Saturday, August 16, 2008

தமிழின் சிறப்புணர்த்தும் அடைமொழிகள்


1)அந்தமிழ்:- அம் + தமிழ் = அழகிய தமிழ்

2)அருந்தமிழ்:- அருமை + தமிழ் = அருமைபாடுடைய தமிழ்

3)அழகுதமிழ்:- எல்லாவகையிலும் அழகுநலம் மிக்க தமிழ்

4)அமுதத்தமிழ்:- அமுதம் போன்று வாழ்வளிக்கும் தமிழ்

5)அணித்தமிழ்:- அணிநலன்கள் அமைந்த தமிழ், தமிழினம் பெருமிதமுறும் அணியாக இலங்கும் தமிழ்

6)அன்னைத்தமிழ்:- நம் அன்னையாகவும் மொழிகளுக்கெல்லாம் அன்னையாகவும் விளங்கும் தமிழ்

7)இசைத்தமிழ்:- முத்தமிழில் ஒரு பிரிவு (இசை மொழியின் கூறாவது ஏனைய மொழிகளுக்கு இல்லாத சிறப்பு)

8)இயற்றமிழ்:- முத்தமிழின் மற்றொரு பிரிவு. ஆயகலை அறுபத்து நான்கும் அவற்றின் வழிவந்தனவும் உணர்த்தும் அறிவுநூல்கள் அடங்கியது

9)இன்றமிழ்:- இனிக்கும் தமிழ் (ஒலிக்க, உரைக்க, சிந்திக்க, செவிமடுக்க, எழுத, இசைக்க என எதற்கும் இனியது)

10)இன்பத் தமிழ்:- இன்பூட்டும் ஒலியமைப்பும் மொழியமைப்பும் இலக்கண இலக்கிய மரபும் கொண்டு, கற்பவர்க்கு எஞ்ஞான்றும் இன்பம் பயப்பது.

11)எந்தமிழ்:- எம் + தமிழ் (கால்டுவெல், போப்பு போன்ற பிறமொழிச் சான்றோரும், கற்றதும் 'எந்தமிழ்' என்று பெருமித உரிமை பாராட்டும் தமிழ்)

12)உகக்குந்தமிழ்:- மகிழ்ச்சியளிக்கும் தமிழ்

13)ஒண்டமிழ்:- ஒண்மை + தமிழ் (அறிவின் செறிவும் நுட்பமும் கொண்டு ஒளிதரும் தமிழ்)

14)கனித்தமிழ்:- கனிகள் போன்ற இயற்கைச் சுவையுடைய தமிழ்

15)கற்கண்டுத்தமிழ்:- கற்கண்டு கடிதாய் இருப்பினும் சுவைக்கச் சுவைக்கக் கரைந்து இனிமை தருவது போல, அடர்ந்து செறிந்த நிலையிலும் மாந்தமாந்த மேலும் மேலும் இன்பம் பயக்கும் தமிழ்

16)கன்னித் தமிழ்:- எந்நிலையிலும் தனித்தன்மை கெடாமலும் இளமைநலம் குன்றாமலும் விளங்கும் தமிழ்

17)சங்கத்தமிழ்:- மன்னர்களாலும் புலவர்களாலும் சங்கங்கள் அமைத்துப் போற்றி வளர்க்கப்பட்டத் தமிழ்

18)சுடர்தமிழ்:- அறிவுக்கும் உணர்வுக்கும் சுடர்தரும் தமிழ்

19)சுவைத்தமிழ்:- சொற்சுவை, பொருட்சுவை, கலைச்சுவை, கருத்துச்சுவை என எல்லாச் சுவையும் செறிந்தது

20)செந்தமிழ்:- செம்மை + தமிழ் = எல்லா வகையிலும் செம்மை உடையது (செந்தமிழ் தகைமையால் அன்றே செந்தமிழ் எனப்பட்டது தமிழ்)

21)செழுந்தமிழ்:- செழுமை + தமிழ் - வளம் குன்றாத தமிழ்

22)தனித்தமிழ்:- தன்னேரிலாத தனித்தன்மை வாய்ந்த தமிழ்

23)தண்டமிழ்:- தண்மை + தமிழ் - குளிர்ச்சி நிறைந்தது

24)தாய்த்தமிழ்:- தமிழினத்தின் தாயாகவும் மொழிகளுக்கெல்லாம் தாயாகவும் மூலமாகவும் விளங்கும் தமிழ்

25)தீந்தமிழ்:- (தேன் > தேம் > தீம்) இனிமை நிறைந்த தமிழ்

26)தெய்வத்தமிழ்:- தெய்வத்தன்மை வாய்ந்தது

27)தேன்தமிழ்:- நாவுக்கும் செவிக்கும் சிந்தைக்கும் இனிமை பயக்கும் தமிழ்

28)பசுந்தமிழ்:- பசுமை + தமிழ் – என்றும் தொடந்து செழித்து வளரும் தமிழ்

29)பைந்தமிழ்:- பைம்மை + தமிழ் (பசுமை > பைம்மை)

30)பழந்தமிழ்:- பழமையும் தொடக்கமும் அறியாத தொன்மையுடைய தமிழ்

31)பாற்றமிழ்:- பால் + தமிழ் – பால் போன்று தூய்மையிலும் சுவையிலும் தன்மையிலும் இயற்கையானது

32)பாகுதமிழ்:- வெம்மையிலும் வெல்லம் உருகிப் பாகாகி மிகுசுவை தருவது போன்று, காய்தலிலும் கடிதலிலும் நயம் குறையாதது

33)நற்றமிழ்:- நன்மை + தமிழ் – இனிய, எளிய முறையில் எழுதவும் கற்கவும் பேசவும் கருவியாகி நன்மைகள் விளையத் துணைபுரிவது

34)நாடகத்தமிழ்:- முத்தமிழுள் ஒன்று – நாடகத்தின் மெய்ப்பாடுகளை நுட்பமாய் உணர்த்தும் சொல்வளமும் பொருள்வளமும் ஒலிநயமும் நிறைந்தது

35)மாத்தமிழ்:- மா – பெரிய – பெருமைமிக்க தமிழ் (மங்கலப் பொருளுணர்த்தும் உரிச்சொல் மா)

36)முத்தமிழ்:- இயல், இசை, நாடகம் என முத்திறம் கொண்டு அமைந்த தமிழ்

37)வண்டமிழ்:- வண்மை + தமிழ் (வளஞ்செறிந்த தமிழ்)

38)வளர்தமிழ்:- காலந்தொறும் வளர்ந்துகொண்டே வரும் தமிழ்

தரவு: பேராசிரியர் முனைவர் இ.மறைமலை

7 comments:

  1. தமிழுக்கு இத்தனை அணிகலன்களா...படிக்கவே சுவைக்கிறது. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. இனிய நண்பர் சுப.நற்குணன் அவர்களே...!
    அன்னைத் "தமிழுக்கு" இத்துணை அணிகலன்களா..! முற்றிலும் பரவசமாய் இருந்தது..!!
    வாழ்க தமிழ்... வெல்க தமிழ்..!!

    இனிய வாழ்த்துகளுடன்,

    சந்திரன் இரத்தினம்,
    ரவாங், சிலாங்கூர்.

    ReplyDelete
  3. தமிழுக்கு இருக்கும் சிறப்புகளை அளவிட முடியாது. அதற்கு, தமிழின் சிறப்பு அடைமொழிகள் ஒரு நல்ல சான்றாகும். தமிழின் அடைமொழி களைத் தனித்தனியாகப் படித்து இருந்தாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது வியந்து போவதைத் தவிர வேறு என்ன செயவது என்று எனக்குத் தெரியவில்லை. நல்ல தொகுப்பை வழங்கிய நண்பர் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  4. *இனியவள் புனிதா.. நன்றி!

    *இனிய நண்பர் சந்திரன்,
    உங்கள் மறுமொழிகள் எனக்கு மேலும் ஊக்கமூட்டுகின்றன. தொடர்ந்து எழுதுங்கள்.

    *ஐயா இளையவேல்,
    கிட்டதட்ட என்னுடைய அனைத்து இடுகைகளுக்கும் தொடர்ந்து மறுமொழி எழுதிவரும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். தங்களின் அன்பில் நெகிழ்ந்து போகிறேன். தங்களின் வற்றாத அன்பிற்கும் மாறாத தமிழ்ப் பற்றுக்கும் எனது தலைதாழ்ந்த வணக்கங்கள்.

    ReplyDelete
  5. தமிழின் இனிமை என்றும் மாறாத இளமை.அந்த இளமைக்கு இனிமை சேர்த்திடும் உங்களின் அகர வரிசை.அற்புத தொகுப்பு அய்யா.தமிழரின் மீள் பார்வக்கு மிகவும் தேவை, தமிழரின் இல்லத்தில் இருக்கவேண்டிய படைப்பு.

    ReplyDelete
  6. iniya nanbar suba.narkunan
    avarkale:
    thankal katturai arumai. aayinum ondrai sollaamal irikka mudiyavillai. athu enna ellorum ilakkiyaththai mattume maiyap paduththi ezhuthukireerkal? Thanmizh oru thani inam endraal athu ellath thuraikalilul munnodiyaka irukka vendum. ilakkiyam thaandi, maruththuvam, kattidam, varththakam, kattumaanam endu. unmaiyil ithil ellavtrilume Thamizharkal chiranthu irunthu irukkirrakal. maruththuva Thamizh (siddha maruththuvam) oru thani ilakkiyame. aaka ellvatraiyum thaankal matravarkalukku theriya seyal padunkal. naan tharpothu maruththuva paadalkalai aangilaththil mozhi peyarththu thamizh maruththuva moolikaikalip patri nool veliyuttullen. athai
    www.thesiddhamedicine.com endra valai thalaththil paarunkal. Thamizhukkaaga sernthu poraduvom.
    nandri
    Dr.J.Raamachandran

    ReplyDelete
  7. >திருத்தமிழ் அன்பர் மருத்துவர் ஐயா இராமசந்திரன் அவர்களே,

    தங்களின் வருகையில் மிகவும் மகிழ்கிறேன் - நன்றி மொழிகிறேன்.

    தாங்கள் கூறியுள்ள கருத்தை முழுமையாக வழிமொழிகிறேன். தமிழ் எல்லாத் துறைகளிலும் வளர வேண்டும் - வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

    தாங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து துறைகளிலும் மிகச் சிறந்தவர்களாக நமது தமிழர்கள் இருக்கிறார்கள். அவரவரும் தத்தம் துறைகளில் தமிழுக்காகவும் தமிழை முன்படுத்தியும் செயல்பட வேண்டும்.

    அதற்கு, தமிழ் என்ற தாய்மொழிப் பற்றும் உணர்வும் கண்டிப்பாக வேண்டும்.

    தமிழரின் மருத்துவத்தை ஆங்கிலத்தில் பரவச் செய்யும் தங்களின் அரும்பணி பாராட்டுக்குரியது ஐயா.

    இவ்வாறே, பலரும் முனைந்து செயல்பட்டால், உலகம் விரைவில் தமிழைக் கண்டுகொள்ளும்.

    ReplyDelete

வணக்கம் திருத்தமிழ் அன்பர்களே. உங்கள் எண்ணங்களையும் ஏடல்களையும் இங்கே மறுமொழியாக இட்டுச்செல்லுங்கள். நன்றி.
அன்புடன்;
திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்