Thursday, June 19, 2008

தசாவதாரம்:- காட்சிகள் சொல்லும் கருத்துகள்


உலகத் தமிழ்த் திரைப்பட நேயர்களைப் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாக்கி, இப்போது திரைகண்டிருக்கும் ‘தசாவதாரம்’ திரைப்படத்தைப் பற்றி, ஆன்மிக வழிநடக்கும் ஒரு பகுத்தறிவாளனின் பார்வையை இங்கே பதிவு செய்கிறேன்.
அறிவியல் உலகில் 'கேயோசு கோட்பாடு' (Chaos Theory) எனச் சொல்லப்படும் கருத்தியலை விளக்கும் படமாக தசாவதாரம் உள்ளது. தமிழில் இதனை வண்ணத்துப் பூச்சி (Butterfly Effect)விளைவு என்கின்றனர். அதாவது, இப்போது நடக்கின்ற ஒரு பெரிய நிகழ்வுக்கு முன்பு எப்போதோ நடந்த ஒரு சிறிய நிகழ்வுதான் காரணம் என்பதே இந்த “வண்ணத்துப் பூச்சி விளைவு”க்கான விளக்கமாகும். ஒருவேளை இப்போது நடக்கின்ற ஒரு நிகழ்வுக்குத் தொடர்பாக முன்பு நடந்த எந்தவொரு நிகழ்வையும் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம். ஆனாலும், கண்டிப்பாக நேற்றைய ஏதோவொரு சிறு நிகழ்வுதான் இன்றைய மாபெரும் நிகழ்வுக்கு வித்தாக அமைந்திருக்கும் என இன்றைய அறிவியல் உறுதியாக நம்புகிறது. இதனையேதான், ஆன்மிகத்தில் பிறவி(விதி)ப்பயன் என்கிறோம்.

இந்தத் தெளிவோடு, தசாவதாரத்திற்கு வருவோம். 12ஆம் நூற்றாண்டில் பெருமாள் சிலை கடலில் வீசப்பட்ட நிகழ்வுக்கும் 21ஆம் நூற்றாண்டில் சுனாமி பேரலை ஏற்படும் நிகழ்வுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று கேட்டால், நிச்சயமாக தொடர்பு உள்ளது என்பதே விடையாகும். இதனைக் கடவுள் நம்பிக்கையாளர்கள் நம்புகிறார்களோ தெரியாது. ஆனால், அறிவியல் உலகம் முழுமையாக நம்புகிறது.

பெருமாள் சிலை கடலில் வீசப்பட்ட நிகழ்வுக்கும் சுனாமி பேரலை ஏற்படும் நிகழ்வுக்கும் தொடர்பு உள்ளதை ஆன்மிக உலகம் ஏன் ஏற்க மறுக்கிறது? காரணம், அந்தத் தொடர்பு அறிவுக்கு எட்டாத அளவுக்கு உள்ளது. ஆயினும், அறிவியல் உலகம் ஏன் ஏற்றுக்கொள்கிறது? காரணம், அந்தத் தொடர்பானது அறிவுக்கு எட்டுகின்ற அளவுக்கு உள்ளது. ஆயினும், அந்தத் தொடர்பானது கோவையாக விளக்கிச் சொல்லமுடியாத அளவுக்கு ஒழுங்கற்று இருக்கிறது.

இப்படியேதான், நம் கண்முன்னே நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் கடந்த காலத்தின் நிகழ்வொன்று காரணமாக உள்ளது. அதற்கான, சரியான காரண காரியத்தைச் சான்றுகளோடு விளக்கிச் சொல்லவும் முடியாது என்பதை ஆன்மிக, அறிவியல் பார்வையோடு கூறும் படம்தான் தசாவதாரக் கதை. இதனை விளக்கத்தான், படத்தின் தொடக்கத்திலும் பின்னர் மீண்டும் இறிதியிலும் சிறகடித்துப் பறக்கும் வண்ணத்துப் பூச்சி காட்டப்படுகிறது. இப்படியாக, புரிந்துகொள்ள சிரமமாக இருக்கின்ற ஆன்மிக, அறிவியல் கோட்பாட்டை விளக்கும் வகையில் தசாவதாரக் காட்சிகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. இவை, ஒரு புறம் இருக்க, இதனையும் தாண்டி மற்றொரு கோணத்தில் என்னுடைய பார்வையைத் திருப்பிச் சிந்தித்ததன் விளைவுதான் தொடர்ந்து நீங்கள் படிக்கப்போகும் செய்திகள்.

கடவுள் சத்தி வாய்த்தவர்; கடவுள்தான் அனைத்தையும் இயக்குகிறார்; கடவுளை யாரும் அழித்திட முடியாது; கடவுள் நின்று கொள்ளும்; கடவுளை நம்பினோர் கைவிடப்படார்; இறுதியில், நன்மைகளைக் கொடுக்க இறைவன் சில சிறிய சோதனைகளை ஏற்படுத்துவார்..! படத்தைப் பார்த்து முடிக்கும் தருவாயில் இப்படிப்பட்ட எண்ணங்கள்தாம் முதலில் அனைவருக்கும் ஏற்படுகிறது.

ஆனால், மேலே சொன்ன அத்தனை ஆன்மிகக் கருத்துகளும் படத்தில் வெளிப்படையாகத் தெரிபவை மட்டுமே! இதற்கும் அப்பால், மிகப் புரட்சிகரமான பகுத்தறிவுச் சிந்தனைகள் இப்படத்தில் சொல்லப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். சுருக்கமாகச் சொன்னால், இப்படம் ஆன்மிகப் பூச்சுப்(முலாம்) பூசிய ‘பக்கா’ பகுத்தறிவுப் படம் எனலாம்.

என்னுடைய பார்வையில், தசாவதாரம் சொல்லவரும் முகமைக்கருத்து கடவுளும் உயிர்க்கொல்லும் கிருமியும் ஒன்றுதான். இவை இரண்டுமே மனிதக்குலத்தை அழித்துவிடும் ஆற்றல் கொண்டவை. ஆகவே, இவை இரண்டையும் அழித்திட வேண்டும். இதில் குறைபேறு(துரதிர்ஷ்டம்) என்னவென்றால், எப்படிபட்ட சத்திவாய்ந்த கிருமியைக்கூட அழித்துவிடலாம். ஆனால், கடவுளை அழிக்க முடியாது. எது எப்படி இருந்தாலும், இயற்கை என்று ஒன்று உண்டு. அது தன்னுடைய வேலையை எந்தவித விருப்பு வெறுப்பு இல்லாமல் மிக மிக நீதியாகச் செய்துவருகிறது. அந்த இயற்கை தனக்கு உடன்பாடாகச் செயல்படும்போது மனிதன் “கடவுள் உண்டு” அல்லது “கடவுள் அருள்கிறார்” என்கிறான்; இயற்கை தனக்கு எதிர்மறையாகச் செயல்படும்போது மாந்தன் “கடவுள் இல்லை” அல்லது “கடவுள் தண்டிக்கிறார்” என்கிறான். ஆகவே, மாயையாகிய கடவுள் சிந்தனையை விட்டுவிட்டு இயற்கையோடும் மனித நேயத்தோடும் மக்கள் வாழ முற்படவேண்டும். அப்போதுதான் உலகம் நல்வாழ்வுக்கு உரிய இடமாக இருக்கும்.

என்னுடைய இந்தப் பார்வை, பலருக்குக் குழப்பத்தை ஏற்படுத்தலாம். அவ்வாறு குழம்புகின்றவர்களுக்கு சான்றுகளும் ஆதாரங்களும் காட்டி விளக்கவேண்டியது என்னுடைய கடமையாகும். ஆகவே, என்னுடைய பார்வைக்கான சான்றுகள் இதோ:-


1. படத்தின் முதல் காட்சியிலேயே, சைவம் - வைணவம் ஆகிய இருபெரும் சயங்களுக்கு இடையில் ஏற்படும் போராட்டம் காட்டப்படுகிறது. சிவன் - திருமால் ஆகிய இரு கடவுளர்களில் எந்த கடவுள் பெரியவர் என்ற போராட்டத்தில் மனித இனம் போராடி மடிந்துபோகிறது. கடவுள் நம்பிக்கையால் அழிவுகள் ஏற்படுவது மிகப் பழங்காலத்திலேயே தொடங்கிவிட்டது என்ற கருத்தைப் பறைசாற்றுகிறது முதல் காட்சி.

2. இரண்டாவது காட்சியில், அறிவியலாளர் கமல் கண்டுபிடிக்கும் உயிரியல் அழிவியை(கிருமி) இனிப்பு(சாக்லேட்டு) என நம்பி தின்றுவிடும் ஒரு குரங்கு எவ்வாறு துடிதுடித்துச் சாகிறது என்று காட்டப்படுகிறது. முதலாவது, காட்சியில் கடவுளை ஏற்றுக்கொண்டதால் பத்தன் இறக்கிறான். அடுத்தக் காட்சியில், கிருமியை உட்கொண்டதால் குரங்கு இறக்கிறது. “கடவுள்” என்ற நம்பிக்கையால் அழிவு ஏற்படும் எனச் சொல்லப்பட்ட அதே கருத்து, இப்போது கிருமியின் வழியாக மேலும் விளக்கப்படுகிறது.

3. அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட உயிரியல் அழிவி, பிறகு இந்தியாவுக்குள் நுழைந்து, மூதாட்டி கமலின் கைக்குப் போய் பிறகு திருமால் சிலைக்குள் புகுந்துகொண்டு சுற்றிவருகிறது. அந்தப் பெருமாள் சிலைக்காக நடிகை அசின் காடுமேடு எல்லாம் ஓடி உயிரைப் பணயம் வைத்துத் துரத்துகிறார். இப்படியேதான், கொலைவெறி பிடித்த வெள்ளைக்கார கமலும் கிருமிக்காக உயிரைக்கொடுத்து போராடுகிறார். இந்தத் துரத்தலிலும் போராட்டத்திலும் படுபயங்கரச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. முன்பின் சிந்திக்காமல் கடவுளை(கிருமி) நம்பி ஓடுபவர்கள் பெரும் சிக்கல்களில் மாட்டிக்கொள்கிறார்கள் என்பதே மேலே சொன்ன அத்தனைக் காட்சிகளும் உணர்த்தும் கருத்துகளாகும்.

4. இறுதிக் காட்சியில், கிருமியைக் கொல்ல சுனாமி பேரலை எழுந்துவருகிறது. கிருமியோடு சேர்த்து ஆயிரமாயிரம் மக்களையும் சுனாமி அழித்துப்போகிறது. அந்தச் சுனாமியால், 12ஆம் நூற்றாண்டில் கடலில் வீசப்பட்ட திருமாள் சிலை மீண்டும் கரைகாண்கிறது. எவராலும் அழிக்க முடியாத கிருமியைக்கூட அழித்துவிடலாம். ஆனால், கடவுளை அழிக்க முடியாது. கிருமியால் வந்த ஆபத்து முடிந்துவிட்டது. ஆனால், கடவுளால் இன்னும் ஆபத்துகள் தொடரவுள்ளன என்ற கருத்தை இக்காட்சிகள் சொல்கின்றன.

5. கரை ஒதுங்கும் சிலையருகில் பேசப்படும் "கடவுள் இல்லை என்று நான் சொல்லவில்லை; கடவுள் இருந்தால் நல்லாயிருக்கும் என்றுதான் சொல்கிறேன்" என்ற கமலின் உரையாடல் எண்ணிப்பார்க்க வேண்டிய ஒன்று. "கடவுள் இல்லை என்பதும்", "கடவுள் இருந்தால் நல்லாயிருக்கும்" என்பதும் ஒரே பொருளைத்தான் குறிக்கின்றன. இந்தக் கருத்தை வலியுறுத்தும் வகையில் இன்னும் சில காட்சிகளில், கடவுள் உண்டா? இல்லையா? எனும் கேள்வியைப் படம் பார்ப்பவர் சிந்தனைக்கே விட்டுள்ளனர்.

6. பெருமாள் ஊர்வலத்தில், மல்லிகா செராவத்து கோவிந்து கமலைக் கொல்ல பாய்ந்தோடும் போது கமலைக் காத்தது கடவுளா? யானையா?

7. புலனாய்வு அதிகாரி கமலின் கட்டளைக்கு உட்பட்டு பள்ளிவாசளுக்குள் இருந்த மக்கள் சுனாமியிலிருந்து உயிர்ப்பிழைத்துக் கொள்கின்றனர். இதற்குக் காரணம் கடவுளா? புலனாய்வு அதிகாரியா?

8. அதேபோல், தலித் கமலிடமிருந்து சிலுவையைப் பரிசாகப் பெறும் சிறுவன் பிழைத்துக் கொள்கிறான். அவனைப் தப்பிக்கக் காரணம் கடவுளா? பூவராகனா?

9. பாடகராக வரும் சர்தார் கமலுக்குத் தொண்டையில் புற்றுநோய். ஒரு காட்சியில், தன்னுடைய நோய் தீர அவர் கடவுளிடம் மன்றாடுகிறார். இறுதியில், அவரைக் கொல்லும் நோக்கத்தில் கொலைவெறியன் கமல் துப்பாக்கியால் சுடுகின்றான். ஆனால், அந்தத் துப்பாக்கிக் குண்டு புற்றுநோய்கண்ட இடத்தில் பாய்ந்ததால் சர்தார் கமல் உயிர் பிழைத்துக் கொள்கிறார். இதற்குக் காரணம் கடவுளா? கொலைவெறியனா?

10. ஆழிப்பேரலை சுனாமி உருவாகிக் கிருமியை அழிக்கிறது. இதற்குக் காரணம் கடவுளா? வண்ணத்துப் பூச்சி விளைவுக் கோட்பாடா?

11. சுனாமி காட்சியும் சுனாமிக்கு இடையில் ஒரு வண்ணத்துப்பூச்சி சிறகடித்துப் பறக்கும் காட்சியும் இயற்கையின் பேராற்றலை உணர்த்துவனவாக உள்ளன. அதாவது, இயற்கை எப்போதும் விருப்பு வெறுப்பு இல்லாத ஒரே நிலையில் இருந்துவருகிறது. இயற்கை எல்லாருக்கும் பொதுவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற கருத்தைச் சுனாமியால் கொடியவர்களோடு சேர்ந்து நல்லவர்களும் இறந்துபோகும் காட்சி விளக்குகிறது.

12. இறுதிச் சண்டைக் காட்சியில், சுனாமி வரப்போவதை முன்னறிந்து வானத்தில் பறவைகள் கூட்டமாக பறந்துபோகின்றன. உலகில், விலங்குகள்கூட இயற்கையின் நிகழ்வுகளைப் புரிந்து நடந்துகொள்கின்றன. ஆனால், ஆறரிவு மனிதனோ உலகியல் தேவையை மட்டுமே முன்படுத்தி வாழ்வதால் இயற்கையின் நிகழ்வுகளை அறியமுடியாமல் இருக்கிறான். பேராசையாலும் பகையுணர்ச்சியாலும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு சாகிறான். ஒரு உயிரை அழிப்பதற்காக நாடுவிட்டு நாடு செல்கிறான்; கண்டம் விட்டு கண்டம் போகிறான்; ஒருநாட்டிலிருந்து (சப்பான்) நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு (இந்தியா) வந்து வேறொரு நாட்டினனை (ஆங்கிலேயன்) கொல்லுவும் துடிக்கிறான்.

13. இப்படி, கொலையுணர்ச்சி கொண்டவர்கள்கூட கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்ற கருத்தையும் இறுதிக் காட்சியில் சப்பான் நாட்டுக் கராத்தே வீரன் கமல் கடலை வணங்கும் காட்சியில் காட்டப்படுகிறது.

14. முன்பின் அறிந்திராத பூவராகன் கமலைத் தன்னுடைய மகன் என்று நம்பி மூதாட்டி கமல் கதறி அழும் காட்சி; தன்னுடைய பகைவனின் குழந்தையாக இருந்தபோதிலும் அந்தச் சிறுவனின் உயிரைக் காப்பாற்றி பூவராகன் கமல் தன்னுயிரை விடுகின்ற காட்சி; அன்பிற்குரிய மனைவிக்காகப் பாடகர் சர்தார் கமல் தான் உயிராக மதிக்கும் இசையை அல்லது பாடுவதை விட்டுவிட துணியும் காட்சி; மனிதக்குலத்தை அழிக்கக்கூடிய உயிரியல் கிருமியை அறிவியலான் கமல் அழித்துவிட துடிக்கும் காட்சி ஆகிய காட்சிகள்வழி மனிதநேயத்தின் மாண்பு சொல்லப்படுகிறது; அன்புணர்ச்சியின் அருமை காட்டப்படுகிறது. மொழி, இனம், சமயம், நாடு என அனைத்தையும் கடந்து நிற்பது அன்பு ஒன்றே என வலியுறுத்தப்படுகிறது.

ஆத்திகம் பேசும் அடியாருக்குச் சிவமே அன்பாகும்!
நாத்திகம் பேசும் நல்லவருக்கு அன்பே சிவமாகும்!

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு (தமிழ்மறை அதி:8 குறள்:72)

இறுதியாக, இந்தக் கட்டுரையைப் படிக்கும் அன்பர்கள் தங்களின் மறுமொழிகளை மறவாமல் தெரிவிக்க வேண்டுகிறேன்.

23 comments:

  1. Anonymous20 June, 2008

    மாறுபட்ட ஆய்வாக உள்ளது.

    ReplyDelete
  2. ஐயா நற்குணன் அவர்களுக்கு கனிந்த வணக்கங்கள். நான் இதுவரை படித்த தசாவதார படத்தின் கட்டுரைகளிலேயே, தங்களுடைய கட்டுரைதான் படத்தின் கருத்துக்களை ஆழமாகக் கண்டறிந்து அலசியுள்ளது. (Chaos Theory) இதன் சரியான உச்சரிப்பு 'கேயோசு தியாரி', வண்ணத்துப் பூச்சி விளைவை ஆங்கிலத்தில் (Butterfly Effect) என்றும் கூறுவர். இந்தப் பெயரை தலைப்பாகக் கொண்ட ஓர் ஆங்கிலத் திரைப்படமும் உண்டு.

    சமய முலாம் பூசிய பக்கா பகுத்தறிவு புகட்டும் திரைக்காவியம் என தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை.

    பலரும் கதைகளில் வரும் பத்து வேடங்களையும், படத்தின் தொழில்நுட்பக் கையாடல்களையும் கவனித்தார்களேத் தவிர, தங்களைப் போல் கதைக் கருவை ஆராய்திருபார்களா என்று தெரியவில்லை.

    கதைக் கரு விளங்காதவர்களுக்கு உங்களுடைய கட்டுரை ஒரு வரப்பிரசாதமாகும்.

    ReplyDelete
  3. சிறப்பான ஆய்வாக இருக்கிறது ஐயா... ஒவ்வோரு விடயத்தையும் துள்ளியமாக சலித்து கொடுத்து இருக்கிறீர்கள்... நான் படித்த விமர்சனங்களில் இது என்னை பிரமிக்க வைத்தது... மிக்க நன்றி...

    ReplyDelete
  4. Anonymous21 June, 2008

    படத்தின் தொழில்நுட்ப பிரமிப்பை விஞ்சி நிற்கிறது தங்களின் இந்த ஆய்வு.
    நானும் இது ஏதோ சாதிய உணர்வை மேலுயர்த்தும் படமோ என்று வருந்தினேன். உலக நாயகன் நன்றாகவே போட்டு வாங்கி இருக்கிறார் என்பது உம்மைப் போன்றோர் சொல்லித்தான் விளங்குகிறது.
    நன்றியும் வாழ்த்துக்களும் ஐயா!

    இனியன்,
    பினாங்கு

    ReplyDelete
  5. இனிய நண்பர் சதீசு குமார் அவர்களே, தங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி. Chaos Theory என்பதன் சரியான உச்சரிப்பு 'கேயோசு தியரி' அல்லது 'கேயோசு கோட்பாடு' என சுட்டிக்காட்டிய தங்களுக்கு நன்றி. தாங்கள் சொல்வது சரியே!

    அருமை நண்பர் விக்கினேஸ் அவர்களே,
    முதலில், 'திருத்தமிழ்' வலைப்பதிவுக்குத் தங்களை வரவேற்கிறேன். தங்களின் பாராட்டுரைக்கு நன்றி.

    இனிய நண்பர் இனியனார் அவர்களே,
    வருக.. வருக! உங்கள் கருத்துகளைத் தொடர்ந்து தருக.. தருக..!

    ReplyDelete
  6. உங்கள் பதில் பின்னூட்டத்திற்கு நன்றி... உங்கள் தளம் அருமை.. மேலும் பல மலேசிய தமிழ் வலைபதிவர்கள் வளரவும் தமிழ்மண திரட்டியை போல் நம் மலேசிய பதிவர்கள் சுதந்திர கருத்து பரிமாற்றங்களை பகிர்ந்துக் கொள்ளவும் எந்த வகையில் நாம் முயற்சிக்கலாம்..

    என்னை போன்ற புதிய வலைபதிவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன? நாம் நம் நாட்டில் தமிழ் பதிவர் சந்திப்பு பர்ட்டறையை எற்படுத்த வாய்ப்பு உள்ளதா.. உங்களை போன்ற மூத்த எழுத்தாளர்களின் ஊக்குவிப்பு வளரும் தலைமுறையினருக்கு அவசியம்..

    என் வலை பக்கம் வருகை தந்து உங்கள் கருத்துக்களை கூறவும்
    http://vaazkaipayanam.blogspot.com/

    ReplyDelete
  7. உங்கள் பதில் பின்னூட்டத்திற்கு நன்றி... உங்கள் தளம் அருமை.. மேலும் பல மலேசிய தமிழ் வலைபதிவர்கள் வளரவும் தமிழ்மண திரட்டியை போல் நம் மலேசிய பதிவர்கள் சுதந்திர கருத்து பரிமாற்றங்களை பகிர்ந்துக் கொள்ளவும் எந்த வகையில் நாம் முயற்சிக்கலாம்..

    என்னை போன்ற புதிய வலைபதிவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன? நாம் நம் நாட்டில் தமிழ் பதிவர் சந்திப்பு பர்ட்டறையை எற்படுத்த வாய்ப்பு உள்ளதா.. உங்களை போன்ற மூத்த எழுத்தாளர்களின் ஊக்குவிப்பு வளரும் தலைமுறையினருக்கு அவசியம்..

    என் வலை பக்கம் வருகை தந்து உங்கள் கருத்துக்களை கூறவும்
    http://vaazkaipayanam.blogspot.com/

    ReplyDelete
  8. உயிரியல் ஆயுதங்களின் வழியும், கடவுட் கொள்கைகளில் புகுத்தப்படும் வெறித்தனங்களாலும் மனித குலம் நாசப்படுவதை திறம்பட மக்களுக்கு இத்திரைப்படம் சித்தரித்துக் காட்டியுள்ளது.

    இப்படத்தில் இடம்பெறும் முதல் காட்சியானது வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒரு சம்பவமாகும். சைவ சமயத்தைத் தழுவிய குலோத்துங்க சோழன் திருமால் சிலையை கட்டி கடலில் வீசிய சில நாட்களில் கிருமி (வைரஸ்) நோய் உடலில் பரவி அவதிபட்டு இறந்தான்.

    அதனால் குலோத்துங்கனுக்கு 'கிருமி கண்ட சோழன்' என்ற மற்றொரு பெயரும் உண்டாயிற்று. இப்படத்தில் கிருமி கண்ட சோழனுக்கும், கிருமிகளை ஆயுதமாகப் பயன்படுத்தும் தீவிரவாதிகளுக்கும் ஒரு முடிச்சை போட்டிருப்பது அருமை.

    ReplyDelete
  9. Anonymous23 June, 2008

    இந்தப் படத்தைப் பற்றி இப்படியும் சிந்திக்க முடியுமா? என வியப்பாக உள்ளது. ஒரு வேளை படம் மிகவும் விறுவிறுப்பாக செல்லுவதால் என்னால் படத்தின் கருத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது போல தெரிகிறது. இருந்தாலும், ஒரு மாறுபட்ட விமர்சனத்தை வழங்கி உள்ளீர்கள்.

    ReplyDelete
  10. Anonymous24 June, 2008

    ஐயா அவர்களுக்கு வணக்கம்.கமலனின் ரசிகனான நான் இப்படத்தை பொழுது போக்கிற்காக பார்க்க சென்றேன். ஆனால், இப்படத்தில் இம்மாதிரியான கருத்து உள்ளதா என்று ஆச்சிரிய படுகிறேன். உங்களின் விமர்சனத்தைப் படித்தவுடன் நான் இப்படத்தைத் திரும்பவும் குடும்பத்துடன் பார்க்க உள்ளேன். உங்களின் விமர்சனத்தைக் கண்டிப்பாக நாளிதழில் வெளியேடு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.ஏன்னென்றால், இப்படத்தின் கருத்தை அறியாதவர்கள் பலர், இப்படத்தைப் பற்றி தவறான செய்திகளை வெளியீடு செய்கின்றனர்.அவர்களுக்குத் தெளிவு பெறவே நான் இவ்விமர்சனத்தை நாளிதழில் வெளியீடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

    ReplyDelete
  11. நற்குணன் ஐயா

    புதிய கோணத்தில் இப்படத்தை அணுகியுள்ளீர்கள்... கமலின் இப்படம் ஒரு கவிதையை போல ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக பாதிக்கிறது போல தெரிகிறது....

    நல்ல சிந்தனை...

    ஆன்மீகம் என்பதே ஒழுங்கின்மை கோட்பாட்டுக்கு ஒரு ஒழுங்கை அமைக்கும் முயற்சியே... ஆன்மீகத்துக்கு ஆத்திகம், நாத்திகம் கிடையாது என்பதை நான் உணர்ந்துள்ள படியால் கமலின் இந்த முயற்சியை நான் உளமாற பாராட்டுகிறேன்.

    தங்களின் இந்த வித்தியாசமான அணுகுமுறைக்கு பாராட்டுக்களும், நன்றியும்......

    ReplyDelete
  12. நற்குணன் ஐயா

    புதிய கோணத்தில் இப்படத்தை அணுகியுள்ளீர்கள்... கமலின் இப்படம் ஒரு கவிதையை போல ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக பாதிக்கிறது போல தெரிகிறது....

    நல்ல சிந்தனை...

    ஆன்மீகம் என்பதே ஒழுங்கின்மை கோட்பாட்டுக்கு ஒரு ஒழுங்கை அமைக்கும் முயற்சியே... ஆன்மீகத்துக்கு ஆத்திகம், நாத்திகம் கிடையாது என்பதை நான் உணர்ந்துள்ள படியால் கமலின் இந்த முயற்சியை நான் உளமாற பாராட்டுகிறேன்.

    தங்களின் இந்த வித்தியாசமான அணுகுமுறைக்கு பாராட்டுக்களும், நன்றியும்......

    ReplyDelete
  13. திருத்தமிழ் அன்பர் மாயன் அவர்களே,
    தங்களின் மறுமொழி கண்டதில் மிக்க மகிழ்ச்சி.

    இறைமைக் கோட்பாடு ஒழுங்கின்மைக் கோட்பாட்டுக்கு உட்பட்டது என்ற கருத்தியலை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு உலகம் இன்னும் பக்குவப்படவில்லை. ஆன்மிகத்திற்கு ஆத்திகம் நாத்திகம் என எதுவும் கிடையாது என்ற தங்களின் கருத்த வழிமொழிகின்றேன்.

    இன்னும் சொல்லப்போனால், ஆத்திகம் நாத்திகம் என்பது கடவுளை நம்புவதும் நம்பாததும் அன்று. மாறாக, ஆரிய வேதத்தை நம்புவதும் நம்பாததும் ஆகும் என ஒரு நூலில் படித்துள்ளேன். விவரம் அறிந்தவர்கள் மறுமொழி கூறலாம்.

    இணையத்தின் வழி இனிய நட்பைப் பேணுவோம்.

    ReplyDelete
  14. Anonymous25 June, 2008

    வணக்கம். உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். எந்த மறுப்பும் இல்லை.ஆனால் திருமாள் சிலைக்கும் சுனாமிக்கும் உள்ள தொடர்பு புரியவில்லை.முன் வினைக் கருமம் பின் தொடரும் என்பதில் நம்பிக்கை உண்டு. என்றோ எழும்பிய கேள்விக்கு என்றாவது விடை கிடைக்கும் என்பதிலும் நம்பிக்கை உண்டு. வண்ணத்துப் பூச்சி கோட்பாடு பற்றி மேலும் அறிய ஆவலாக உள்ளது.

    திருத்தமிழ் வழி எனக்குத் தெரியாத பல விசயங்களை அறிந்துகொள்கிறேன். நண்பர்களுக்கும் அறிமுகம் செய்கிறேன். உங்கள் சேவை தொடர வேண்டும் என்பது என் கோரிக்கை. நன்றி.

    அன்புடன்,
    திருமதி.திருமணி
    பினாங்கு

    ReplyDelete
  15. Anonymous26 June, 2008

    தங்களுடைய விமர்சனம் முற்றிலும் மாறுபட்டு தனித்தன்மையுடன் விளங்குகிறது. எனக்குக்கூட கமல் என்ன பகுத்தறிவு என்ற பெயரில் சமய சாயம் பூச துடிக்கிறார் என்று எண்ணத் தோன்றியது. ஆனால் இந்தக் கட்டுரையைப் படித்தப் பிறகு மற்றது விளங்கியது.

    ReplyDelete
  16. Anonymous26 June, 2008

    //வண்ணத்துப் பூச்சி கோட்பாடு பற்றி மேலும் அறிய ஆவலாக உள்ளது.//

    எனக்கும் அதே ஆவல் உள்ளது... விளக்குவீர்களா? அல்லது இது பற்றிய விளக்கங்களை ஏதாவது புத்தகத்தில் கிடைக்குமா...

    ReplyDelete
  17. திருமதி திருமணி, இனியவள் புனிதா ஆகிய இருவரும் 'வண்ணத்துப் பூச்சி விளைவு' பற்றி மேல் விளக்கம் கேட்டுள்ளீர்கள்.

    இங்கே மறுமொழி எழுதியுள்ள மாயன் அவர்களின் "மாயன் பார்வை" வலைப்பதிவைப் பார்வையிடவும். கூடுதல் விளக்கம் கிடைக்கும்.

    ReplyDelete
  18. Anonymous05 July, 2008

    தங்களின் தசாவதாரம் பற்றிய கட்டுரை படித்தேன். மிக அருமையான கருத்துகள். படம் பார்க்கும்போது இந்த அளவுக்குக் கருத்தூன்றி சிந்திக்கவில்லை. இந்தப் பக்கா பகுத்தறிவுப் படத்தை மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது தங்களின் விமர்சனம். கமலின் தீவிர இரசிகை என்ற வகையில், மற்றவர்களோடு இந்தப் படத்தின் உண்மையான உட்கருத்தை பகிர்ந்துகொள்ள முடிகிறது. அருமையான சிந்தனை.நன்றி.

    இக்கண்,
    திருமதி.சகுந்தலா,
    பாரிட் புந்தார், பேரா.

    ReplyDelete
  19. தசாவதாரம் படத்தைப் பற்றிய கட்டுரை என்பதால் (இப்படத்தைப் பற்றி பலரும் தங்கள் வலையில் எழுதுவதைப் பொழுதுபோக்காகச் செய்துவருகிறார்களே இவருமா? என்று) உங்களைத் திட்டலாம் என்றுதான் படிக்கத் துவங்கினேன். ஆனால் எத்தனை அருமையான கட்டுரை.

    இப்படத்தை நான் தியேட்டரில் சென்று பார்க்கவில்லை. அதனால் படத்தின் கதையை டிவிடியில் பார்த்து ஓரளவே புரிந்து கொள்ள முடிந்தது. தங்களின் தட்டுரையிலுள்ள சிலகருத்துக்கள் நான் முன்பே ஒருவாறு புரிந்து கொண்டவைதான் எனினும் தாங்கள் விரிவாக அழுத்தமாக அறிவியல் பார்வையோடு அளித்துள்ள விளக்கம் என்னை மெய்மறக்கச் செய்கிறது.

    கோயேசு கோட்பாடு எனக்கு அவ்வளவாக விளங்கவில்லை. நீங்கள் அடுக்கியிருக்கும் கருத்துக்களும் வினாக்களும் மிகஅருமை. தசாவதாரம் படத்தை இதுவரை பார்க்காதவர்கள் பார்க்கவிரும்பினால் முதலில் உங்களின் இக் கட்டுரையைப் படித்துவிட்டுச் சென்று படம் பார்ப்பது நன்று எனக்கருதுகிறேன். அத்துணைத் துள்ளியமான தகவல்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. எப்பிடி இப்பிடி லூசுதனம யோசிக்க தோணுது?.... கடவுள், கிருமி...ஒரே பிதற்றல்....

    ReplyDelete
  21. மிகவும் வித்தியாசமான விமர்சனம் !!!!

    ReplyDelete
  22. a very good tesis aiya...arai veekkaadugal taan pitatral endru kuurum....iyarkaiyai patri niinggal kuuriyatu mikavum unmai...todaraddum unggal seevai tamil ulagukku....

    ReplyDelete
  23. migaum pudumai. padathai marubadi parkka thondrugirathu . Iya , kamal avargalukke inda katturai theriyuma? avarukku thapalil anuppungal. idai paditthal inda padathai oscar vittuvttargale enrum thonrugirathu . miga nanru

    ReplyDelete

வணக்கம் திருத்தமிழ் அன்பர்களே. உங்கள் எண்ணங்களையும் ஏடல்களையும் இங்கே மறுமொழியாக இட்டுச்செல்லுங்கள். நன்றி.
அன்புடன்;
திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்