலக்கியத்திற்குப் புத்துயிர் ஊட்டி எழுச்சி பெறச் செய்தவர்கள். இவர்களின் தன்னார்வ முயற்சியாலும் தொடர்ச்சியான உழைப்பாலும்தான் இன்றைய நிலையில் ஏராளமான மாணவர்கள் தமிழ் இலக்கியப் பாடத்தை ஆர்வமுடன் படித்து வருகின்றனர்.

இதற்காக, மேற்சொன்ன நல்லாசிரியர் பெருமக்களும் தமிழ்க்கல்வி அதிகாரிகள் சிலரும் ஒன்றிணைந்து முன்னெடுத்த முயற்சிகள் என்றென்றும் போற்றத்தக்கன; நன்றியோடு நினைவுக்கூரத்தக்கன.

இவர்களின் உழைப்புகள் ஒருபுறம் இருக்க, இன்றைய புதிய வரவான வலைப்பதிவு ஊடகத்தின் வழியாக நமது மாணவர்களுக்கு உதவும் நோக்கத்தோடும், தமிழ் இலக்கியத்தை வளர்த்தெடுக்கும் நோக்கத்தோடும் உருவாகி இருக்கிறது 'எசு.பி.எம்.தமிழ் இலக்கியம்' என்னும் புதிய வலைப்பதிவு.

  • தமிழ் இலக்கியப் பாடத்தின் நோக்கங்கள்
  • தமிழ் இலக்கியத் தேர்வுத் தாள் அமைப்பு
  • தமிழ் இலக்கிய வினா அமைப்புமுறை
  • தேர்வு அணுகுமுறைகள் - பதில் எழுதும் முறைகள்
  • மாதிரி வினாக்கள் - விடைகள்

முதலான பல்வேறு விவரங்கள் - விளக்கங்கள் - வழிகாட்டல்கள் இந்த வலைப்பதிவில் இடம்பெற்றுள்ளன.

இதன்வழியாக, நமது எசுபிஎம் மாணவர்கள் பெரும் பயனை அடைவார்கள் என்பது திண்ணம். எனவே, நமது மாணவச் செல்வங்கள் இந்த வலைப்பதிவை நன்முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

அதோடு, இந்த வலைப்பதிவு பற்றி நாடுமுழுவதும் உள்ள மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். ஆகவே, இந்த இடுகையை வாசிக்கும் அன்பர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வட்டாரத்தில் - ஊர்களில் உள்ள இடைநிலைப் பள்ளி ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் இந்த நற்செய்தியைச் சேர்ப்பிக்க வேண்டும்.

அன்பார்ந்த வலைப்பதிவு அன்பர்கள் இந்த நற்பணிக்குத் துணைநின்று 'எசு.பி.எம் தமிழ் இலக்கியம்' வலைப்பதிவுக்குத் தங்கள் வலைப்பதிவில் இணைப்பு தர வேண்டுகிறேன்.

Thursday, March 19, 2009

முதுபெரும் பாவலர் சா.சி.குறிஞ்சிக்குமரனார் (ஈப்போ)

மலேசியாவில், பேரா மாநிலத் தலைநகராம் ஈப்போ மாநகரில் தனித்தமிழ் குன்றமாய் விளங்கியவர் முதுபெரும் பாவலர் ஐயா.சா.சி.குறிஞ்சிக்குமரனார். அன்னாரைப் பற்றி தமிழக முனைவர் மு.இளங்கோவனார் எழுதிய கட்டுரை இது. எங்கள் மலேசியத் தமிழ் அறிஞரை 'தமிழ் ஓசை' நாளிகை வழியாகத் தமிழகத்திற்கும் தமது வலைப்பதிவின் வழியாகத் தமிழ்க்கூறு நல்லுலகிற்கும் அறிமுகம் செய்துள்ள முனைவர் மு.இளங்கோவனார் அவர்களுக்குக் கரம்குவிந்த நன்றிகளை உரித்தாக்குகின்றேன்.

***********************************


தமிழகத்தில் பலர் மொழிஞாயிறு பாவாணர்தம் தமிழ்ப்பணி அறியாமல் இருக்கும் சூழலில் பாவாணருக்கு மலேசியாவில் மன்றம் வைத்துத் தமிழ்ப்பணி புரிந்தவர் குறிஞ்சிக்குமரனார் ஆவார்.

மலசியாவில் திராவிடர் கழகம், தமிழ்நெறிக் கழகம் உள்ளிட்ட தமிழ்நெறி சார்ந்த அமைப்புகள் வளர்ச்சி பெறப் பாடுபட்டவர்களுள் நம் குறிஞ்சிக்குமரனார் குறிப்பிடத்தக்கவர்; தலையாயவர்.


ஈப்போ பகுதியில் அரசியல் சார்பற்று இனம், மொழி, கலை, பண்பாடு போன்ற துறைகளில் பணியாற்றி தனித்தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர் இவர்.

சித்த மருத்துவத்துறையில் வல்லுநராகப் பணிபுரிந்த குறிஞ்சிக்குமரனார் தமிழ் உணர்வு கொண்டு விளங்கியதுடன் மலேசியாவில் தனித்தமிழ் உணர்வுகொண்ட பலர் உருவாகத் தக்க பணிகளைச் செய்தவர்.

பன்னூல் ஆசிரியராக விளங்கியவர்.

பிறமொழி கலவாமல் பேசும், எழுதும் இயல்புடையவர்.

இவர்தம் வாழ்க்கையை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது. (விரிவாக)

Tuesday, March 10, 2009

பாவலர் அ.பு.திருமாலனார் எனும் மலேசியத் தமிழ் ஞாயிறு


உலகத் தமிழர்கள் கண்டிப்பாக அறியவேண்டிய மலேசியத் தனிப்பெரும் அறிஞர் - மெய்யறிவர் - தமிழ்நெறியர் - தனித்தமிழ்ப் பெரியவர் தமிழ் ஞாயிறு பாவலர் ஐயா அ.பு.திருமாலனார். அன்னாரைப் பற்றிய அரிய தொகுப்பொன்றைத் தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் ஐயா.மு.இளங்கோவனார் தம்முடைய வலைப்பதிவில் எழுதியிருந்தார். மலேசியத் தமிழறிஞர் பாவலர் ஐயா அவர்களைப் பற்றி தமிழக மண்ணிலிருந்து ஒருவர் எழுதியிருப்பது கண்டு பேருவகை கொள்கிறேன். இந்த அரும்பணியை ஆற்றியுள்ள முனைவர் ஐயா.மு.இளங்கோவனாருக்கு மலேசியத் தமிழ்ப் பற்றாளர்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி மொழிகின்றேன்.
*******************************
தமிழ்நெறி சார்ந்த வாழ்க்கை வாழ மலேசியத் தமிழர்களை நெறிப்படுத்தியவர் பாவலர் அ.பு.திருமாலனார் என்பது அறிந்து வியந்தேன். அவர் பற்றி அங்குள்ள பலரிடமும் வினவி அவர்தம் தமிழ்ப்பணிகளைத் தமிழகத்தாருக்கு அறிவிக்க நினைத்தேன். அ.பு.திருமாலனார் தனி மாந்தரல்லர். அவர் ஓர் இயக்கம். அவரின் உணர்வு தாங்கியவர்கள் மலேசியா முழுவதும் பரவி வாழ்கின்றனர்.

அவர் ஒரு பாவலர். படைப்பாளி. கட்டுரையாளர். மெய்ப்பொருளியில் சிந்தனையாளர். அனைவரையும் ஒன்றிணைத்துச் செயல்படும் தலைவர். தமிழ் உணர்வாளர்கள் தமிழகத்திலிருந்து சென்றால் அவர்களை உணர்வு வழியாக அழைத்து, விருந்தோம்பி, சொற்பெருக்காற்ற வாய்ப்பமைத்து, வழி அனுப்பும் இயல்பினர். இத்தொடரின் வழிப் பாவலர் திருமாலனார் பணிகளை இங்கு நினைவுகூர்கிறோம். (விரிவாக)

நன்றி: முனைவர் மு.இளங்கோவன்

Sunday, March 08, 2009

இரத்தம் வெவ்வேறு நிறம்



கவிக்கோ அப்துல் ரகுமான் ஐயா தற்போது மலேசியா வந்துள்ளார். ஐயாவை வருக வருகவென வரவேற்பதில் பெரிதும் மகிழ்கின்றேன். மலேசியாவில், ஒரு நாளிகை நேர்க்காணலின்போது தமிழீழச் சிக்கல் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது, ஐயா அவர்கள் வழங்கிய 'புதுக்கவிதை' இது.

*******************************
**********************
*************





இரத்தம் வெவ்வேறு நிம்

அங்கே
பிணங்கள் விழுந்து கொண்டிருக்கின்றன
நாம் "எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன?" என்று
விசாரித்துக் கொண்டிருக்கிறோம்!

அங்கே
குண்டுகள் வெடித்துக் கொண்டிருகின்றன
நாம் பட்டாசு வெடித்துப்
பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறோம்!

அவர்கள்
வேட்டையாடப்பட்டுக்
கதறிக் கொண்டிருக்கிறார்கள்
நாம்
வெள்ளித் திரைகளுக்கு முன்
விசிலடித்துக் கொண்டிருக்கிறோம்!

அவர்கள்
கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
நாம்
"கற்பில் சிறந்தவள் கண்ணகியா? சீதையா?"
என்று
பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறோம்!

அவர்கள்
வெளிச்சத்தின் விளைச்சலுக்கு
இரத்தம் சொரிந்துக் கொண்டிருக்கிறார்கள்
நாம்
இருட்டுக்காடுகளுக்கு
வேர்வை வார்த்துக் கொண்டிருக்கிறோம்!

அவர்கள்
சயனைட் அருந்திக் கொண்டிருக்கிறார்கள்
நாம்
அதர பானம் பருகிக் கொண்டிருக்கிறோம்!


இதில் வியப்பேதும் இல்லை
அவர்கள் கவரிமான்கள்
நாம் கவரிகள்

இதோ
தேவவேடம் போட்ட சாத்தான்கள்
வேதம் ஓதுகின்றன!

இதோ
இரத்தப் பற்களை மறைத்த ஓநாய்கள்
நீரைக் கலக்கிய பழியை
ஆடுகளின் மீது சுமத்திக் கொண்டிருக்கின்றன!


இதோ
சித்தாந்த வித்துவான்கள்
ஒப்பாரியில்
ராகப் பிழை கண்டுபிடித்துக்
கொண்டிருக்கிறார்கள்!


இதோ
வெள்ளைக்கொடி வியாபாரிகள்
விதவைகளின் புடவைகளை
உருவிக் கொண்டிருக்கிறார்கள்!

அன்று
அசோகன் அனுப்பிய
போதிமரக் கன்று
ஆயுதங்கள் பூக்கின்றது!

இன்று
அசோகச் சக்கரத்தின்
குருட்டு ஓட்டத்தில்
கன்றுகளின் இரத்தம்
பெருகிக் கொண்டிருக்கிறது!

தாய்ப் பசுவோ
கவர்ச்சியான சுவரொட்டிகளைத் தின்று
அசைபோட்டுக் கொண்டிருக்கிறது!!!

-கவிக்கோ அப்துல் ரகுமான்